வழக்கமாக சாதனை புரிந்தவர்களின் பிறந்த நாளில் அவர் சாதித்த துறை குறித்து விழா கொண்டாடப்படும். ஆனால், சர் சி.வி ராமன் நோபல் பரிசு பெற காரணமான ‘ராமன் விளைவு’ கோட்பாட்டை உலகுக்கு அறிவித்த நாளான பிப்ரவரி 28 நம் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. ராமனின் பல்வேறு ஆராய்ச்சிகளில், கடல் ஏன் நீல நிறத்தில் உள்ளது என்பதற்கான காரணத்தை விளக்கும் ராமனின் ஆராய்ச்சிக்குத்தான் நோபல் பரிசு கிடைத்தது.
உலகின் ஒவ்வொரு பொருளும் தனக்கே உரிய பிரத்யேகமான மாதிரியில் ஒளித்துகள்களின் அலை நீளங்களை மாற்றுகிறது. இதை அறிந்துகொள்வது என்பது அந்தப் பொருளின் கைரேகையைப் பதிந்து வைத்துக்கொள்வது போன்றது. ராமன் ஸ்பெக்ட்ராமீட்டர் கருவியைக் கொண்டு ஒருவர் என்ன பொருளை மறைத்து எடுத்துச் செல்கிறார் என்பதைத் துல்லியமாகச் சொல்லிவிடலாம். விமான நிலையங்களில் போதை மருந்துக் கடத்தலைத் தடுக்க இக்கருவி பயன்படுகிறது.
ராமன், இந்திய இசைக்கருவிகள் குறித்தும் ஆராய்ச்சிகளைச் செய்தார். உலகின் அனைத்து தாள வாத்தியங்களிலும் மிருதங்கம், தபேலா ஆகிய இரண்டு மட்டுமே இசைவலைகளை (ஹார்மோனிக்ஸ்) உற்பத்தி செய்யக்கூடியவை என்று அவர் கண்டுபிடித்தார்.
ராமன் பள்ளிக் குழந்தைகள்மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். இந்தியா அறிவுத் துறைகளில் சிறந்த நிலைக்கு உயரவேண்டும் என்றால் இளைய சமுதாயத்தால் மட்டுமே அதனைச் செய்ய முடியும் என்று அவர் நம்பினார்.
சர் சி.வி ராமனின் நினைவு தினம் இன்று.