தற்போதுள்ள ‘சிறைச்சாலை சட்டம், 1894’ சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தைய சட்டம் என்பதோடு, கிட்டத்தட்ட 130 ஆண்டுகள் பழமையானது. இந்தச் சட்டம் குற்றவாளிகளைக் காவலில் வைப்பதிலும், சிறைகளில் ஒழுங்கை அமல்படுத்துவதிலும் மட்டுமே கவனம் செலுத்துகிறது. தற்போதுள்ள சட்டத்தில் கைதிகளின் சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்வுக்கான எந்த ஏற்பாடும் இல்லை. தற்போது சர்வதேச அளவில் சிறைகள் மற்றும் சிறைக் கைதிகள் பற்றிய கண்ணோட்டம் முற்றிலும் மாறியுள்ளது. சிறைச்சாலைகள் இன்று தண்டனைக்கான இடங்களாகக் கருதப்படுவதில்லை. மாறாக சிறைக்கைதிகளை சட்டத்தை மதிப்பவர்களாக மாற்றி மறுவாழ்வு அளிக்கப்படும் சீர்திருத்த நிறுவனங்களாகக் கருதப்படுகின்றன. சிறை நிர்வாகம் மற்றும் கைதிகள் நிர்வாகத்தின் பொறுப்பு மாநில அரசுகளிடம் மட்டுமே உள்ளது. இருப்பினும், குற்றவியல் நீதி அமைப்பில் திறமையான சிறை நிர்வாகம் வகிக்கும் முக்கிய பங்கைக் கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு உதவி செய்ய மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக, மத்திய உள்துறை அமைச்சகம் தற்போதுள்ள சிறைச்சாலைச் சட்டத்தின் பல குறைகளை சுட்டிக்காட்டி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வழிகாட்டுதலின் கீழ், காலனியாதிக்கக் காலத்தின் காலாவதியான சிறைச்சாலைச் சட்டத்தை, தற்போதைய நவீன தேவைகளுக்கு ஏற்ப மறுஆய்வு செய்யவும், திருத்தவும் முடிவு எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிறைச்சாலைகள் சட்டம் 1894ஐ திருத்தும் பணியை காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணியகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியது. இதனைத் தொடந்து உருவாக்கப்பட்ட வரைவில், சிறை நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், பெண்கள், திருநங்கைகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் போன்றவற்றைச் செய்தல் உட்பட தற்போதுள்ள சிறைச்சாலைச் சட்டத்தில் உள்ள இடைவெளிகளை முழுமையாக நீக்கும் வகையிலான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அமித் ஷாவின் வழிகாட்டுதலின் கீழ், உள்துறை அமைச்சகம் விரிவான ‘மாதிரி சிறைச்சாலைகள் சட்டம், 2023’ஐ இறுதி செய்துள்ளது.
பெண் கைதிகள், திருநங்கைகள் போன்றோருக்கு தனித் தங்குமிடம் வழங்குதல். சிறை நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் நோக்கில் சிறை நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடு. கைதிகள் மற்றும் சிறை ஊழியர்களுக்கு சிறைச்சாலைகளில் அலைபேசிகள் போன்றவற்றைப் பயன்படுத்தியதற்காக தண்டனைகளை வழங்குதல். நன்னடத்தையை ஊக்குவிக்கும் வகையில் கைதிகளுக்கு சட்ட உதவி வழங்குதல், பரோல் மற்றும் முன்கூட்டியே விடுதலை போன்றவற்றை வழங்குதல். கைதிகளுக்கு தொழில் பயிற்சி, திறன் மேம்பாடு மற்றும் அவர்களை மீண்டும் சமூகத்தோடு ஒருங்கிணைத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துதல் உள்ளிட்டவை புதிய சிறைச்சாலைகள் சட்ட வரைவில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்களாக உள்ளன.