மும்பையைச் சேர்ந்த, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்தின் உரிமையாளர்களான, பீட்டர் முகர்ஜி, அவருடைய மனைவி இந்திராணி முகர்ஜி அளித்த வாக்குமூலமே, இந்த வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர், சிதம்பரம் மற்றும் அவருடைய மகன் கார்த்தி, சிக்கியதற்கு, காரணம்.ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம், 2007ல், அன்னிய முதலீடு பெறுவதற்கு அனுமதி கோரியிருந்தது.
அப்போது, 4.62 கோடி ரூபாய் அளவுக்கு அன்னிய முதலீடு பெறுவதற்கு, மத்திய நிதி அமைச்சகத்தின் கீழுள்ள, எப்.ஐ.பி.பி., எனப்படும், அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி அளித்தது. ஆனால், ஐ.என்.எக்ஸ்., நிறுவனம், 305.36 கோடி ரூபாய் முதலீட்டை பெற்றது, துணை நிறுவனமான, ஐ.என்.எக்ஸ்., நியூஸ் நிறுவனத்தில், 26 சதவீதம் முதலீடு, அனுமதி பெறாமல் செய்யப்பட்டது.
தன்னுடைய மகள், ஷீனா போரா கொலை வழக்கில், இந்திராணி முகர்ஜியும், அவருடைய மூன்றாவது கணவரான, பீட்டர் முகர்ஜியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டு, பிப்., 17ல், ஐ.என்.எக்ஸ்., மீடியா தொடர்பான மோசடி குறித்து, இந்திராணி முகர்ஜி வாக்குமூலம் அளித்தார்.
வாக்குமூலம் :
எங்களுடைய நிறுவனத்திற்கு அன்னிய முதலீடு பெறுவது தொடர்பான பிரச்னை குறித்து, சிதம்பரத்தை அவருடைய அலுவலகத்தில் சந்தித்தோம். அப்போது, தன்னுடைய மகன் கார்த்தியை சந்திக்கும்படியும், அவருடைய தொழிலுக்கு உதவும்படியும் சிதம்பரம் கூறினார்.
அதைத் தொடர்ந்து, டில்லியில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில், கார்த்தியை சந்தித்தோம். அப்போது, 7 கோடி ரூபாய் பணம் கொடுத்தால், பிரச்னையை தீர்த்து வைப்பதாக, கார்த்தி கூறினார்.இதற்காக, கார்த்திக்கு சொந்தமான, ‘செஸ் மேனேஜ்மென்ட் மற்றும் அட்வான்டேஜ் ஸ்ட்ரேடஜிக்’ என்ற இரண்டு நிறுவனங்களை, ஆலோசகர்களாக நியமிக்க வேண்டும் என்று கூறினார்.
அந்த நிறுவனங்கள் மூலம், ஆலோசனைகள் வழங்கியதாக கணக்கு எழுதி, பணத்தை மாற்றும்படி கூறினார். ஆனால், எவ்வளவு பணம் மாறியது, எப்போது மாறியது என்பது, பீட்டர் முகர்ஜிக்கு தான் தெரியும்.இவ்வாறு, அவர் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.
பீட்டர் முகர்ஜி வாக்குமூலம் :
சிதம்பரத்தை இரண்டு அல்லது மூன்று முறை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். என்னுடைய பிரச்னைகளுக்கு தீர்வு காணும்படி கூறினேன். அப்போது, தன்னுடைய மகன் தொழிலுக்கு உதவும் படி அவர் கூறினார்.அன்னிய முதலீடு பெறுவதில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். கார்த்தி, 7 கோடி ரூபாய் கேட்டார்.
அதில், முதல் தவணையாக அவருடைய நிறுவனத்துக்கு, ரூ.10 லட்சம் அனுப்பினேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.இந்த வழக்கில் விசாரணை நடத்திய அமலாக்கத் துறை, வேறு சில பண பரிமாற்றங்கள் நடந்ததற்கான ஆதாரங்களையும் திரட்டியுள்ளது. அதன்படி, கார்த்தியின், ‘அட்வான்டேஜ் ஸ்ட்ரேடஜிக்’ நிறுவனம், 3.50 கோடி ரூபாய்க்கான, ‘பில்’ கொடுத்துள்ளது. அந்தப் பணத்தை, ஐ.என்.எக்ஸ்., நிறுவனம் செலுத்தியுள்ளதாக, அமலாக்கத் துறை கூறுகிறது.
இதையடுத்து கார்த்தி சிதம்பரம், .பீட்டர் முகர்ஜியையோ, இந்திராணி முகர்ஜியையோ நான் சந்தித்ததே கிடையாது. அவர்கள் யார் என்பதே எனக்கு தெரியாது. மும்பையில் உள்ள பைகுலா சிறையில், அவருடன் சேர்த்து விசாரித்தபோது தான், இந்திராணியை முதல் முறையாக பார்த்தேன். நான், எப்.ஐ.பி.பி., யின் நடவடிக்கைகளில் தலையிட்டதும் கிடையாது.இவ்வாறு, அவர் கூறினார்.