சங்கரதாஸ் சுவாமிகள், நாடக நடிகராக தன் வாழ்க்கையைத் துவக்கினார். அக்காலத்தில் நாடகத்தில் நடிக்க, இசையும் பாட்டுத்திறமையும் முக்கியம். அதற்காக புதுக்கோட்டை மான் பூண்டியா பிள்ளையிடம் இசையும், தன் தந்தையிடம் இலக்கண இலக்கியங்களை கற்றார்.
நாடகங்களில் எமதர்மன், சனீஸ்வரன், இராவணன், இரணியன், கடோத்கஜன் போன்ற பாத்திரங்களை ஏற்று நடித்தார் சங்கரதாஸ் சுவாமிகள். தான் ஏற்கும் கதாபாத்திரமாகவே மாறி ரசிகர்களை கட்டிப்போட்டவர் இவர். பார்ப்பவர்களை அசத்தும் திறமை பெற்றவர் சங்கரதாஸ் சுவாமிகள்.
ஒருமுறை நாடகத்தில் சனீஸ்வர பகவான் வேடமேற்று நடித்தவர், வேஷத்தைக் கலைக்க ஊரின் ஏரிக்கு சென்றார். அங்கு துணி துவைத்துக் கொண்டிருந்த ஒரு கர்ப்பிணி, சனீஸ்வர வேடத்தில் இவரை கண்டதும் பயத்தில் மயங்கிவிழுந்து அங்கேயே இறந்துவிட்டார்.
இந்த சம்பவம் அவரை அதிகம் பாதித்ததால் அன்றிலிருந்து வேஷமிடுவதை நிறுத்திக் கொண்டார். நடிப்பை விட்டு நாடகங்களை எழுதி இயக்குவதோடு தன் பங்களிப்பை சுருக்கிக்கொண்டார்.
சங்கரதாஸ் சுவாமிகள் அறுபதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி இயக்கியிருக்கிறார். இதில் ‘‘வள்ளி திருமணம், வீர பாண்டிய கட்டபொம்மன், மதுரை வீரன், சத்தியவான் சாவித்திரி, நள தமயந்தி போன்ற நாடகங்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சுவாமி சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவு தினம் இன்று