ஆண்டு 2005 சங்கத்தின் 80வது ஆண்டு. அப்போது சர்சங்கசாலக் கு.சி.சுதர்ஸன் ஜி ஸ்வயம்சேவகர்களுக்கு ஒரு கடிதம் எழுதி, “ஒரு தலைமுறைக்கு 20 ஆண்டுகள் என்று கணக்கிட்டால், 80வது ஆண்டில் சங்கம் 4 தலைமுறைகளைக் கடந்திருக்கிறது” என்று தெரிவித்தார். இப்போது சங்கம் 6வது தலைமுறையைப் பார்க்கப் போகிறது. இன்றும் சங்க ஷாகாவுக்கு 10 வயது பாலகனும், 18 வயது இளைஞனும் உற்சாகமாக வருகிறார்களே, எப்படி இது சாத்தியமானது?
சங்கம் தொடங்கிய போது இரண்டாவது உலகப் போர் ஓய்ந்திருந்தது. முதலாளித்துவம், கம்யூனிசம், சோஷலிசம், திராவிட சிந்தனை இப்படி பல கொள்கைகள் உருவெடுத்த காலம். ஒவ்வொரு சிந்தனை பிறந்த போதும் அதை முதலில் சிந்தித்தவர்கள் மட்டுமே புத்திசாலிகள் போல உருவகப்படுத்தப்பட்டனர். அவர்கள் சொன்னதை அப்படியே ஏற்க வேண்டும் என்ற கருத்துத் திணிப்பு மட்டுமே நடந்தது.
டாக்டர்ஜியோ மாற்றி யோசித்தார். “நீ, உன் முன்னோர் எல்லோரும் புத்திசாலிகளே. எல்லா ஆற்றல்களும் உன்னிடம் இருக்கின்றன. நீ அதை மறந்துவிட்டாய். வெளிநாட்டு சித்தாந்தங்கள் அதை சாக்கிட்டு ஊடுருவின. நீ நீயாக இருப்பதே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு” என்றார்.
சங்கத்தைத் தொடங்கியதும் பெரிய பெரிய விளக்க நூல்களை எழுதவில்லை அவர். மாறாக, மக்களோடு மக்களாகப் பழகினார். ‘சங்கமும் சமுதாயமும் ஒன்றுதான். வேறு வேறு அல்ல’ என்பதை ஸ்வயம்சேவகர்களுக்கு புரிய வைத்தார். சங்கத்தின் ஆறு விழாக்களை புதிதாக யோசிக்கவில்லை. சமுதாயம் தொன்றுதொட்டு கொண்டாடி வந்த விழாக்களையே ஷாகாவிலும் கொண்டாடினார்.
சுவாமி விவேகானந்தர், ”100 இளைஞர்களை கொடு, பாரதத்தை மாற்றிக் காட்டுகிறேன்” என்றார் ‘ஓம்’ என்ற சித்திரத்தின் சன்னிதியில் அரை மணி நேரம் தினமும் தியானம் செய். ஒற்றுமை மலரும்” என்றார் சகோதரி நிவேதிதை. விநாயகர் சதுர்த்தி மூலம் மக்களுக்கு சுதந்திர வேட்கை ஊட்டினார் திலகர். குப்பனையும், சுப்பனையும் தட்டியெழுப்பி சுதந்திரப் போராட்டத்தை மக்கள் இயக்கமாக்கினார் காந்திஜி. சங்க ஸ்வயம்சேவகர்கள் அந்தத் தலைவர்கள் கனவுகளை இன்று நனவாக்கி வருகின்றனர். காரணம், டாக்டர்ஜி அளித்த செயல்முறை.
அந்தச் செயல்முறைக்கும் முன்னோடிகள் பலர் இருந்தனர். முகலாய சாம்ராஜ்யத்தில் நாடு சிக்கித் தவித்தபோது. சமர்த்த ராமதாசர் தென் பாரதம் முழுவதும் பயணித்து பஜனை கோயில்களையும், இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க ‘அக்ரா’ (11 பேர்) குழுக்களையும் உருவாக்கினார். சென்னை உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களில் பல பஜனை கோயில்களும் அக்ரா குழுக்களும் இன்றும் உண்டு! ஹரிஹர புக்கரை வைத்து விஜயநகர சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தார் சுவாமி வித்யாரண்யர். இன்று வங்கதேசம் என்று அறியப்படும் பகுதியில் அவதரித்த சுவாமி பிரணவானந்தர் ஹிந்துக்களை அன்றாட சந்திப்பின் மூலம் ஒருங்கிணைக்க பாரத் சேவாஸ்ரம சங்கம் நிறுவினார். நாட்டின் எல்லா பகுதிகளிலும் அத்தகைய முயற்சிகள் நடந்தன. ஆனால், டாக்டர்ஜி ஹிந்து ஒற்றுமைப் பணிக்கு அகில பாரத கண்ணோட்டம் கொடுத்தார். ஜம்மு-காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, குஜராத் முதல் அருணாச்சல பிரதேசம் வரை அனைத்து பகுதிகளிலும் அந்தச் செயல்முறை நீடித்து உயிர்ப்புடன் விளங்கச் செய்தார். இதுதான் நூற்றாண்டு காணும் சங்க வெற்றிக்கு சூட்சுமம்.