“சிஏஏ குறித்து பொய்களைப் பரப்புகிறார் மம்தா” – மேற்கு வங்கத்தில் அமித் ஷா

மேற்கு வங்க மாநிலம் பங்கானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அமித் ஷா பேசியது: “4-ம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. அதாவது, 380 தொகுதிகளுக்கான தேர்தல் நிறைவடைந்துள்ளது. குறிப்பாக மேற்கு வங்கத்தில் 18 இடங்களுக்கான தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்லி கொள்ள விரும்புகிறேன். பாஜக (பிரதமர் மோடி) 380 தொகுதிகளில் 270 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையை அடைந்துள்ளது.

மம்தா பானர்ஜி சிஏஏ சட்டம் தொடர்பாக பொய்களைப் பரப்பி, மக்களை தவறாக வழிநடத்துகிறார். குறிப்பாக மாட்டுவா சமுதாய மக்களுக்கு எந்த பிரச்சனையும் வராது என்று உறுதியளிக்கிறேன். நீங்கள் குடியுரிமையைப் பெறுவீர்கள், நாட்டில் மரியாதையுடன் வாழ முடியும். சிஏஏ சட்டத்தால், அனைவருக்கும் குடியுரிமை கிடைக்கும். இது பிரதமர் மோடியின் உத்தரவாதம். மம்தா ஓட்டு வங்கி அரசியலுக்காக ஊடுருவலை ஆதரித்தார். இதனால் அவர் குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்க்கிறார். இந்த விவகாரம் மத்திய அரசின் கையில் இருப்பதால், சிஏஏ சட்டத்தை மம்தா பானர்ஜியால் ஒருபோதும் தடுக்க முடியாது. சட்டவிரோத குடியேற்றத்தை நாங்கள் தடுத்து நிறுத்த வேண்டும்” என்றார்.