தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் கூத்தனூரில் அன்னை சரஸ்வதிக்கு கோயில் உள்ளது என்பது நமக்கு தெரியும். அப்படியே பாரதத்தின் மணிமுடியில் தாய்க்கு ஒரு ஞானத் திருக்கோயில் சாரதாபீடம் –பல நூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்தே உள்ளது என்பது நாம் அனைவரும் தெரிந்து கொள்ள – பெருமை கொள்ள வேண்டிய ஒன்று.
சாரதா பீடம் என்றால் ‘சாரதையின் இருக்கை’ அதாவது அன்னை நித்யவாஸம் செய்யும் இடம் என்று பொருள். வாருங்கள், கொஞ்சம் ஆன்மீக உலா போய் வருவோம். எங்கே அமைந்துள்ளது?
காஷ்மீரத்தில் (பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு -காஷ்மீரில்) முஸாபராபாத் நகரிலிருந்து சுமார் 207 கி.மீ தூரத்திலும், பாரத -பாக் எல்லைக் கோட்டில் உள்ள குப்வாராவில் இருந்து 30 கி.மீ தூரத்திலும் சாரதா கிராமம் அமைந்துள்ளது. மேலும் ஒரு சிறப்பு என்ன வென்றால், இந்த கிராமம் கிஷன்கங்கா (இன்னொரு பெயர் நீலம்) மதுமதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நீலம் பள்ளத்தாக்கில், அழகு கொஞ்சும் பிரதேசத்தில் உள்ளது. இந்த பகுதி பனிபடர்ந்த நங்கபர்பத் மலைத் தொடரின் சாரதா – நாரத சிகரங்களுக்கு இடையில் உள்ளது.
வரலாறு – புராதனம்
சாம்ராட் அசோகரால் பொது ஆண்டு முன் 273ல் புத்தமத கலாசாலை நிறுவப்பட்டது.
மஹாராஜா கனிஷ்கரால் பொது ஆண்டு பின் 141ல் சாரதா பீடத்தில் 4வது புத்த அறிஞர்களின் அவை சந்திப்பு நடத்தப்பட்டது.
கவி கல்ஹணர் தன்னுடைய ராஜ தரங்கிணி என்ற 11வது நூற்றாண்டில் இயற்றப்பட்ட காவியத்தில் சாரதா ஆலயத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
அல் பெரூனி என்பவர் இன்றைய தஜிகிஸ்தான் – உஸ்பெஸ்கிஸ்தான் என்றறியப்படும் பகுதிகளைச் சேர்ந்தவர்.
அல் பெரூனி வெளிநாட்டிலிருந்து (மத்திய ஆசிய) வந்த சரித்திர ஆராய்ச்சியாளர். இவர் சமஸ்கிருதம், பாரசீகம் என்று எழெட்டு மொழிகள் அறிந்தவர். அவர் பாரதத்திற்கு பொது ஆண்டு முன் 1036ல் வந்த போது காஷ்மீரத்திற்கு பயணம் செய்திருக்கிறார். அங்கு சாரதையின் பெரிய விக்கிரகம் இருந்ததாகவும் பெரும் எண்ணிக்கையில் யாத்ரிகர் திரண்டிருந்திருந்ததாகவும் தன்னுடைய பயணநூலில் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் 500 வருடங் களுக்குப் பின்னர் அக்பர் காலத்தில் வாழ்ந்து அய்னி அக்பரி எழுதிய அபுல் பஸலும் சாரதையின் கோயிலைப் பற்றி விவரித்துள்ளார்.
டோக்ரா என்ற ஜாம்வால் வம்சாவளி முதல் அரசர் மஹாராஜா குலாப்சிங். அவர் ஆட்சி புரியத் துவங்கிய ஆண்டு 1846. அதுவரை முஸ்லிம் படையெடுப்புகளின் போது சிதைக்கப்பட்ட பல கோயில்களை புதுப்பித்துச் செப்பனிட்டார். அவற்றுள் முதன்மையானது சாரதா பீடம். இந்த வம்சத்தின் கடைசி அரசர் ஹரிசிங்.
ஊடாடும் ஆன்மீக இழை
ஆதிசங்கரர் பாரத நாடெங்கும் தன் சீடர்களுடன் திக்விஜயம் செய்த போது காஷ்மீரத்தில் சைவமும் (சிவ வழிபாடு) சாக்தமும் (சக்தி வழிபாடு) புத்துயிர் பெற பெரும் முயற்சி மேற்கொண்டு வெற்றி பெற்றார். இடைப்பட்ட காலத்தில் காஷ்மீரத்தில் புத்த மதம் ஓங்கி இருந்திருக்கிறது. அவர்களை, ஆதிசங்கரர் சமய உரையாடல்கள் வாத பிரதிவாதம் நிகழ்த்தி சனாதன தர்மத்தின் மேன்மையை அவர்களுக்கு உணர்த்தி, அவர் தம் மனங்களை வென்று ஹிந்துமதத்தை ஏற்கச் செய்துள்னார். அவருடைய இலக்கிய நயம் மிக்க இறைவனின் தெய்வீக அழகைப் பாடும் செனந்தரிய லஹரி என்ற நூலை காஷ்மீரில் எழுதியதாகத் தெரிகிறது. இயற்கையின் அழகு மிளிரும் காஷ்மீரையே சங்கரர் அன்னையின் வடிவமாய் கண்டிருப்பாரோ?
காஸ்யப ரிஷி ஏழு ரிஷிகளுள் ஒருவர். காஷ்மீரம் என்ற பெயர் கச்யயமிர் அதாவது, காச்யப முனிவர் ஏற்படுத்திய ஏரி அல்லது காச்யப மேரு காச்யபமலை என்பதன் மருவிய வடிவமாக இருக்க வேண்டும். வரலாற்று அறிஞர்களின், புராணங்களை படித்தவர்களின் கருத்து அலெக்சாண்டரின் படைகளின் பயண வரலாற்றைக் குறிப்பிடும் கிரேக்க புத்தகம் பண்டைய காஷ்மீரை காஸ்பேரியா என்று பதிவு செய்திருக்கிறது. ஆயிரம் ஆண்டுகள் முன்னர் வாழ்ந்த ராமானுஜரும் சீடர்கள் உடன் வர யாத்திரை, மேற்கொண்டு அன்னை சாரதையைத் தரிசனம் செய்தார். வேதாந்தத்திற்கு அவர் எழுதிய விளக்கவுரை (பாஷ்யம்) அன்னையின் சன்னதியில் சமர்ப்பித்து, அதன் ஏற்று அங்கீகரிக்குமாறு வேண்டினார். அன்னை மிகவும் மகிழ்ந்து இது சாதாரண விளக்கவுரை அல்ல, பாஷ்யங்களுள் உயர்வானது என்று பொருள்பட, ராமானுஜரின் படைப்பு ஸ்ரீபாஷ்யம் என்று அழைக்கப்படும் என்று அசரீரியாக ஒலித்து ஆசீர்வாதம் அளித்தாள்.
கர்நாடக சங்கீதத்தின் மூம்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதர் சரஸ்வதியைப் போற்றி எழுதிய பாடலில் அன்னையை காஷ்மீரபுர வாஸினி (காஷ்மீரத்தில் வசிப்பவளே) என்று அழைக்கிறார்.
இன்றளவிலும், காஷ்மீரத்து மக்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும், தங்கள் காலை பிரார்த்தனையில் “நமஸ்தே சாரதா தேவி காஷ்மீர புரவாஸினி த்வாம் வரம் பிரார்த்தயே நித்யம் வித்யாதனம் ச தேஹிமே” என்று வேண்டுகிறார்கள். (பொருள் : சாரதே, தேவியே, காஷ்மீரத்தில் வாசம் செய்பவளே, யான் உன்னை தினமும் துதிக்கிறேன், அடியேனுக்கு ஞானச் செல்வத்தினை அளிப்பாய்)
புனித யாத்திரை
சாரதாபீடம் என்னும் இந்த சரஸ்வதி கோயிலுக்கு பாரத நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பாமரர்கள் முதல் துறவிகள் வரை பன்னெடுங்காலமாய் புனித யாத்திரை மேற்கொண்டு புண்ணியம் அடைந்துள்ளனர் என்று தெரிகிறது. 1947ல் ஆண்டு நாம் சுதந்திரம் அடைந்து 100 நாட்களுக்குள் பாகிஸ்தான் நயவஞ்சமாக போர்தொடுத்து நம் ஜம்மு- காஷ்மீரின் பெரும் பகுதியை ஆக்ரமித்துக் கொண்டதால் சாரதா பீட யாத்திரை நின்று போயுள்ளது. கோயிலும் பராமரிப்பின்றி பொலிவிழந்து உள்ளது. குறிப்பாக அக்டோபர் 2005ல் நிலநடுக்கத்தாலும் இந்த கோயில் சிதிலமடைந்தது.
சீக்கிய மத ஸ்தாபகர் குருநானக் பிறந்த தால் வாண்டிக்கு வருடம்தோறும் புனித யாத்திரை மேற்கொள்ளபாக் அரசும்நம் அரசும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.அதைப்போல சாரதா பீடத்திற்கும் யாத்ரிகர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாகவே பலரும் முயற்சி செய்து வருகின்றனர். அவர்களுள் ரவீந்திர பண்டிதர் என்பவரும் முக்கியமானவர் (பார்க்க பெட்டிச் செய்தி). அதுவும் சமீபத்தில் கர்தார்பூர் தடம் திறக்கப்பட்டு சீக்கியர்கள் தால் வாண்டிக்கு சுலபமாக சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டவுடன் சாரதா யாத்திரை கோரிக்கை இன்னும் வலுவடைந்துள்ளது.
ராணுவ ரீதியிலும் நன்மை
சாரதா பீடம் அமைந்துள்ள பகுதி பாகிஸ்தானின் ஆக்ரமிப்பில் இருந்தாலும், ஏற்கனவே நம்முடைய பாரத நாட்டின் ராணுவம் இந்த பகுதியில் கவனம் செலுத்தி எப்பொழுது தேவையென்றாலும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கத் தயார் நிலையில் உள்ளது. நாம் மலையின் மேல் பகுதியில் கண்காணிப்பைப் பலப்படுத்தி உள்ளதால் எளிதில் எதிரியை சமாளிப்பது மட்டுமல்ல வலு விழக்கச் செய்யக் கூடிய வசதியான நிலையில் இருப்பதாகவும் அந்த பகுதியில் பணிபுரிந்த அனுபவமுள்ள லெட் ஜெனரல் சய்யத் அல்ஹஸ்னின் கூறுகிறார். (பார்க்க பெட்டிச் செய்தி) பாக். ராணுவம் அவ்வளவு எளிதில் ஒப்புக் கொள்ளாது என்றாலும் நாம் தொடர்ந்து யாத்திரைக்கு முயல வேண்டும் – பாக் அரசு மீது நிர்ப்பந்தங்கள் கொண்டு வர வேண்டும் என்கிறார் இவர்.
சாரதா எழுத்து வரி வடிவம் – கலாச்சாரம்
தேவநாகரி எழுத்து வடிவம் போல சாரதா எழுத்து வடிவம் பொது ஆண்டு முன் 8ல் இருந்து 12 நூற்றாண்டு வரை பிரபலமாக இருந்ததாய் தெரிகிறது. பிராம்மி மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. அன்றைய பாரதத்தின் வடமேற்கு பகுதிகளில் காஷ்மீர், பஞ்சாப், சிந்து, இன்றைய ஆப்கானிஸ்தான் வரை பரவியிருந்தாகத் தெரிகிறது. சீக்கியர்கள் அதிகம் பயன்படுத்தும் குருமுகி சாரதா எழுத்திலிருந்ததாகத் தெரிகிறது. சாரதா எழுத்து வடிவத்தை மீண்டும் உயிர்ப்பித்து பழைய நூல்கள் மொழி பெயர்த்து வெளி உலகிற்கு கொண்டு வந்தால் புராதனமான சாரதா – காஷ்மீர் கலாச்சாரத்தை அதன் மாண்பை அனைவரும் போற்றுவர். சாரதா பீடத்தைக் காப்போம் (Save Saradha Committee) என்ற கோஷத்துடன் கர்நாடகாவில் ஒரு குழுவினர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் 2018 செப்டம்பர் மாதம் இந்த கருத்தை வலியுறுத்தி இரண்டு நாட்கள் பெங்களூரில் மாநாடு நடத்தியுள்ளனர். அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
- பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குச் செல்ல காஷ்மீர் ஹிந்துவிற்கு விசா தேவையின்றி சுதந்திரமாக சென்று வர பாக்.அரசை பாரத அரசு ஒப்புக் கொள்ள வைக்க வேண்டும்.
- சாரதா பீட யாத்திரை ஆண்டிற்கு ஒரு முறையாவது நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சாரதா பல்கலைக்கழகத்தை ஜம்மு-காஷ்மீரில் நிறுவுவோம்.
அன்னை சாரதையின் கலாச்சாரம் புத்துயிர் பெற்றுப் ஞானத்தின் ஒளி எங்கணும் பரவ வேண்டும் என்று நாமும் பிராத்திப்போம்.
Excellent article. Very USEFUL.