டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி) அமைப்பின் செயல் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான அலோக் குமார், “நாட்டில் அதிகரித்து வரும் லவ் ஜிஹாத் மற்றும் சட்டவிரோத மத மாற்றங்களால் அவமானப்பட்டு, புண்பட்டுள்ள ஹிந்து சமுதாயம், தற்போது இந்தத் தொல்லைகளுக்கு நிரந்தரத் தீர்வைத் தேடுகிறது. டிசம்பர் 31, 2022ல் வி.ஹெச்.பி அமைப்பின் நாடு தழுவிய “தர்ம ரக்ஷ அபியான்” தொடங்கும். விஷ்வ ஹிந்து பரிஷத்தின் காரியகர்த்தர்கள், பலாத்காரம், மோசடி மற்றும் வசீகரம் ஆகியவற்றால் நடைபெறும் மத மாற்றங்களுக்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வை எழுப்புவது மட்டுமல்லாமல் இந்த பிரச்சனைகளில் இருந்தும் தேசத்தையும் விடுவிப்பார்கள். டிசம்பர் 23ம் தேதி சுவாமி ஷ்ரத்தானந்தரின் தியாக தினத்தை நினைவுகூரும் வகையில் வி.ஹெச்.பி தனது “சுத்தி இயக்கத்தை” முன்னெடுத்துச் செல்கிறது. தாய் மதத்தில் இருந்து பிரிந்து போனவர்களை மீட்டெடுத்து மீண்டும் தாய் மதம் திரும்பும் ‘பராவர்தன்’ பிரச்சாரம் விரைவுபடுத்தப்படும். பிரச்சாரத்தின் போது, யாகங்கள், கதைகள் சொல்லுதல், ஷோபா யாத்திரைகள், கருத்தரங்குகள், தெய்வீக புத்தகங்கள் விநியோகம், பாத யாத்திரைகள், துறவிகளின் வழிகாட்டுதல்கள், பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள், ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கான போட்டிகள் போன்ற பல்வேறு ஹிந்து தர்ம விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
இதுவரை 62 லட்சம் ஹிந்துக்களை மத மாற்றத்திலிருந்து காப்பாற்றி, 9 லட்சம் பேரை மரியாதையுடன் அவர்களின் அசல் நிலைக்கு திரும்பக் கொண்டு வந்துள்ளோம். சுமார் 20 லட்சம் பசுக்கள் படுகொலை செய்யப்படாமல் காப்பாற்றப்பட்டது. 25 ஆயிரம் ஹிந்து பெண்கள் லவ் ஜிஹாதிகளின் பிடியில் சிக்காமல் காப்பாற்றப்பட்டனர். வி.ஹெச்.பி நிறுவப்பட்ட இரண்டாவது ஆண்டிலேயே, அதாவது 1966ல் நடந்த முதல் உலக ஹிந்து மாநாட்டில், 12 நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் முன்னிலையில், இந்த ‘பராவர்தன்’ அறிவிப்பு வெளியானது. 1969ல் ஜகத்குருக்களால் ‘ந ஹிந்து பதிதோ பவேத்’ (‘அனைத்து ஹிந்துக்களும் உடன்பிறந்தவர்கள், எந்த ஒரு ஹிந்துவும் வீழ்ந்ததில்லை’) என்ற பிரகடனம் சமூகத்தில் புதிய ஆற்றலைப் புகுத்தியது.
இந்த நாட்களில் விஷ்வ ஹிந்து பரிஷத் மூலம் நாடு முழுவதும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க ‘சன்சத் சம்பர்க் அபியான்’ என்ற சிறப்பு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 12ம் தேதி தொடங்கிய இந்த 12 நாள் பிரசாரத்தின்போது, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் எம்.பி.க்களுடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ளப்பட்டது. இதன் கீழ், வி.ஹெஸ்.பியின் சிறப்பு தொடர்பு பிரிவு காரியகர்த்தர்கள், மக்கள்தொகை ஏற்றத்தாழ்வு, ஹிந்து கோயில்களை அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்தல் மற்றும் மத்தியிலும் மாநிலங்களிலும் தனி அமைச்சகங்களை உருவாக்குதல், ஹிந்து தர்ம யாத்திரைத் தலங்களின் புனிதத்தை காத்தல் போன்ற பிரச்சினைகள் குறித்து எம்.பி.க்களின் கவனத்தை ஈர்த்தனர். 4 பெண்கள் காரியகர்த்தர்க்கள் உட்பட மொத்தம் 74 வி.ஹெச்.பி காரியகர்த்தர்கள் பிரச்சாரத்தில் இணைந்திருந்தனர். கடந்த 8 நாட்களில் 225 மக்களவை, 61 மாநிலங்களவை எம்.பி.க்கள் உட்பட அனைத்து கட்சிகளின் 286 எம்.பி.க்கள் தொடர்பு கொள்ளப்பட்டனர். சில முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்தோம். பிரச்சாரத்தின் இரண்டாம் கட்டம் டிசம்பர் 22, 2022 அன்று தொடங்கியது, அடுத்த வெள்ளிக்கிழமைக்குள் 450 முதல் 500 எம்.பிக்களை சந்திப்போம்” என்று கூறினார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் வி.ஹெச்.பியின் மத்திய செயலாளர் சுதன்ஷு பட்நாயக் மற்றும் விஷேஷ சம்பர்க பிரமுக் நர்பத் சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.