சிந்தை இரங்கினால் மட்டும் போதுமா..?

கடந்த நான்கு மாதங்களாக நம் அண்டை நாடான வங்க தேசத்தில் அவிழ்த்து விடப்பட்டுள்ள அக்கிரமங்களையும் மனித உரிமை மீறல்களையும் கண்டிக்கவும் பொது மக்களுக்கு   விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஹிந்து இயக்கங்கள் தமிழகத்தின் பிரதான நகரங்களில் கூட்டங்களை நடத்தி வருகின்றன. அத்தகைய ஒரு கருத்தரங்கம்  டிசம்பர் 12 அன்று, சென்னையில் நடைபெற்றதிலிருந்து சில துளிகள்…

சின்மயா மிஷன் யுவ கேந்திராவின் அகில பாரத தலைவர் ஸ்வாமி மித்ரானந்தா, “ஹிந்துக்கள் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். வரலாற்றில் நாம் எங்கெல்லாம்  வலிமை இழந்து மக்கள் தொகையில் குறைந்தோமோ, அந்தப் பகுதிகளையெல்லாம் இழந்தோம். அப்படித்தான், 80 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடன் விளங்கிய அகண்ட பாரதம் இன்று 60 சதவீத நிலத்தை இழந்து 32 லட்சம் சதுர கிலோ மீட்டராக சுருங்கி நிற்கிறது.

இந்த அவலம் போக வேண்டுமானால், நம் இளைஞர்களுக்கு செய்திகள் கொண்டு செல்லப்பட வேண்டும், விழிப்புணர்வு வந்தால் தான் செயல்பட வைக்க இயலும். ஸ்ரீகிருஷ்ணன் அர்ஜுனனுக்கு வழிகாட்டியது போல் மனதில் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் துணிவுடன்  உறுதியுடன் செயலாற்ற வேண்டிய தருணம் இது” என்று எடுத்துரைத்தார்.

மேஜர் (ஓய்வு) மதன் குமார்,

பங்களாதேஷ் உருவான வரலாற்றில் பாரத அரசு- ராணுவம்- பொது மக்கள் என்று கட்சி பேதமின்றி (கம்யூனிஸ்ட்டுகள் நீங்கலாக) ஓரணியில் நின்று பணியாற்றிய நாட்களை நினைவு கூர்ந்தார். மேலும் தொடர்ந்து, ” இட ஒதுக்கீட்டுக்கான மாணவர்கள்  போராட்டம் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு அங்கே நிகழ்த்தப் படுபவையெல்லாம் திட்டமிட்ட இன அழிப்பு. மாறி வரும் புவிசார் அரசியல் சூழ்நிலைகளை மனதில் கொண்டு நம் பாரத அரசு பொறுமையாக, ஊரி துல்லிய தாக்குதல் போல  உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறதைக் காண்கிறோம். வங்க தேச விவகாரத்திலும் தேவையான  செயல்பாடுகளை மத்திய அரசு நிச்சயம்  மேற்கொண்டு வருகிறது.  மேலும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் என்று நிச்சயமாக சொல்வேன்” என்று தன்னுடைய இராணுவப் பணி அனுபவத்தின் அடிப்படையில் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் உரையாற்றினார்.

பானு கோம்ஸ், தேசிய சிந்தனையாளர்

விழிப்புணர்வை ஏற்படுத்த, அச்சு- காட்சி ஊடகங்களில் இடது சாரிகள் ஆதிக்கத்தையும் கடந்து தேசிய சக்திகளின் கை ஒங்க வேண்டும் என்று தொடங்கினார். மேற்கொண்டு பேசுகையில், ‘‘வங்க தேசத்தின் ஆட்சி மாற்றம் தானாக மக்கள் கிளர்ந்தெழுந்ததால் வந்த ஒன்று அல்ல. சூத்திரதாரி ஜார்ஜ் சோரோஸ் என்ற கோடானு கோடி பணமூட்டையில் புரளும் நபர்.   கடந்த ஐம்பது ஆண்டுகளாக தன்னை உலகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கக் கூடிய சர்வ வல்லமை படைத்த கடவுள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். பல நாடுகளில் வெற்றியும் பெற்றிருக்கிறார். ஆபத்து  இன்று நம் வீட்டு கிழக்கு வாசல் வரை வந்து விட்டது. நாம், நம் ஜாதிகள் என்ற அடையாளத்தைக் கடந்து ஹிந்து என்ற அடிப்படியில் ஓரணியில் இணைய வேண்டும்” என்றும் சொல்லி அவற்றிற்கான வழிமுறைகளையும் விளக்கினார்.

ராமகிருஷ்ண பிரசாத்,

வட தமிழக ஆர்.எஸ்.எஸ் இணைச்செயலாளர்

ஹிந்துக்கள் ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி அப்படி நிகழ்த்திக் காட்டிய சில ஊர் மக்களையும் எடுத்துக்காட்டாகக் கூறினார். ‘காசா- பாலஸ்தீன்  பற்றியெல்லாம் தொண்டை வரள பேசும் நம் நாட்டு அறிவுஜீவிகள், வங்க தேசத்தில் கிருத்துவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஹிந்துக்கள் உட்பட சிறுபான்மையினரும், ஏன் முஸ்லிம்களின் ஒரு பிரிவினரான அஹமதியாக்களும் தாக்கப்படும் போது வாயைத் திறக்கமாட்டார்கள். வசுதைவ குடும்பகம் என்பதை உயர்த்திப் பிடிக்கும் அதே வேளையில் ஹிந்துக்களை ஒருங்கிணைக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயம்’ என்பனவெல்லாம் அவர் உரையின் சாரம்.

குறிப்பு : நிகழ்ச்சியின் படம் 4ம் பக்கத்தில்  பிரசுரமாகி உள்ளது.