வட கிழக்கு மாநிலமான, சிக்கிமில், எதிர்க்கட்சியான, சிக்கிம் ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த, 10 எம்.எல்.ஏ.,க் கள், பா.ஜ.,வில் நேற்று, இணைந்தனர். இதையடுத்து, சிக்கிமின் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை, பா.ஜ., பெற்றுள்ளது.
சிக்கிமில், முதல்வர் பிரேம் சிங் டமாங் தலைமையிலான, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியின் ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் இங்கு நடந்த சட்டசபை தேர்தலில், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா, 17 தொகுதிகளிலும், முன்னாள் முதல்வர், பவன் குமார் சாம்லிங் தலைமையிலான, சிக்கிம் ஜனநாயக முன்னணி, 15 தொகுதிகளிலும் வென்றன. பா.ஜ., ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
சிக்கிம் ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த, இரண்டு பேர், தலா, இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதை அடுத்து, தலா, ஒரு தொகுதியில் ராஜினாமா செய்தனர். இதனால், அந்த கட்சி, எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை, 13 ஆக குறைந்தது. இந்நிலையில், சிக்கிம் ஜனநாயக முன்னணியின், 10 எம்.எல்.ஏ.,க்கள், நேற்று டில்லி வந்தனர். பா.ஜ., செயல் தலைவர், ஜே.பி.நட்டா, கட்சியின் வட கிழக்கு மாநிலங்களுக்கான பொறுப்பாளர், ராம் மாதவ் முன்னிலையில், பா.ஜ.,வில் இணைந்தனர்.
பா.ஜ., வில் இணைந்த, எம்.எல்.ஏ.,க்கள் கூறுகையில், ‘சிக்கிமில், விரைவில் தாமரை மலரும்’ என்றனர்.