09 ஏப்ரல் – சிஆர்பிஎப் எனப்படும் மத்திய ரிஸர்வ் காவல்படையின் வீர வணக்க நாள்:
1965 ஏப்ரல் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் பாகிஸ்தான் இராணுவத்தின் 51 வது
காலாட்படையைச் சேர்ந்த சுமார் 3500 வீரர்கள் ஏராளமான ஆயுத தளவாடங்களுடன் ஒரு
குழு நமது பாரதத்தின் ரான் ஆப் கட்ச் பகுதியில் உள்ள சர்தார் போஸ்ட் எனும் இடத்தை
கைப்பற்றும் நோக்கில் நம் தேசத்தின் மீது ஒரு திடீர் படையெடுப்பை நடத்தினர். அப்போது
அந்த இடத்தில் நமது சிஆர்பிஎப்பின் ஒரு சிறிய குழுவான 150 வீரர்கள் (இரண்டு
பட்டாலியன்) மட்டுமே பாதுகாத்து வந்தனர். மிகுந்த முன்னேற்பாட்டுடன் வந்த பாகிஸ்தான்
இராணுவத்துடன் ஒப்பிடும்போது, சிஆர்பிஎஃப் வீரர்களிடம் போதிய எண்ணிக்கையில்
வீரர்களோ, அதிக ஆயுதங்களோ இல்லை இன்னும் சொல்லப்போனால் நம் வீரர்கள்
தங்களை பாதுகாத்துக்கொள்ள தகுந்த நிலப்பரப்போ அல்லது அவகாசமோகூட அப்போது
இல்லை அனைத்தும் எதிரிகளுக்கே மிகவும் சாதகமாக இருந்த சூழல் அது.
எளிதாக கைப்பற்றிவிடலாம் என்கிற எண்ணத்துடன் வந்த பாகிஸ்தானிய இராணுவம் நமது
வீரர்களின் துணிச்சலான எதிர் தாக்குதலால் நிலைகுலைந்து போனது. இந்த போஸ்ட்டை
கைப்பற்ற மூன்று முறை பகீரத முயற்சிகளை மேற்கொண்டது பாகிஸ்தான் ஆனால் வீரம்
செரிந்த நமது சிஆர்பிஎஃப் வீரர்கள் அவர்களது ஒவ்வொரு முயற்சியையும் மிகுந்த
வீரத்துடனும், சமயோசிதம் கலந்த அறிவார்ந்த செயல்பாடுகளுடனும் துணிச்சலாக
முறியடித்தனர். இந்த போர் சுமார் 12 மணி நேரம் வரை நீடித்தது. இறுதியில், பாகிஸ்தான்
இராணுவம் போர்க்களத்திலிருந்து தலைத்தெறிக்க தப்பி ஓடியது. அவர்களில் 34 பேர்
இறந்தனர், அதில் இரண்டு அதிகாரிகளும் அடங்குவர். அவர்களின் நான்கு வீரர்கள்
உயிருடன் பிடிக்கப்பட்டனர்.
இந்த வெற்றிகரமான போரில் சிஆர்பிஎப் இன் 6 வீரர்கள் தேசம் காக்க வீரமரணம்
அடைந்தனர். இதனை போல குறைந்த வீரர்களை கொண்டு அவ்வளவு பெரிய படையை
முறியடித்த நிகழ்வுகள் சரித்திரத்தில் மிகவும் குறைவே அதிலும் இராணுவப் போர்களின்
வரலாற்றில் ஒருபோதும் ஒரு சில காவல்துறையினர் ஒரு முழுமையான இராணுவ
காலாட்படை படையை இப்படி எதிர்த்துப் போராடி வெற்றி கண்டதில்லை. வீரம் தியாகம்
தேசாபிமானத்தை உயிர்மூச்சாகக் கொண்ட நம் பாரதத்தில் மட்டுமே இது சாத்தியமானது.
அன்றில் இருந்து இந்த நாள் சிஆர்பிஎஃப் வீரவணக்க தினமாக கொண்டாடப்படுகிறது.
சிஆர்பிஎப் 1939களில் உருவாக்கப்பட்டது, முதலில் இப்படை அரச பிரதிநிதியின்
காவல்துறையாக நடைமுறைக்கு வந்தது, இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு 1949 டிசம்பர் 28
அன்று சிஆர்பிஎஃப் சட்டத்தை அமல்படுத்தியதன் மூலம் இது மத்திய ரிசர்வ் போலீஸ்
படையாக மாற்றம் கண்டது. இது இந்தியாவின் மத்திய ஆயுத போலீஸ் படைகளான
(சிஏபிஎஃப்) ஐந்து படைகளில் மிகப்பெரியது. இந்த படைப்பிரிவு நம் தேசத்தில் சட்டம்
ஒழுங்கு பராமரிப்பு மற்றும் கிளர்ச்சிகளை அடக்குதல் போன்ற பணிகளில் மாநில மற்றும்
யூனியன் பிரதேச அரசு நிர்வாகங்களுடன் இணைந்து முக்கிய பங்காற்றுகிறது. இதுவரை
சி.ஆர்.பி.எப் இன் வீரதீர சாகசங்களுக்கு 1 அசோக் சக்ரா, 6 கீர்த்தி சக்ரா, 1 வீர் சக்ரா
மற்றும் 26 சவுரிய சக்ரா உள்ளிட்ட 1980 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இது இந்திய அரசின்
உள்துறை அமைச்சகத்தின் அதிகாரத்தின் கீழ் செயல்படுகிறது. 246 பட்டாலியன்கள் மற்றும்
பல்வேறு துணை அமைப்புகளுடன் இணைந்து சுமார் 300000த்திற்கும் அதிகமான
பணியாளர்களை கொண்ட சிஆர்பிஎஃப் இந்தியாவின் மிகப்பெரிய துணை ராணுவ சக்தியாக
உள்ளது.பொதுவாக மக்களுக்கு துணை இராணுவம் என்றாலே அவர்கள் போராட்டங்களை
கட்டுப்படுத்துதல், தேர்தல் பாதுகாப்பு பணி என்பதுதான் நினைவுக்கு வரும் ஆனால்
சிஆர்பிஎப் நம் தேசம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு வகையான
தேசப்பணிகளில் ஈடுபட்டுள்ளது இதில் குறிப்பாக எல்லைபுற பாதுகாப்பு, பேரிடர் மீட்பு பணி,
பாராளுமன்ற பாதுகாப்பு, சுற்றுசூழல் பாதுகாப்பு, கலவரத்தை கட்டுப்படுத்தும்
அதிவிரைவுப்படைகள், நக்ஸலைட்டுகளையும் பயங்கரவாதிகளையும் ஒடுக்க தனிப்பயிற்சி
பெற்ற கமாண்டோக்களை கொண்ட கோப்ரா படைப்பிறிவு, முக்கியஸ்தர்களுக்கு பாதுகாப்பு
மற்றும் முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் படைப்பிரிவுகள் போன்றவை உள்ளன.
மேலும் முழுக்க முழுக்க பெண்களை கொண்ட ஆறு பெடாலியன் படைப்பிரிவுகளை
கொண்ட ஒரே துணை இராணுவபடை சிஆர்பிஎப் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
சிஆர்பிஎப் அமைப்பு நம் தேசத்தில் மட்டுமல்ல பல வெளிநாட்டு பணிகளையும்
வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. 1987களில் இலங்கை அமைதிப்படையில் பங்கு
கொண்டது, 1994களில் ஏற்பட்ட ஹைத்தி தீவு பிரச்சனையின் போது அங்கு பாதுகாப்பு
பணிகளை மேற்கொண்டது, ஐநாவின் வேணுகோளுக்கிணங்க லைபீரியாவில் ஐ.நா
அமைப்பின் சார்பில் பாதுகாப்பு பணியை இன்று வரை செவ்வனே செய்து வருகிறது இதை
தவிர ஐநா சபையுடன் இணைந்து சோமாலியா, நமீபியா, மாலத்தீவுகள், போஸ்னியா என
பல்வேறு உலக நாடுகளில் தங்களது பணிகளை சிறப்பாக செய்து சாதனை படைத்துள்ளது.
நம் தேசத்திற்காக பாடுபடும் சிஆர்பிஎப் வீரர்களுக்கு நாமும் நம் வீரவணக்கங்களை
இந்நாளில் சமர்ப்பித்து பெருமை செய்வோம்.