சிறந்த பொய்

மிகச்சிறந்த பொய்யைச் சொல்லும் ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாக வழங்கப்படும் என்று ஒரு அரசர் அறிவித்தார். நாட்டின் பல பகுதியிலிருந்தும் பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர். ஆனால், அரசருக்கு திருப்தி இல்லை. ஒரு நாள் கந்தல் உடை அணிந்த ஒரு ஏழை அரசவைக்கு வந்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாகக் கூறினான். அரசரும் அரைகுறை மனதுடன் சம்மதம் தெரிவித்தார்.

பிறகு அந்த ஏழை, “அரசே, உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டியிருக்கிறது. அதை வாங்கத்தான் நான் வந்தேன்” என்றான்.

அரசருக்கு கோபம் வந்து விட்டது. “யாரிடம் புளுகுகிறாய்.? நானாவது உனக்கு கடன் தர வேண்டியிருப்பதாவது?” என்று சத்தம் போட்டார்.

உடனே ஏழை சொன்னான், “அரசே, நீங்களே ஒப்புக்கொண்டு விட்டீர்கள். நான் பொய்யன் என்பதை உங்கள் வாயாலேயே ஒப்புக்கொண்டு விட்டதால், போட்டி விதியின்படி எனக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுங்கள்” என்று பணிவுடன் கேட்டான்.

கோபத்திலும், அவசரத்திலும் தான் உளறிவிட்டதை உணர்ந்த அரசர், “நீ சொன்னதை பொய் என்று ஒப்புக்கொள்ள முடியாது!” என்று அவசரமாக மறுத்தார்.

அந்த ஏழையோ, “சரி, நான் சொன்னதை பொய் என்று ஒப்புக் கொள்ளாவிட்டால் போகிறது. உண்மை என்று ஒப்புக் கொண்டீர்கள் அல்லவா. எனவே, எனக்குத் தர வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்து கடனை அடையுங்கள்.” என்றான்.

அரசர் சிரித்துக்கொண்டே, அந்த ஏழையை சிறந்த பொய்யன் என்று ஏற்று ஆயிரம் பொற்காசுகளை பரிசாக வழங்கினார்.