சாவடி எஸ். அருணாசலம் பிள்ளை ( 1893- 1938 ) சுதந்திரப் போரின் சுத்த வீரர்

காணும் பொங்கல்  (ஜனவரி 16) அன்று, விடுதலைப் புரட்சியாளர் வாஞ்சிநாதனின் நெருங்கிய நண்பரும் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு அதன் மூலம் தனது மருத்துவப் படிப்பை தொடரமுடியாததுடன் சுமார் ஒரு வருட காலம் இந்த வழக்கின் விசாரணையில் கை, கால்களில் விலங்கிட்டு  அச்சுறுத்தல் என சித்திரவதை, சிறைக் கொடுமைகளை அனுபவித்த சாவடி அருணாசலம் பிள்ளையின் வம்சத்தினரை ஆர்.எஸ்.எஸ்  அன்பர்கள் ஒரு குழுவாக சென்று சந்தித்தோம்; சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் ரோட்டில் உள்ள ஓய்வுபெற்ற  காவல்துறை கண்காணிப்பாளர் (ஓய்வு) ரங்கராஜன்தான் நாங்கள் சந்தித்த பெரியவர். சாவடி அருணாசலம் பிள்ளை இவரது மனைவியாரின் தாத்தா. என்ற உண்மை அறிந்து பெருமிதம் கொண்டோம்” என்கிறார், (மேகநாதன், ரமேஷ் (IRS) இருவரும் உடன்வர) உயர் அதிகாரிகளை சந்திக்கும் பணி  காரணமாக ரங்கராஜன் இல்லம் சென்ற தாம்பரம் ஆர்.எஸ்.எஸ்ஸின் சம்பர்க்க விபாக் (மக்கள் தொடர்பு) பொறுப்பாளர் பி சந்திரசேகரன். தொடர்ந்து, சந்திரசேகரன் அளித்த அரிய தகவல்களுடன் ஒரு சில வரலாற்று ஆவண செய்திகள் வாசகர்களுக்காக:

தந்திர போராட்டத்தில் ஈடுபட்டு பல்வேறு துயரங்களையும் துன்பங்களையும் அனுபவித்த குடும்பங்கள் கால ஓட்டத்தில் அதனை மறந்து அமைதியாக கடந்து  செல்வதை அறிய முடிந்தது. உலகையே தங்களின் காலடியில் போட்டு அதனை எதேச்சதிகாரமாக இறுமாப்புடன் ஆண்டுகொண்டிருந்தான் ஆங்கிலேயன். அவனுடைய ஏகாதிபத்தியத்திற்க்கு சவால் விட்டதுடன் சொந்த மண்ணின் மைந்தர்­களை கொடுமை செய்யும் அரக்கர் கூட்டத்தை களை
யெடுப்போம் என்று உரிமைக்குரல் எழுப்பினார்கள். புரட்சியாளர்கள். அவர்களின் அதிரடி நடவடிக்கையாக அந்த கர்ஜனை அதிர்ந்தது.  வீர சுதந்திரம் வேண்டி நின்ற அவர்களில் ஒரு சுத்த வீரரே சாவடி அருணாசலம் பிள்ளை.

சாவர்க்கர், வ. வே. சு. ஐயர், எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி, வ. உ. சிதம்பரம்பிள்ளை ஆகியோர் அபினவ் பாரத் சமிதி எனும் இயக்கத்தின் கீழ் செயல்பட்டனர். நீலகண்ட பிரம்மச்சாரி, தர்மராஜ ஐயர், வாஞ்சிநாதன், சாவடி அருணாசலம் பிள்ளை ஆகியோர் பாரத மாதா சங்கம் எனும் அமைப்பினை உருவாக்கிச் செயல்பட்டு வந்தனர்.

பாரதமாதா சங்கம் :

நீலகண்ட பிரம்மச்சாரி 10-.4-.1910-ல் தென்காசியில் உள்ள மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை வீட்டில் வைத்து ஆரம்பித்த சங்கமே பாரதமாதா சங்கம். இச்சங்கத்தில் தென்காசி, செங்கோட்டை, புனலூர், தூத்துக்குடியைச் சார்ந்தவர்கள் உறுப்பினர்களாக  இருந்தனர். இந்த சங்கத்தினுடைய நோக்கம் ஆயுதமேந்திய போராட்டத்தின் வழியே தேச விடுதலையை அடைவது. தர்மராஜ ஐயர் செங்கோட்டையில் பாரதமாதா சங்கத்தினை நிறுவி அதன் தலைவராகவும் செயலாளராக சாவடி எஸ். அருணாசலம் பிள்ளையும், உறுப்பினர்களாக
ஆர். வாஞ்சிநாதன், சங்கரகிருஷ்ண ஐயர், ஹரிஹர ஐயர், ஜகநாத அய்யங்கார், வெங்கடராம ஐயர், வேம்பு ஐயர் என்ற மகாதேவ ஐயர், பிச்சுமணி ஐயர் மற்றும் கஸ்பா எஸ்.வி. அழகப்ப பிள்ளை ஆகியோர் செயல்பட்டனர்.

சாவடியார் சரிதம்

செங்கோட்டையில் வாழ்ந்து வந்த சாவடி சுப்ரமணிய பிள்ளை, சுவர்ணம்மாள் தம்பதியருக்கு 1893-ம் ஆண்டு சாவடி அருணாசலம் பிள்ளை பிறந்தார். அருணாசலம் பிள்ளை பள்ளிப் படிப்பை செங்கோட்டையில் முடித்தார். 1910ம் ஆண்டு தங்கம்மாள் எனும் பெண்ணை மணந்தார். வாஞ்சிநாதனோடு நல்ல நடப்புறவில் இருந்த அருணாசலம் பிள்ளை செங்கோட்டை பாரதமாதா சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு அதன் செயலாளராகவும் செயல்பட்டார். 1911-ம் ஆண்டு கல்கத்தா மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேருவதற்காக விண்ணப்பித்திருந்தார்.

செங்கோட்டையில் பாரதமாதா சங்கம் சார்ந்த முக்கிய கூட்டங்கள் தர்மராஜ  ஐயர் அல்லது சாவடி அருணாசலம் பிள்ளை ஆகியோருடைய இல்லத்தில் நடைபெறுவதுதான் வழக்கம். அதன்படி 14.-04.-1911 சித்திரை மாதம் முதல் தேதி வெள்ளிக்கிழமை சாவடி அருணாசலம் பிள்ளை இல்லத்தில் புரட்சியாளர்கள் ஏற்பாடு செய்த கூட்டத்தில் நீலகண்ட பிரம்மச்சாரி, வாஞ்சிநாதன், சாவடி அருணாசலம் பிள்ளை, ஓட்டப்பிடாரம் மாடசாமிப் பிள்ளை உள்ளிட்ட பலர் பங்கேற்றார்கள். இக்கூட்டத்தின் முடிவில் திருநெல்வேலியின் ஆட்சியர் ராபர்ட் வில்லியம் எஸ்கோர்ட் ஆஷைச் சுட்டுக் கொல்லவதற்கான திட்டம் தீட்டப்பட்டது.

ஆஷ் கொலைக்
கான காரணங்கள்:

௧. வ.உ.சிதரம்
பரனார் ஆங்கிலேயருக்கு எதிராக சுதேசி கப்பல் கம்பெனி நிறுவி அதனை வெற்றிகரமாக நடத்தியதும் சுப்ரமணிய சிவா துணை
யுடன் கோரல் மில்ஸ் தொழிலாளர்களுக்கு துணையாக இருந்து  அவர்களின் கோரிக்கை வெற்றி பெற செய்ததும். அப்போது துணை கலெக்ட்ராக இருந்த ஆஷ் வ.உ.சி மீது மிகுந்த வன்மம் கொண்டு அவரது செயல்பாடுகளை முடக்க முயன்றதும் தான்.

௨. வங்கத்தில் பொய் வழக்கில் விபின் சந்தரபால் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டதை கொண்டாட தடை மீறி ஊர்வலம் சென்ற வ.உ.சி, சுப்ரமண்ய சிவா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து ஏற்பட்ட மக்கள் போராட்டத்தில் காவல்
துறையின் துப்பாக்கிச் சுட்டில் ௪ பேர் கொல்லப்பட்டனர். அதைதொடர்ந்து காவல்துறை மூலம் பொதுமக்களை கொடூர
மாக தாக்கி கலவரத்தை கட்டுக்கொள் கொண்டுவந்ததால் சுதேசிகளுக்கு அவர்மீது ஏற்பட்ட தீராத பகைமை.

௩. பாரிஸ் இந்திய சங்கத்தி
லிருந்து எம்.பி.டி. ஆச்சாரியா மண்டயம் சீனிவாசாரியருக்கு எழுதிய கடிதத்தில் ௫ம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவினையும் அதன் தொடர்ச்சியாக டெல்லி தர்பார் நிகழ்ச்சியிலும் புரட்சியாளர்கள் ஏதாவது செய்யவேண்டுமென்ற குறிப்பு இருந்தது.

௪.  திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற ஆஷ் குற்றால அறிவியில் காலையில் வெள்ளையர்கள் மட்டுமே குளிக்க வேண்டும். அந்த நேரத்தில் இந்தியர்களுக்கு அனுமதி இல்லை என்ற சட்டம் காரணமாக குற்றாலத்தின் சுற்றுவட்டார மக்களுக்கு வெறுப்பினை ஏற்படுத்தியது.

சித்திரை மீட்டிங் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி செங்கோட்டையைச் சார்ந்த ரகுபதி ஐயரின் மகனான சங்கரன் எனும் வாஞ்சிநாதன் ஆஷை கொல்வதற்காக தேர்ந்
தெடுக்கப்பட்டார். அதுசமயம் வாஞ்சி புனலூர் காட்டிலாகாவில் வன காவலராக (Forest guard) பணியாற்றினார். கொலைத் திட்டத்தை நிறைவேற்றும் பொருட்டு பணியில் இருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு 1910 டிசம்பரில் புதுச்சேரி சென்று வ.வே.சு. ஐயரை சந்தித்ததுடன். கரடிக்குப்பம் எனும் இடத்தில் வைத்து வ.வே.சு ஐயர் வாஞ்சிக்கு துப்பாக்கிச்சுடும் பயிற்சி அளித்தார். பயிற்சி முடிந்து ஊர் திரும்பும் போது வாஞ்சியிடம் கைத்துப்பாக்கி ஒன்றைக் கொடுத்தனுப்பினார்.

செங்கோட்டை வந்த பின்பு மே 15, 1911ல் வாஞ்சி வனக்
காவலர் பணியிலிருந்து விலகினார். ஆஷைக் கொலை செய்யும் பொருட்டு 1911 ஜூன் 13 அன்று இரவு ஒன்பது மணியளவில் வீரராகவபுரம் (திருநெல்வேலி ஜங்ஷன்) ரயில் நிலையத்தில் வந்து இறங்கினார். வாஞ்சியும் சாவடி அருணாசலம் பிள்ளையும் மட்டும் இருப்புப்பாதையின் நடைமேடைக்கு ஒதுக்குப்புறமாக சென்று சிறிது நேரம் உரையாடினார்கள். பின்பு பாரதமாதா சங்க உறுப்பினர்களின் உதவியோடு திருநெல்வேலியில் இருந்தபடியே வாஞ்சிநாதன் கலெக்டர் ஆஷின் செயல்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கினார்.

ஆஷ் கொலை:

ஆஷும் அவருடைய மனைவியான மேரி லிலியன் பாட்டர்சனும் கொடைக்கானலில் படிக்கும் தங்களுடைய குழந்தைகளைப் பார்ப்பதற்காக 1911ம் ஆண்டு ஜூன் 17-ம் தேதி காலை 9.30 மணிக்கு திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து (வீரராகவபுரம்) ரயிலில் பயணப்பட்டனர். இத்தகவலை முன்கூட்டியே அறிந்த வாஞ்சி ஒரு இளைஞரோடு ஆஷ் பயணித்த ரயிலில் ஏறினார். வண்டி மணியாச்சி நிலையத்தை அடைந்த பின்பு வாஞ்சி ஆஷை சுட்டுக் கொன்றார். ஆஷைக் கொன்று விட்டு தப்பியோடிய வாஞ்சி, அருகில் இருந்த கழிவறைக்குள் சென்று தன்னுடைய வாய்க்குள் துப்பாக்கியை வைத்து சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அச்சமயத்தில் வாஞ்சியோடு பயணப்
பட்ட இளைஞர் தப்பியோடிவிட்டார்.

காவல்துறையின் சோதனை:

1911ம் ஆண்டு ஜூன் 17-ம் தேதி அன்று இரவு திருநெல்வேலியைச் சார்ந்த தலைமைக் காவலர், காவலர், தென்காசியைச் சார்ந்த காவல்துறை ஆய்வாளரான ராமச்சந்திர ஐயர் ஆகியோர் வாஞ்சியின் வீட்டை கண்டறிந்து அதனை காவல்துறைக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். மறுதினம் 18-ம் தேதி செங்கோட்டை காவல்துறை ஆய்வாளர் குமாரபிள்ளை  தலைமயில் செங்கோட்டையிலுள்ள வாஞ்சி, சாவடி அருணாசலம் பிள்ளை, ஹரிஹர ஐயர், வெங்கட்ராம ஐயர், ஜகன்நாத ஐயங்கார் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் சாவடி அருணாசலம் அவர்கள் வீட்டிலிருந்து திலகரது வழக்கு விசாரணை, ஜென்ம பூமி எனும் பாரதியாரின் கவிதைத் தொகுப்பு போன்ற புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன. இதுதவிர கல்கத்தா மருத்துவக் கல்லூரியின் ப்ரொஸ்பெக்ட்டஸ் ஒன்றும் காணக் கிடைத்தது.

சாவடி அருணாசலம் பிள்ளை கைது:

சாவடி அருணாச்சலம் பிள்ளை வீட்டில் கண்டெடுக்கப்பட்ட கல்கத்தா மருத்துவக் கல்லூரியின் ப்ரொஸ்பெக்ட்டஸை, அடிப்படையாக கொண்டு சாவடி அருணாச்சல பிள்ளை கல்கத்தாவில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனடிப்படையில் காவல்துறைத் துணைத்தலைவரான P.B. தாமஸ் தலைமையில் கல்கத்தாவுக்கு போலீஸ் படையொன்று, ராபர்ட்ஸ் எனும் உள்ளூர் காவல் ஆய்வாளரோடு இணைந்து சாவடி எஸ். அருணாசலம் பிள்ளையை கல்லூரி விடுதியில் வைத்து 23 ஜூன் 1911-ல் கைது செய்தனர். கைது செய்யப்பட சாவடியின் கை, கால்களில் விலங்கிடப்பட்டு சென்னைக்குக் கொண்டுவரப்பட்டுச் சென்னை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் உடல் ரீதியான,  மன ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு உள்ளானார்.

அடையாள அணிவகுப்பு:

திருநெல்வேலி மாவட்ட மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆஷ் கொலை வழக்கில் தனி நீதிபதி தாமஸ் ICS நியமிக்கப்பட்டார். குற்றம்சாட்டப்பட்ட 13 பேரும் நீதிபதியின் முன்பு வரிசையாக நிறுத்தப்பட்டனர். அவ்வரிசையில் 11-வதாக நின்ற சாவடி அருணாசலம் பிள்ளைதான் வாஞ்சியோடு ஆஷை கொல்ல வந்த இளைஞன் என்று இக்கொலைச் சம்பவத்தினை நேரில் கண்ட பேராசிரியர் ஞானமுத்து என்பவர் நீதிபதியின் முன்பு அடையாளம் காட்டினார். பின்பு இவ்வழக்கானது திருநெல்வேலி சப் டிவிஷினல் மாஜிஸ்ட்ரேட் தம்பு அமர்வுக்கு மாற்றப்பட்டது.

திருநெல்வேலி சதி வழக்கு:

1911 ஆகஸ்ட் 1 ல் ஆஷ் கொலை சம்பந்தமாக குற்றம் சாட்டப் பெற்ற 13 பேர் மீதும் மாஜிஸ்ட்ரேட் தம்பு முன்னிலையில் இ.பி.கோ. 121A (சதிவழக்கு) பிரிவின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்குகளின் ஆரம்பகட்ட விசாரணை ஆகஸ்ட் 18ல் ஆரம்பித்து 30ல் முடிவடைந்தது. விசாரணையின் முடிவில் தம்பு அவர்கள் வழக்கினை சென்னை உயர்நீதிமன்ற விசாரணைக்கு மாறுதல் செய்து உத்தரவிட்டார். இந்தக் கொலை வழக்கு சம்பந்தமான விசாரணையின் ஒரு பகுதியாக சாவடி அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

வாக்குமூலம்:

சாவடி அவர்களின் வாக்குமூலத்தின்படி, 1911ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி செங்கோட்டையிலிருந்து திருநெல்வேலி சென்று 13, 14 தேதிகளில் அங்கேயே தங்கிவிட்டு ஜூன் 15ம் தேதி சென்னைக்குப் புறப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஜூன் 16-ம் தேதி மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் தமிழாசிரியராக பணியாற்றிய அனவரத விநாயகம் பிள்ளை என்பவரின் வீட்டில் தங்கியதாகவும், பின் அங்கிருந்து திருநெல்வேலியிலுள்ள உறவினர் ஒருவருக்கு பணம் கேட்டுத் தந்தி கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். ஜூன் 17-ம் தேதி உறவினர் மணியார்டர் வழியாக அனுப்பிய பணத்தினைப் பெற்றுக்கொண்டு (கொலை நடந்த) அன்றே கல்கத்தாவிற்குப் புறப்பட்டு சென்றதாகவும், பின் ஜூன்-19ல் கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவராக சேர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் செங்கோட்டை பாரதமாதா சங்கத்தில் தானும் ஒரு உறுப்பினர் என்பதை அவர் மறுக்கவில்லை. மேலும் இவ்வாக்குமூலத்தில் சாவடி அவர்களின் பயணம் சம்பந்தமான தகவல்கள் ரயில்வே போலீஸ் சூப்ரண்டெண்ட் கார்டோசாவால் நுட்பமாக ஆராயப்பட்டு உண்மையென்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நீதிமன்ற தீர்ப்பு:

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட திருநெல்வேலி சதி வழக்கினைச் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான சர். அர்னால்ட் வெய்ட்,  சர். சங்கரன் நாயர், ஐலிங் ஆகிய மூவர் அடங்கிய தனிப்பிரிவு (புல் பென்ச்) விசாரித்தது. குற்றம்சாட்டப்பட்டவர்களின் சார்பில் புகழ்பெற்ற வழக்கறிஞர்களான ஆந்திர கேசரி டி. பிரகாசம், சீனிவாச்சாரியார் போன்றோர் வாதாடினர். சுமார் 80 நாட்கள்  நடந்த விசாரணையின் முடிவில் பிப்ரவரி 15, 1912-ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. மூன்று நீதிபதிகளுமே தங்களுடைய தீர்ப்பில் இ.பி.கோ. 12A பிரிவின் கீழ் தொடரப்பட்ட வழக்கினுடைய தீர்ப்பில் சாவடி S. அருணாசலம் பிள்ளை, அழகப்ப பிள்ளை, வேம்பு ஐயர், தேசிகாச்சாரி ஆகிய நால்வரையும் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்தும் எஞ்சிய ஒன்பது பேருக்கு தண்டனை வழங்கியும் தீர்ப்பளித்தனர்.

எளிய வாழ்வு:

சிறையில் இருந்த 237 நாட்களும் சாவடி அவர்கள் அனுபவித்த துன்பங்கள் ஏராளம். சிறைவாசத்தின் விளைவாக உடல் நலிவிற்கு உள்ளானார். இதுதவிர வழக்கு விசாரணைக்காக தம்முடைய செல்வத்தில் பெரும்பகுதியை இழந்ததால் வறுமையில் வாடினார். மருத்துவப் படிப்பினை தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். உடல், மனம், பொருளாதார ரீதியிலான துன்பங்களுக்கு உள்ளான சாவடி அவர்கள் விடுதலைக்குப் பின் ஒரு அமைதியான எளிய வாழ்க்கை வாழ சிறிது காலம் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகியே இருந்தார்.

அறவழிப் பாதை:

மகாத்மா காந்தியின்  வருகைக்கு பின்னர் இந்திய விடுதலைப் போராட்டமானது ஒரு தனி எழுச்சி கண்டது. சாவடி அவர்கள் தன்னையும் மெல்ல மெல்ல அறவழியிலான போராட்டங்களில் ஈடுபடுத்தலானார். ஆங்கிலேயரின் ரௌலட் சட்டத்தை எதிர்த்து 1919-ம் ஆண்டு காந்தியடிகள் நடத்திய ஒத்துழையாமை போராட்டத்தைச் செங்கோட்டை, தென்காசி பகுதிகளில் அம்பாசமுத்திரம் கோமதிசங்கர தீட்சிதருடன் இணைந்து நடத்தியுள்ளார். 1930ம் ஆண்டு வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்யாகிரகத்திற்கு திருநெல்வேலிப் பகுதியிலிருந்து பலரை உற்சாகப்படுத்தி கலந்து கொள்ளச் செய்தார்.

ஹரிஜன விடுதலை

காந்திஜியின்  ஹரிஜன மக்கள் சேவையைக் கருத்தில் கொண்டு, ஒரு விடுதியை 1925-ல் சாவடி அவர்கள் தொடங்கினார். இந்த விடுதியில் வேலை செய்பவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட (ஹரிஜன்) வகுப்பினைச் சார்ந்தவர்களாகவே இருந்தனர். இந்த செய்கை பிற சாதியினரை வெறுப்படைய செய்ததால், “ஹரிஜன  விடுதி” தீக்கிரையாக்கப்பட்டது.:

தனிப்பட்ட வாழ்விலும் பொது வாழ்விலும் பல இன்னல்களை அனுபவித்த சாவடி. அருணாசலம் பிள்ளை அவர்கள் இறுதியாக பாரதியாருடைய நண்பர்களின் உதவியினால் திருநெல்வேலி இந்து கல்லூரியில் தமிழ்த் துறையில் ஆசிரியராகப் பணியாற்றினார். நாட்டு விடுதலைப் போரில் எல்லாவற்றயும் இழந்த சாவடி அருணாசலம் பிள்ளை அவர்கள் 1938 ஏப்ரல் 27 அன்று காலமானார். அப்போது அவர் வயது 45.

முடிவுரை:

ஆஷ் கொலைக்கான காரண காரியங்களை நுட்பமாக ஆராயும் பொழுது, இக்கொலையானது ஆஷ் மீது சுதேசிகள் கொண்டிருந்த தீரா பகை
யின் விளைவாகவே நடந்ததென்பது புலனாகும். சுதேசி பொருளாதாரம் மற்றும் உயிருக்கு ஏற்படுத்திய அச்சுறுத்தலின் விளைவாகவே ஆஷ் மீது பகை உருவானது என்பதனையும் உணரமுடிகிறது. ஆஷ் கொலைக்குப் பின் பாரதமாதா சங்க உறுப்பினர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் சந்தித்த இன்னல்கள், அடக்குமுறைகளை நோக்கும் பொழுது, பாரதமாதா சங்கத்தினரை விடுதலைப் போராட்ட தியாகிகள் என்பதே சத்தியம்.     