சர்ச்சையை கிளப்பும் சமாஜ்வாதி தலைவர்

பீகாரின் ராஷ்டிரிய ஜனதாதள கட்சியை சேர்ந்த அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சந்திரசேகர், சமீபத்தில் ராம பக்தரான துளசிதாசர், 15ம் நூற்றாண்டில் அவதி மொழியில் கவிதை நடையில் எழுதிய ஹிந்துக்களின் புனித நூல்களுல் ஒன்றான ‘ராம்சரித்மானஸ்’ குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு பா.ஜ.க தலைவர்களூம் ஹிந்து அமைப்பினரும் மடாதிபதிகளும் பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்  சுவாமி பிரசாத் மௌரியா, “மதம் எதுவாக இருப்பினும் அதை நான் மதிக்கிறேன். ஆனால் மதத்தின் பெயரில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அவமதிப்பதை ஏற்க முடியாது. இதனால் பல கோடி மக்கள் ராம்சரித்மானஸை படிப்பதில்லை. ஏனெனில் அதில் துளசிதாஸர் தனது சொந்த விருப்பத்திற்காக எழுதிய அனைத்தும் குப்பைகளே. இந்நூலில் அவர், பெண்களையும் சூத்திரர்களையும் விலங்குகளுடன் ஒப்பிட்டு, அவர்கள் மீது தாக்குதல் நடத்தவும் தூண்டுகிறார். ராம்சரித் மானஸின் சில பக்கங்களுக்கு அல்லது முழு நூலுக்கும் மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்” என கூறியுள்ளார். ராம்சரித்மானஸ் குறித்து மௌரியா கூறிய கருத்துக்கு உத்தரப் பிரதேசம் உட்பட பல மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மௌரியா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ஹிந்து அமைப்பினரும் உத்தரப் பிரதேச அரசை வலியுறுத்தி வருகின்றன. உ.பி. மாநில பா.ஜ.க தலைவர் பூபேந்தர் சௌத்ரி, பாரதிய சுஹல்தேவ் சமாஜ் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் உள்ளிட்டோர் சுவாமி பிரசாத் மௌரியா மீது நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்தியுள்ள சூழலில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்சிங் யாதவ், “மவுரியா கூறியது அவரது சொந்தக்கருத்து” என்று கூறி இந்த பிரச்சனையில் இருந்து தப்பித்துக்கொண்டுள்ளார்.