மற்ற எந்தப் பௌர்ணமிக்கும் இல்லாத சிறப்பு, இன்று (மே 5) கொண்டாடப்படும் சித்ரா பௌர்ணமிக்கு உண்டு. எப்படி ? மற்ற மாதங்களில் ஒளிரும் பௌர்ணமியில் முழுநிலவு அழகாகப் பிரகாசித்தாலும், களங்கங்கள் ஆங்காங்கே திட்டுத் திட்டாகத் தெரியும். சித்ராபவுர்ணமி நிலவு தனது கிரணங்களை முழுவதுமாகப் பொழிந்து, கலங்கங்கள் சிறிது கூட இல்லாமல் பேரொளி வழங்கும். தமிழ்ப்புத்தாண்டில் முதன்முதலாக வரும் முழுநிலவு நாள் என்பதாலும் கூடுதல் சிறப்பு இந்த பௌர்ணமிக்கு. இவை தவிர, இன்றுதான் மாந்தர்களின் பாவ புண்ணியக் கணக்குகளை மிகத் துல்லியமாக எழுதும் பணியை வெகு சிறப்பாகச் செய்து வரும் சித்திரகுப்தரின் அவதார நாள்.
பண்டை காலத்தில் இருந்தே நம் தமிழகத்தில் சித்திர புத்திர நயினார் நோன்பு மிகப் பிரபல்யமான ஒன்று, அன்று விரதமிருந்து கோயில் சென்று அங்கே கூட்டமாகவோ, தனியாவோ அமர்ந்து இவரது கதையைப் படிப்பார்கள். அவ்வாறு அனுசரிப்போர் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களின் பலன் குறையும், தேக நலன் சீராக இருக்கும். புண்ணியங்கள் கூடும், வாழ்வில் செல்வம் செழிக்கும் என்பது ஐதீகம். முக்திபுரி என்ற ஊரில் கலாவதி என்ற இளம்பெண் ஒரு நாள் தன் தோழியரோடு கானகம் சென்றாள். அங்குள்ள சிறு கோயில் ஒன்றில் தேவ கன்னியர் பூஜை செய்து கொண்டிருந்தனர். சித்திரகுப்த நயினாரின் கதையைப் படித்துக் கொண்டிருந்தாள் வேறொருத்தி. கலாவதி வெளியில் காத்து நின்றாள். பூஜை முடிந்ததும்,”தேவி! தேவ கன்னியர்களான நீங்கள் யாரை வழிபட்டீர்கள்?,” என்று கேட்டாள். அக்கன்னி,” பெண்ணே! இன்று சித்திரா பௌர்ணமி. சித்திர குப்தனின் அவதாரக் கதையைப் படித்து விரதம் இருந்து பூஜிப்பவர்களுக்கு நல்ல கணவன், நல்ல குழந்தை என மேன்மைமிகு வாழ்க்கை கிடைக்கும். ஆண்கள் இதைச் செய்தால் எண்ணிய காரியங்களில் வெற்றியும், இனிமையான இல்லறமும் வாய்க்கும்,” என்றாள்.
உடனே கலாவதி பூஜை முறையை கற்றுத் தந்தருள கூறுகிறாள். தேவகன்னியும் அவ்வாறே செய்தாள். அது முதல் கலாவதி நோன்பைக் கடைப்பிடித்தாள். அதன் பலனாக ஆகமபுரியின் அரசன் வீரசேனனின் மனைவியாகும் பலனைப் பெற்றாள். சித்திரகுப்த நயினார் நோன்பு கடைப்பிடித்ததால் தான் தனக்கு செல்வச் செழிப்பும், புகழும் மிக்க வாழ்வு கிடைத்தது எனக் கருதி அந்த நோன்பை தரணியெங்கும் பரப்பினாள் கலாவதி. இன்று வீடுகளில் முழு பக்தியுடன் மேற்கொள்ளப்படும் பூஜை, இல்லங்களில் இதுவரை மிதந்திருந்த கடன் தொல்லை, பணக் கஷ்டம் ஆகிய தளைகளிலிருந்து விடுதலை கிடைக்க வழி செய்யும் என்பதும், ஏற்கனவே ஆலயங்களில் அங்கிங்கெணாதபடிக்கு எங்கும் நிறைந்திருக்கும் சக்தியுடன், இன்று பெளர்ணமி நாளில் மேற்கொள்ளப்படும் வழிபாடுகள் மேலும் வீறுகொண்டு சக்தி வெளிப்படும் என்பதும் ஐதீகம். ஆலய அதிர்வலைகள் நம் மீது பட்டு, நம்மை வாழ்வில் செம்மையுறச் செய்யும் தன்மையை ஆலயங்களுக்கு அடிக்கடி செல்வதன் மூலம் நாம் வளர்த்துக்கொள்வோம். ஆலயம் செல்ல முடியாதவர்கள், இல்லத்து பூஜை அறையையே கோயிலாக (யதாஷ்டானம்) பாவித்து வழிபாடுகள் செய்யலாமே. மற்ற நாட்களைவிட, சித்ரா பெளர்ணமியன்று வீட்டில் செய்யப்படும் பூஜைக்கு, பன்மடங்கு வீரியம் அதிகம்.
இன்று, சித்திரகுப்தரின் படத்திற்கு முன் பேனா, காகிதம் முதலியவற்றை வைத்து மலர்களால் பூஜித்து வணங்கலாம். அவரவர் குலதெய்வத்தையும், அவரவர் இஷ்ட தெய்வத்தையும் வணங்குவது தான் இன்றைய முக்கிய வழிபாடு. உகந்த மலர்களைக் கொண்டு பூஜை மேடை, படங்கள், விக்கிரஹங்களையம் அலங்கரித்து, விளக்கேற்றி பூஜை செய்து சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், பானகம், நீர் மோர் போன்றவற்றை நிவேதனம் ஆகப் படைக்கலாம். சித்திர குப்தர் படத்தை வைத்து பேனா, நோட்டு போன்றவற்றை வைத்து வழிபடுவது அதி உத்தமம். வீட்டு தெய்வம் (வீட்டில் எவரேனும் கடந்த தலைமுறைகளில், கன்னிப்பெண்ணாகவோ, கர்ப்பிணியாகவோ இருந்து உயிரிழந்திருப்பார்கள்) படங்கள் இருந்தால், அந்தப் படங்களுக்கும் சந்தனம், குங்குமம் இட்டு, பூக்களால் அலங்காரம் செய்து மரியாதை செலுத்துவது சிறந்தது.
பிரசாதங்களை அக்கம்பக்கம் உள்ளோர்க்கு வழங்க வேண்டும். இயலாதவர்க்கு சாதம் போன்ற அன்ன வகைகளை இன்று வழங்கி, புண்ணியம் சேர்ப்போம். இன்று காகங்களுக்கு உணவளிக்க வேண்டும். சந்திர பகவானை தரிசித்து வணங்க வேண்டும். இன்று இயலாதவர்களுக்கு தயிர் சாதம் அல்லது எலுமிச்சை சாதம் அன்னதானமாக வழங்குவது சிறந்தது. சோபக்ருது வருஷம் முழுவதுமே அனைத்து ராசியினரும் பக்ஷிகள், வாயில்லா மிருகங்கள் போன்றவற்றுக்கு உணவு போன்றவற்றை வழங்கும் பட்சத்தில் இல்லங்களில் வளங்கள் பல பெருகும் என்பது ஜோதிடர்கள் பலரின் வாக்கு. சித்திர பௌர்ணமி நன்னாள் வருடத்திற்கு ஒருமுறை தான். இந்நன்நாளில் இறையுணர்வு மேலோங்க செயலாற்றுவோம், தானங்கள் பல செய்வோம், தரித்திரம் நீங்க வழி தேடுவோம், புண்ணிய சீலர்களாக சரித்திரம் படைப்போம்.
ஆர். கிருஷ்ணமூர்த்தி