நாகை மாவட்டம் சீர்காழி, தேவார ஆசிரியர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த ஊர். சம்பந்தருக்கு, திருநிலைநாயகி அம்மையே கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தக்கரையில் ஞானப்பால் ஊட்டியதால் ஞானம் எய்தினார் சம்பந்தர். அன்னை ஊட்டிய பால், அவர் இதழோரம் வழிய, அதைக் கண்ட அவர் தந்தை சிவபாதர், ‘உனக்குப் பால் ஊட்டியது யார்?’ என்று வினவினார்.
அதற்குப் பதிலுரைக்கும் விதமாக ஞானசம்பந்தர் `தோடுடைய செவியன்’ என்ற ஈசனின் அடையாளங்களைச் சொல்லும் பாடலைப் பாடினார். அது முதற்கொண்டு அவர் சிவனருள் பெற்று ஞானக் குழந்தையாய் வலம் வந்தார். இந்த நிகழ்வு ஒவ்வோர் ஆண்டும், திருமுலைப்பால் உற்சவமாகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
பிரமபுரம், வேணுபுரம், தோணிபுரம், சிரபுரம் எனப் பல்வேறு சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படும் சீர்காழியில், தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான `சட்டைநாதர் கோயில்’ உள்ளது நான்கு புறமும் கோபுரங்களுடன் பிரமாண்டமாக காட்சி தரும் இந்தக் கோயிலில் நாயகன்: பிரம்மபுரீசுவரர் சுவாமி, நாயகி திருநிலைநாயகி அம்மன். இங்குள்ள மலையில் தோணியப்பர் உமாமகேசுவரி அம்பாள் சட்டைநாதர் ஆகிய சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர், இந்தத் தலத்தில் திருஞானசம்பந்தருக்குத் தனிச் சந்நிதி உள்ளது.
சிவபிரானின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 14வது தேவாரத் திருத்தலம். மாணிக்கவாசகர், அருண கிரிநாதர், கணநாதர், நம்பியாண்டார் நம்பிகள், பட்டினத்தார், சேக்கிழார், அருணாசல கவிராயர், மாரிமுத்தாபிள்ளை, முத்து தாண்டவர் தீட்சிதர் ஆகியோரும்கூட இத்தலத்தின் மீது பாடல்கள் பாடியுள்ளனர்.
* மகாவிஷ்ணுவின் தோலைச் சட்டையாகப் போர்த்திய சட்டைநாதர் திருமேனி சிறப்புடையது.
* சட்டங்களுக்கெல்லாம் இவரே அதிபதி என்ப தால் வழக்குகளில் பிரச்னை யுள்ளவர்கள் இவரை வழி படுவது சிறப்பு.
* இந்திரனுக்காக இறைவன் மூங்கில் மரமாகி காட்சி கொடுத்ததால் மூங்கில் தல விருட்சமாக உள்ளது.
* காசியைக் காட்டிலும் மிகப் பெரிய பைரவ க்ஷேத்ரம். பிரம்மனுக்கு ஏற்பட்ட அகங்காரம் நீக்கியதலம்.
* பிரளய காலத்தில் பார்வதி தேவிக்கு ஞான உபதேசம் செய்த தலம்.
* இங்கு அஷ்ட பைரவர் உருவமாகவுள்ளனர். எனவேதான் காழியில் பாதி காசி என்பர்.
* கால வித்து என்ற அரசன் சின்னக் கயிலையான சீர்காழிக்கு வந்து இறைவனை வணங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெற்ற தலம்.
சீர்காழிக்கு வாருங்கள்: சட்டங்களுக்கெல்லாம் அதிபதியை வணங்கி வழக்கு, வியாஜ்ஜியங்களிலிருந்து விடுபடுங்கள்.