சிங்கம்தான் வனராஜா, வேறு யார்?

‘இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களையும் ‘ஹிந்து சமுதாய’மாகவே ஆர்.எஸ்.எஸ் கருதுகிறது’’ என்று அதன் தலைவர் மோகன் பாகவத் ஹைதராபாத்தில் ஒரு கூட்டத்தில் பேசியுள்ளார். இந்திய மக்கள் எந்த மொழி பேசினாலும், எந்த வழிபாட்டு முறையைக் கொண்டிருந்தாலும் அவர்கள் ஹிந்துக்கள்தான் என்று கருத்து தெரிவித்தார்.

வழக்கம்போல் தமிழக தலைவர்கள் பலரும், எதிர்த்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் – பாஜக எதிர்ப்பு பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தி வரும் ‘நியூஸ் 18’ தொலைக்காட்சியிலும் இதை விவாதப் பொருளாக்கி சிலர் விஷக் கருத்துக்களை கொட்டித் தீர்த்துள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ் நீண்ட காலமாகவே இந்த நாட்டில் உள்ள அனைவரையும் ‘ஹிந்துக்கள்’ என்றே அழைத்து வருகிறது. ‘ஹிந்து’ என்பது மதத்தை குறிக்கும் சொல் இல்லை. அது தேசியத்தைக் குறிக்கும் சொல். மதத்தால் முஸ்லிம்களாகவும் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தேசியத்தால் ஹிந்து என்றே அழைக்கப்படுகிறார்கள்.
இலக்கிய ஆராய்ச்சி செய்ய பாரத நாட்டுக்கு வருகிற வெளிநாட்டைச் சேர்ந்தவர் எவரும் பகவத்கீதையும் ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் தான் ஆய்வு செய்வார்கள். இங்குள்ள பிரம்மாண்டமான கோயில்களை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். யாரும் சர்ச், மசூதிகளையோ பார்ப்பதில்லை.
பொதுவாக கிராமங்களில் சிறிய கடைகளில் வெற்றிலை, பாக்கு கடை என்று அழைப்பார்கள். அந்தக் கடையில் வெற்றி, பாக்குடன் மேலும் பல பொருட்கள் இருந்தாலும் கடைக்கு என்னமோ ‘வெற்றிலை பாக்கு கடை’ என்றுதான் பெயர். அதுபோல பாரத நாட்டில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் இருக்கலாம். ஆனால் நாடு ஹிந்துஸ்தான்தான். முஸ்லிம் நாடுகளில் நமது மக்களை (முஸ்லிமாக இருந்தாலும்) ‘ஹிந்து’ என்றே குறிப்பிடுகிறார்கள்.
பெங்களூரில் உள்ள விமானம் கட்டும் தொழிற் சாலைக்கு ‘ஹிந்துஸ்தான் ஏரோனடிக் சென்டர்’, விசாகப் பட்டினத்தில் உள்ள அரசு கப்பல் கட்டும் தொழிற்சாலைக்கு ‘ஹிந்துஸ்தான் ஷிப் யார்டு’ என்றே பெயர்.
ஹிந்துஸ்தானத்தின் மக்கள் சமுதாயத்தை ‘ஹிந்து’என்று அடையாளப்படுத்தாமல் வேறு எப்படி அழைப்பது என்று சற்றும் விவரமற்று விவாதிப்போர் மண்டையை போட்டு உடைத்துக் கொள்ளட்டும். சாமானிய ஹிந்து (அதாவது சாமானிய இந்தியன்) அர்த்தமுள்ள புன்னகை பூக்கிறான்!