சட்டவிரோத வந்தேறிகளுக்கு உரிமை கிடையாது ரோஹிங்யாக்கள் வெளியேற்றம் சரியே: உச்சநீதிமன்றம்

இவ்வருடம் மே மாதம் 8ம் தேதி உச்சநீதிமன்றம் ஒரு முக்கிய நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி உள்ளது. தலைநகர் டெல்லியில் சட்டவிரோதமாக குடியேறி உள்ள ரோஹிங்யாக்களை பாரதத்திலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் உச்சநீதிமன்றம் தலையிடாது என்பதை குறிப்பிட்ட அமர்வில் அங்கம் வகித்த நீதிபதிகள் மூவரும் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டனர்.

ரோஹிங்யாக்களின் பூர்வீகம் மியான்மர். மதப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் காரணமாக மியான்மரிலிருந்து ரோஹிங்யாக்கள் வெளியேறி விட்டனர். பாரதத்துக்குள் நுழைந்த ரோஹிங்யாக்கள் பல்வேறு மாநிலங்களிலும் பரவலாக காணப்படுகின்றனர். ரோஹிங்யாக்கள் பாரத நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். இப்பின்னணியில்தான் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் ஆணித்தரமாக கூறியுள்ளது. 1946ம் வருட வெளிநாட்டவர் தொடர்பான சட்டப்படி, சட்டவிரோதமாக குடியேறி உள்ளவர்களை பாரதத்திலிருந்து வெளியேற்ற அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது.

முகமது சலீமுல்லா, முகமது ஷாகீர் ஆகிய 2 ரோஹிங்யாக்களும் சட்டவிரோதமாக டெல்லியில் தங்கியுள்ளனர். அவர்கள் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட தகவலின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தை அணுகினார்கள். பாரதத்தில் உள்ள 40,000 ரோஹிங்யா முஸ்லிம்களை மியான்மருக்கு பாரத அரசு திருப்பி அனுப்பப் போகிறது என்பதுதான் அந்த தகவலின் சாராம்சம் ஆகும்.

வாழ்வதற்கான உரிமை (சட்டப்பிரிவு 21), சமநிலை (சட்டப்பிரிவு 14) ஆகியவற்றை மேற்கோள் காட்டியதுடன் UNHCR எனப்படும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை முதன்மை ஆணையர் அளித்துள்ள அகதிகள் அட்டைகளை வைத்துள்ளதையும் ரோஹிங்யாக்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த ரோஹிங்யாக்கள் விவகாரம் பல ஆண்டுகளாக அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. 2021ம் ஆண்டு மார்ச் மாதம் சுமார் 150 முதல் 170 வரையிலான ரோஹிங்யாக்கள் ஜம்முவில் கைது செய்யப்பட்டனர். ஒரு குறிப்பிட்ட இடத்தை சிறையாக மாற்றி அவர்களை அங்கே அடைத்து வைத்துள்ளனர். தங்களை விடுவிக்கக்கோரி ரோஹிங்யாக்கள் மனு தாக்கல் செய்தனர்.

நீதிமன்றத்தில் இந்த மனுவை மத்திய அரசு மிகக்கடுமையாக எதிர்த்தது. ரோஹிங்யாக்கள் பாரத குடிமக்கள் கிடையாது. அவர்கள் சட்டவிரோதமாக பாரதத்துக்குள் நுழைந்தவர்கள். 1946ம் வருட வெளிநாட்டவர் தொடர்பான சட்டத்தைப் பிரயோகித்து அவர்களை திருப்பி அனுப்புவது சரியானதுதான் என்ற வாதத்தை அரசு தரப்பு வைத்தது.

அதுமட்டுமல்லாமல் ரோஹிங்யாக்களால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பதையும் அரசு தரப்பு எடுத்துரைத்தது. ஏற்கெனவே இதுபோன்ற மனு 2018ல் தாக்கல் செய்யப்பட்டது. சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற நீதிமன்றம் தடை விதிக்காது என்பதை அப்போதே உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்திவிட்டது. மேலும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை முதன்மை ஆணையர் அளித்துள்ள அட்டைகளை பாரதம் ஏற்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்தி விட்டது.

இடைக்கால நிவாரணம் எதுவும் வழங்க முடியாது என்று 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் தேதி உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் போபண்ணா, ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு திட்டவட்டமாக கூறி விட்டது. ரோஹிங்யாக்கள் பாரத குடிமக்கள் கிடையாது என்பதால் அவர்கள் வாழ்வதற்கான உரிமை (சட்டப்பிரிவு 21), சமநிலை (சட்டப்பிரிவு 14) ஆகியவற்றின் அடிப்படையில் எந்த உரிமையையும் கோர முடியாது என்பதை உச்சநீதிமன்றம் உறுதிபட நிலைநாட்டி விட்டது.

இந்நிலையில், 2025ம் ஆண்டு மே மாதம் 8ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், திபங்கர் தத்தா, என்.கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் ரோஹிங்யாக்கள் விவகாரம் வந்தது. இந்த மனுக்களை மூத்த வழக்கறிஞர் கோலின் கோன்ஸ்லேவ்ஸ், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் தாக்கல் செய்திருந்தனர். இந்தப் பிரச்சினை 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ளது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் ரோஹிங்யாக்களை திருப்பி அனுப்ப கூடாது என வழக்கறிஞர்கள் வாதிட்டனர். மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராகி வாதிட்டார்.

அகதிகள் தொடர்பான சர்வதேச நடைமுறைக்கு பாரதம் ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே அகதிகள் அட்டை என்பதற்கே அர்த்தம் கிடையாது என்று சொலிசிட்டர் ஜெனரல் வாதிட்டார். மேலும் உள்நாட்டு சட்டத்துடன் சர்வதேச சட்டம் முரண்பட்டால் சம்பந்தப்பட்ட சர்வதேச சட்டம் பயன்பாட்டை இழந்து விடும் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். இதையடுத்து இந்த வழக்கை ஜூலை மாதம் 31ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் அமர்வு தள்ளி வைத்துள்ளது.

ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : அடவி வணங்கி