சுவாமி விவேகானந்தர் 125 ஆண்டுகளுக்கு முன்பு கூறியது இன்றும் பொருத்தமாக உள்ளது. ஒரு ஹிந்து மதம் மாறினால் ஹிந்து சமுதாயத்தின் எண்ணிக்கை ஒன்று குறைந்து விட்டது என்று மட்டும் பொருளல்ல. மாறாக எதிரியின் எண்ணிக்கை ஒன்று அதிகரித்து விட்டது, என்று சுவாமிஜி கூறியுள்ளார்.
1899 ஏப்ரல் 1 தேதி பிரபுத்த பாரதம் பத்திரிகையாளருடன் மதம் மாற்றம், ஹிந்துத்துவம், தாய் மதம் திரும்புகிறவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றியெல்லாம் விவேகானந்தர் பேசியுள்ளார். அப்போது, நாகரீகம் உள்ள எந்த சமுதாயமும் மத மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாது, என்று கூறினார்.
மதமாற்றம் நம் நாட்டில் நீண்ட காலமாக நிலவி வரும் பிரச்சினை ஆகும். மகாத்மா காந்தி கூட மதமாற்றத்தை எதிர்த்துள்ளார். எந்த ஒரு மனிதனும் மற்றொரு மனிதனை மதமாற்றம் செய்யக் கூடாதென்று அவர் நம்பினார். மனிதாபிமான செயல்கள் மூலம் மதமாற்றம் செய்வதென்பது மன நோயின் அறிகுறி என்று அவர் கருதினார். ஆசை காட்டி, அச்சுறுத்தி, ஏமாற்றி குறிப்பாக ஏழை, வறுமையில் இருப்பவர்களை, மதமாற்றம் செய்வதை காந்திஜி கண்டனம் செய்துள்ளார்.
நம் நாட்டில் மனிதாபிமான செயல், வறுமை ஒழிப்பு, லவ் ஜிகாத் போன்ற மோசடியான வழிகளில் எண்ணற்றோர் மதமாற்றம் செய்யப்
படுகின்றனர். பாரதத்தில் முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் திட்டமிட்ட ரீதியில் ஹிந்துக்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். அதன் விளைவாக உருவானது தான் பாகிஸ்தானும் வங்க தேசமும். அந்த மதமாற்றத்தின் விளைவுதான் இன்றும் அந்த அண்டை நாடுகளுடனான உறவில் நெருடலாக வெளிப்படுகிறது.
இந்த சூழ்நிலையில்தான் 125 ஆண்டுகளுக்கு முன்பு சுவாமி விவேகானந்தர் மதமாற்றத்தின் அபாயம் குறித்து எச்சரித்தது பொருந்தி வருகிறது. மதமாற்றத்தால் ஹிந்துவின் எண்ணிக்கை குறைவது மட்டுமல்ல எதிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று அவர் எச்சரித்தார். மதமாற்றம் இன்றைய ஹிந்து சமுதாயத்திற்கு பெரும் பிரச்சினையாக வடிவெடுத்து, பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஜனநாயகம், மதசார்பற்ற தன்மை என்ற பெயரில் பாரதத்தில் மதமாற்றம் ஊக்குவிக்கப்படுகின்ற அதே வேளையில் பல மூஸ்லிம் நாடு
களில் மத மாற்றம் சட்டவிரோதமாக கருதப்படுகிறது. சவுதி அரேபியா, சூடான், சோமாலியா, ஜோர்டான், எகிப்து போன்ற நாடுகளில் சட்ட
ரீதியாக மதமாற்றம் தடை செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி மதமாற்றம் செய்வோருக்கு கடுமையான தண்டனையும் சட்டரீதியாக வழங்கப்படுகிறது.
மாலத்தீவு நாட்டில் முஸ்லிமாக இருந்து வேறு மதத்திற்கு மாறினால் அவரது குடியுரிமை பறிக்கப்படும். இந்த நாடுகளுடனும் உலகின் பிற பகுதிகள் இதே போன்று உள்ள மற்ற சில நாடுகளிலும் மதமாற்றம் தடை செய்யப்பட்டுள்ளதை ஒப்பிடும்போது பாரதத்தில் மதமாற்றத்தை அனுமதிப்பது பிற்போக்குத்தனம் என்று தெளிவாகத் தெரிகிறது.
மதமாற்றத்திற்கு எதிராக குஜராத், மத்திய பிரதேசம், உத்திரப்பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட், உத்ரகண்ட் போன்ற இந்திய மாநிலங்களில் மதமாற்ற தடைச் சட்டம் இயற்றப் பட்டுள்ளன. இருந்தாலும், நடைமுறையில் மதமாற்றத்தை தடுப்பதில் அவை எவ்வளவு பயனுள்ளதாக உள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
பாரதத்தின் பல பகுதிகளில் நடைபெற்று வரும் தீவிர மதமாற்றத்தால் சமூக நல்லிணக்கத்திற்கும் தேச பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதனால் நாட்டின் பல பகுதிகளில் எண்ணற்ற அமைப்புகள் தோன்றி இளைஞர்களிடையே தேச ஒருமைப்பாடு, மதமாற்ற அபாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.
ராஜஸ்தானின் பல பகுதிகளில் மதமாற்றங்கள் நடந்து வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாநில தலைநகரான ஜெய்ப்பூருக்கு வெகு அருகில் மிகப்பெரிய மதமாற்ற நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட சதி செயல் சில ஆண்டுகளுக்கு முன்பு அம்பலமானது உங்களுக்கு நினைவிருக்கலாம். மேவாட் மற்றும் பிராஜ் பகுதியிலும் இது போன்ற சதி செயல்கள் வெளிப்பட்டுள்ளன.
ராஜஸ்தானில் மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவர பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் சிறுபான்மையினரை தாஜா செய்யும் போக்கை கொண்ட காங்கிரஸ் ஒரு தலைப்பட்சமாக இந்த முக்கியமான விஷயத்தை கருத்தில் கொள்ள மறுத்தது. இப்போது வந்துள்ள பாஜக அரசு மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வர முடிவெடுத்துள்ளது நல்ல விஷயம்.
மாநில அரசு, மதமாற்றத்தை சட்ட விரோதமென தடை செய்ய சட்டம் (The Rajashthan Prohibition of Unlawful Conversion of Religion Bill -2024) கொண்டு வருவதன் மூலம் மதமாற்றம் செய்பவர்களை கடுமையாக தண்டிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டம் நிறைவேறிய பின்பு ஆசை காட்டி, அச்சுறுத்தி, ஏமாற்றி மதமாற்றம் செய்ய தனி நபர்களாலோ அமைப்புகளாலோ முடியாமல் போகும். மீறி செய்ய முயற்சிக்கும் நபர்களும் அமைப்புகளும் கடுமையாக தண்டிக்கப்படும்.
மதமாற்றம் செய்யும் நோக்கத்துடன் திருமணம் செய்து கொண்டால் குடும்ப நீதிமன்றங்களே அந்த விவாதத்தை ரத்து செய்து விடும் அதிகாரம் பெறும். இந்த சட்டத்தின்படி மதமாற்றம் செய்வது ஜாமினில் வெளிவர முடியாத குற்றமாக கருதப்படும். அந்த வகையில் இது முற்போக்கான சட்டம் தான்.
இதுபோன்ற சட்டம் தேவையான கடந்த இரண்டு பத்தாண்டுகளாக கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. கடந்த, 15 ஆவது சட்டசபை, அமர்வில் இதுபோன்ற சட்டத்திற்கான வரைவை (Rajesthan Prohibition of Unlawful Conversion of Religion Bill -2023) தனிநபர் மசோதாவாக நான் முன்வைத்தேன். ஆனால் அப்போதைய சபாநாயகர் இது அரசியல் சாசனம் 25க்கு எதிரானது என்று கூறி மறுத்துவிட்டார். பக்க சாய்வு கொண்ட காங்கிரஸ் அரசு நான் முன்வைத்த தனிநபர் மசோதாவை விவாதிக்க கூட மறுத்தது.
பாஜக சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்டு இந்த விஷயத்தை சட்டமன்றத்திற்கு உள்ளும் வெளியேயும் உறுதியாக முன்னெடுத்தது. மதமாற்றத் தடைச் சட்டம் வேண்டுமென்று வீடு தோறும் விஷயத்தை எடுத்துச் சென்றது. மாநில மற்றும் தேசிய நலன் கண்ணோட்டத்தில் இது முக்கியமான விஷயம் என்பதையும் குஜராத், உத்திரபிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் இது போன்ற சட்டம் அமலில் உள்ளதையும் மக்கள் மன்றத்தில் வைத்தது. இப்போது ராஜஸ்தானில் ஆட்சி அமைத்துள்ள பாஜக அரசு இந்த முக்கியமான விஷயத்தை சட்டமாக்க முன் வந்துள்ளது.
மதமாற்ற தடை சட்டம் எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தினுடனோ அல்லது சமய பிரிவினோடோ தொடர்புடையது அல்ல. மாறாக சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பது தொடர்பானது. இது எந்த ஒரு தனி நபரின் மத சுதந்திரத்தையோ அல்லது இறை தேர்வையோ மறுப்பது அல்ல என்பதால் இந்த சட்டம் நியாயமானது.
மதமாற்றமானது எந்த ஒரு தேசத்திலும் ஜனநாயகத்திலும் சமூக, அரசியல், சட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடாது. எனவே கட்டாய மதமாற்ற தடை சட்டமானது அவசியம். எவரொருவரும் தனது மதத்தை பின்பற்ற உரிமை வேண்டும். ஆனால் மதம் மாற வற்புறுத்தக் கூடாது என்று பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இது தொடர்பாக முக்கியமானதொரு கேள்வியும் எழுப்பப்படுகிறது. பல்வேறு காரணங்களால் மதமாறிச் சென்றவர்கள் இப்போது தாய் மதம் திரும்ப விரும்பினால் என்ன செய்வது என்பதே அது பிரபுத்த பாரதம் பத்திரிக்கை நிருபர் எழுப்பிய இந்த கேள்விக்கு சுவாமி விவேகானந்தர் பதிலளித்துள்ளார். அவ்வாறு தாய் மதம் திரும்ப விரும்புகின்றவர்கள் மகிழ்வுடன் வரவேற்கப்படவேண்டும். அவர்களுடைய பூர்வ சமய நம்பிக்கை
யில் இணைத்துக் கொள்ள வேண்டு
மென சுவாமிஜி கூறியுள்ளார்.
நன்றி: – பிசினஸ் கார்டியன் 14 டிசம்பர் 2024
கட்டுரையாளர் :
முன்னாள் பாஜக ராஜஸ்தான் மாநிலத் தலைவர்
தமிழில் : திருநின்றவூர் ரவிக்குமார்