‘ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி’ எனச் சொல்வோமே அப்படித் தழைத்துள்ளது சனாதன தர்மம். பாரதத்தில் மட்டுமல்ல பாரெங்கிலும் சனாதனம் போற்றப்படுகிறது என்பதற்குச் சான்றாக இதோ இரு நிஜ வாழ்க்கை சம்பவங்கள்:
டாக்டர் அனிதா ராகவன் அரங்கத்திலிருந்து அமெரிக்கா சென்று கடந்த முப்பதாண்டுகளாக மருத்துவ சேவையாற்றி வருபவர். சில வருடங்களுக்கு முன் ஸ்டீவ்ஸ் எனும் அமெரிக்கர் சரும நோய் குறித்து மருத்துவ ஆலோசனை பெற வந்திருக்கிறார். அவரது முதுகில் மிகப் பெரிய “டாட்டூ” இருந்ததால் அதை நீக்கினால் தான் சருமத்தை பரிசோதிக்கமுடியும் என அனிதா ராகவன் கூற, “நீங்கள் இவ்வாறு கூறலாமா? உங்கள் பெயர் ராகவன் என்று முடிகிறதே? நீங்கள் ஹிந்து தானே? நீங்கள் எப்படி டாட்டூவை அழிக்கச் சொல்கிறீர்கள்? என் முதுகிலுள்ள டாட்டூவை சரியாகப் பாருங்கள்” என்றாராம் ஸ்டீவ்ஸ்.
அப்படியென்ன ‘பொம்மை’ வரைந்திருக்குமென்று பார்த்தால், என்ன ஆச்சரியம்! ஆழ்வார்கள் கொண்டாடிய அமலன் ஆதிபிரான் நாராயணன் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அடடா! ஸ்டீவ்ஸின் மேனியில் ஸ்ரீமன் நாராயணன்! ஏன்?
ஸ்டீவ்ஸ் அமெரிக்க ராணுவ வீரர். தைவானில் பாதுகாப்பு பணிக்காக சென்றுள்ளார். அங்கிருந்த ராணுவ வீரர்கள் கூறினராம், முகத்துக்கு நேரே வரும் எதிரியை வீழ்த்திவிடலாம் ஆனால் முதுகுக்குப் பின்னாலிருந்து தாக்கும் எதிரியிடமிருந்து நம்மை காக்க மகாவிஷ்ணுவால் மட்டுமே முடியும்; ஆகவே முதுகில் அவர் திருவுருவத்தைப் பொறித்துக்கொள்ளுங்கள், எங்களைப்போல என்றனராம். மஹாவிஷ்ணு பற்றிய புராண நூல்களையும் வாசிக்கத் தந்தனராம். அதன் விளைவு, நம்பிக்கையுடன் ஸ்டீவ்ஸும் உடன் சென்ற பதின்மூன்று வீரர்களும் முதுகில் விஷ்ணுவை டாட்டூவாக்கி விட்டனர்.
இப்போது ஸ்டீவ்ஸ் கூறினார்: “எப்பேர்ப்பட்ட சூழலிலும் டாட்டூவை நீக்கமுடியாது. ஒரு வேளை எனக்கு சருமப் புற்றுநோயாகவே இருந்தாலும் கூட நாராயணன் பார்த்துக்கொள்வான்!”
நம்ப முடிகிறதா?
***
மற்றொரு அனுபவம்:
டோன்னா எனும் பெண்மணி டாக்டர் அனிதா ராகவனிடம் மருத்துவ ஆலோசனைக்கு வந்தார். சில பல பரிசோதனைகள் செய்தபின் பயாப்ஸிக்கு பரிந்துரைத்தபோது வீட்டில் சில பிரச்சினைகள், அதையெல்லாம் சரி செய்துவிட்டு இரண்டு அல்லது மூன்று மாதம் கழித்து வருகிறேன் என்றாராம். மூன்று மாதம் என்பது மிக தாமதம், அதுவே ஆபத்தாகலாம் என டாக்டர் எச்சரிக்க, “ஆபத்து தானே? பதினெட்டு முறை நாராயணா எனக் கூறினால் போதுமே? ஆபத்து அகலும்” என்று பதில் வரவே அசந்துவிட்டார் டாக்டர். மிகுந்த ஆச்சரியத்துடன அது பற்றி கேட்டபோது மடை திறந்த வெள்ளம் போல் பதில் வந்தது.
அமெரிக்காவில் மிட்வெஸ்ட் பகுதியில் வாழ்கிறார். ஒரு முறை டொர்னாடோ எனப்படும் சூறாவளியில் டோன்னாவின் குடும்பம் சிக்கிக்கொண்டது. வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் அவசர உதவி வாகனங்கள் கூட வரமுடியாத சூழ்நிலை. செய்வதறியாமல் தவித்தபோது அடுத்த வீட்டில் குடியிருந்த இந்தியர்கள் டோன்னாவுக்கு தைரியம் சொல்லி ‘நாராயணா’ என்று பதினெட்டு முறை ஜபிக்கச் சொன்னார்களாம். விஷ்ணுவின் திருவுருவப் படம் உங்களிடம் இருக்காது, பரவாயில்லை. ஒரு மூலையில் நின்று அந்தத் திசை நோக்கி நாராயணா நாராயணா எனக் கும்பிடுங்கள் என்றார்களாம். சிரத்தையுடன் டோன்னா குடும்பத்தினர் வேண்டினர்.
உடையவர் உபதேசித்த “ஓம் நமோ நாராயணாய” மந்திரம் ஆயிரம் வருடங்களாகியும் பல ஆயிரக்கணக்கான மைல் தொலைவில் அன்று எதிரொலித்தது. பிறகு வெள்ளம் வடிந்து உதவி கிடைத்தது வேறு விஷயம். ஆனால் இன்று வரை நாராயணனை அழைக்க மறப்பதில்லை டோன்னா!
***
இங்கு நாம் வியப்பது நடந்த அதிசயத்தைப் பார்த்து அல்ல; ஸ்டீவ்ஸ் / டோன்னாவின் நம்பிக்கையைப் பார்த்து. நல்லது, கெட்டது எது நடந்தாலும் நாராயணனே நமக்கே பறை தருவான் என்ற உயரிய சிந்தனை தான் பரிபூரண சரணாகதி அல்லவா ?
(பிணியாளர்கள் பெயர்கள் மட்டும் மாற்றப்பட்டுள்ளது).