அமெரிக்காவின் வாஷிங்டனில், 27 நாடுகள் அங்கம் வகிக்கும், சர்வதேச மத சுதந்திர கூட்டணி என்ற அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
இதில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ பேசியதாவது: அனைத்து தரப்பு மக்களின் மத சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தான், இந்த அமைப்பின் நோக்கம். ஆனால், சமீபகாலமாக, ஈராக், பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளில், சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் சிறுபான்மையினராக வசிக்கும் ஹிந்துக்கள் மீது, தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது. சிறுபான்மையினரின் சொத்துக்கள், வழிபாட்டு தலங்கள் சேதப்படுத்தப்படுகின்றன.
இதேபோல், நைஜீரியாவில் கிறிஸ்துவர்கள் மீதும், மியான்மரில் முஸ்லிம்கள் மீதும் வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. சீனாவிலும், சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. அனைத்து மதத்தினருக்கும், தங்கள் கலாசாரப்படி வாழ்வதற்கான சுதந்திரமான சூழல் உறுதி செய்யப்பட வேண்டும். இதற்கான சூழலை ஏற்படுத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
இதற்கிடையே, இந்தியாவில், குடியுரிமை திருத்த சட்டத்துக்குப் பின் நடக்கும் சம்பவங்கள் வருத்தம் அளிப்பதாகவும், அமெரிக்க வெளியுறவு துறை அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகளிடம் கவலை தெரிவித்து உள்ளனர்.