சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், புதிய தொழில் துவங்கவும், ஏற்கனவே உள்ள தொழிலை விரிவாக்கம் செய்யவும், தமிழக அரசு, தலா, 1.50 கோடி ரூபாய் வரை மானியம் வழங்குகிறது. கொரோனாவுக்குப் பிறகு, தொழில் நிறுவனங்கள் முழுவீச்சில் செயல்படுவதால், மானியம் கேட்டு பல நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை சார்பில், நிறுவனங்களின் முதலீட்டை மேம்படுத்தவும், ஊக்குவிக்கவும், முதலீட்டு மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி, குறுந்தொழில் நிறுவனங்கள், மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் தொழில் துவங்கலாம்.
இதற்கு, இயந்திர தளவாடங்கள் மதிப்பில் அதிகபட்சம், 25 சதவீதம் அல்லது, 25 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பின்தங்கிய பகுதிகள் மற்றும் அரசு தொழிற்பேட்டைகளிலும்; வேளாண் சார்ந்த தொழில் நிறுவனங்கள் ஊராட்சி ஒன்றியங்களிலும் இருக்க வேண்டும். தோல் பொருட்கள், மருந்து, வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு உட்பட, 25 சிறப்பு வகை தொழில் நிறுவனங்கள், மாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் தொழில் துவங்கலாம். அதற்கு, இயந்திர தளவாடங்களின் மதிப்பில், 25 சதவீதம் அல்லது அதிகபட்சம், 1.50 கோடி ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.
இந்த மானியத்தை பெறுவதற்கு, தொழில் வணிக ஆணையரகத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதை மாவட்ட தொழில் மைய அதிகாரிகள் பரிசீலித்து, வங்கி வாயிலாக மானியம் வழங்க நடவடிக்கை எடுப்பர். கொரோனா தொற்று பரவலை தடுக்க, 2020 மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தொழில் நிறுவனங்கள் முடங்கின. கடந்த, 2022 முதல் பல்வேறு நிறுவனங்களும் முழுவீச்சில் செயல்பட துவங்கியுள்ளன. அவை விரிவாக்க நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவதால், அரசின் முதலீட்டு மானியம் பெறுவது அதிகரித்துள்ளது. இதுகுறித்து, சிறு தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த, 2021 வரை அதிகபட்சம் 50 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டது. பின், 1.50 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. கடந்த, 2019 – 20ல், 2,760 நிறுவனங்களுக்கு, 209 கோடி ரூபாயும்; 2020 – 21ல், 3,491 நிறுவனங்களுக்கு, 270 கோடி ரூபாயும் வழங்கப்பட்டது. கொரோனா தொற்றுக்கு பின் மானியம் வாங்குவது அதிகரித்து வருகிறது. அதன்படி, 2021 – 22ல், 3,545 நிறுவனங்களுக்கு, 360 கோடி ரூபாயும்; 2022 – 23ல், 1,914 நிறுவனங்களுக்கு, 242 கோடி ரூபாயும் வழங்கப்பட்டது. கடந்த, 2020 வரை நிலுவையில் இருந்த விண்ணப்பங்களுக்கு, 2021 – 22ல் வழங்கப்பட்டன.
இதனால் தான் அந்த ஆண்டில் அதிக தொகை மானியமாக வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் இதுவரை, 450 நிறுவனங்களுக்கு, 71 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.