”மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தன் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ளாவிட்டால், சிதம்பரத்துக்கு ஏற்பட்ட கதி நேரிடும்,” என, உ.பி., மாநில, பா.ஜ., – எம்.எல்.ஏ., எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உ.பி.,யில், உள்ள பைரியா தொகுதியை சேர்ந்தவர், பா.ஜ., எம்.எல்.ஏ., சுரேந்திர சிங். திரிணமுல் காங்., தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான, மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்து, சுரேந்திர சிங், பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சுரேந்திர சிங் கூறியதாவது: தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை எதிர்த்து, மம்தா கடுமையான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். இத்திட்டத்தை அவர் எதிர்ப்பதாக இருந்தால், வங்கதேசத்துக்கு, அவர் பிரதமராக இருந்து கொள்ளட்டும்; இங்கிருந்து, எதிர்க்கக் கூடாது.
மம்தாவுக்கு கெட்ட நேரம் நெருங்கி வருவதை, அவர் அறியவில்லை. அவரது பேச்சையும், செயல்பாடுகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், காங்.,கை சேர்ந்த, முன்னாள் மத்திய நிதியமைச்சர், சிதம்பரத்துக்கு ஏற்பட்டுள்ள நிலை தான், மம்தாவுக்கும் நேரிடும். மேற்கு வங்கத்தில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, ராமராகவும், உ.பி., முதல்வர் ஆதித்யநாத், அனுமனாகவும், செயல்பட்டு, கட்சிக்கு வெற்றியை தேடித்தருவர். இவ்வாறு, அவர் பேசினார்.