உத்தரகண்டில் பிரசித்தி பெற்ற கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு இடங்களில் உள்ள கோவில்கள், கடும் பனிப்பொழிவு இருக்கும் காரணத்தால், குளிர் காலத்தில் மூடப்பட்டு கோடை காலத்தில் திறக்கப்படும்.
இந்த நான்கு கோவில்களுக்கும் பக்தர்கள் செல்லும் யாத்திரை, ‘சார்தாம்’ யாத்திரை எனப்படுகிறது.
இந்நிலையில் அட்சய திருதியையொட்டி, கேதார்நாத், யமுனோத்ரி ஆகிய கோவில்கள் திறக்கப்பட்டன. கேதார்நாத் கோவில் திறப்பு நிகழ்ச்சியில், பா.ஜ.,வைச் சேர்ந்த மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, அவரது மனைவி கீதா ஆகியோர் பங்கேற்றனர். மேலும், 10,000க்கும் மேற்பட்ட பக்தர்களும் பங்கேற்றனர்.
கோவில் திறக்கப்படுவதையொட்டி, கோவில் வளாகம் முழுதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும், பக்திப் பாடல்களின் இசைக் கச்சேரியும் நடந்தது.
இதே போல், உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள யமுனோத்ரி கோவில், காலை 7:00 மணிக்கு திறக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து, நேற்று மதியம் கங்கோத்ரி கோவிலும் திறக்கப்பட்டது. பத்ரிநாத் கோவில் நாளை திறக்கப்பட உள்ளது.