பஞ்சாபில் ஃபதேகர் சாஹிப் தொகுதி பாஜக வேட்பாளர் கெஜராம் வால்மீகிக்கு ஆதரவாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது: பஞ்சாபில் உள்ள ஆளும் கட்சி என்ன செய்துகொண்டிருக்கிறது என்பது பற்றி அதிகம் சொல்லத்தேவையில்லை. இதே கட்சிதான் டெல்லியிலும் ஆட்சி செய்கிறது. அக்கட்சியின் தலைவர் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிறை சென்றார்.
முறைகேடு குற்றச்சாட்டில் ஒரு தலைவர் சிறைசென்றால், அந்த குற்றச்சாட்டில் இருந்து விடுபடும் வரைஅவர் தனது பதவியை தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்ய வேண்டும். அதுதான் ஒழுக்கம். ஆனால் மதுபான ஊழல்வழக்கில் சிறை சென்ற கேஜ்ரிவால், முதல்வர் பதவியில் தொடர்வதாக கூறுகிறார். சிறையில் இருந்து பணியாற்றுவதாக அவர் கூறுகிறார். அலுவலகத்திலிருந்து பணி செய்வது, வீட்டிலிருந்து பணி செய்வதை நான் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால், சிறையில் இருந்து பணி செய்வதை முதல்முறையாக இப்போதுதான் கேள்விபடுகிறேன்.
கேஜ்ரிவால், அன்னா ஹசாரேவுடன் இணைந்து பேராட்டத்தில் ஈடுபட்டபோது, அந்த இயக்கம் காங்கிரஸ் கட்சியின் ஊழலுக்கு எதிரானது. அதன் வெற்றியை அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்தக் கூடாது, அரசியல் கட்சியாக நாம் மாறக்கூடாது என கேஜ்ரிவாலிடம், அன்னா ஹசாரே கூறினார்.
ஆனால், தனது குருவின் பேச்சை கேஜ்ரிவால் கேட்காமல் ஆம் ஆத்மி கட்சியை உருவாக்கினார். முதல்வரானால் , அரசு குடியிருப்பில் தங்கமாட்டேன் என கேஜ்ரிவால் கூறியிருந்தார். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் அரசுபணம் பல கோடியை செலவழித்து முதல்வர் இல்லத்தை மாளிகையாக மாற்றினார். முதல்வர் இல்லத்தில் அவரது கட்சி எம்.பிஸ்வாதி மாலிவால் கடுமையாக தாக்கப்பட்டார். இது பற்றி பதில்அளிக்காத கேஜ்ரிவால், தற்போது மக்கள் முன் உரையாற்றி வருகிறார். இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.