ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் நூற்றாண்டுகளைக் கடந்துள்ளது. இதற்கு நிகரான அமைப்பு உலகில் வேறு எங்கும் இல்லை என்று உறுதிப்பட உரைக்க முடியும். 100 ஆண்டுகள் கண்ட ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் வரலாற்றை `சதக்’ என்ற பெயரில் இயக்குனர் ஆஷிஷ் மால் ஆவணப்படமாக இயக்கியுள்ளார். இப்படத்தை பீர்கபூர் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் வெளியீட்டு விழா டெல்லி ஜண்டேவாலனில் உள்ள கேசவ குஞ்சில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், ஆர்.எஸ்.எஸ் அகில பாரத செயற்குழு உறுப்பினர் சுரேஷ் பையாஜி ஜோஷி, பாடகர் சுக்வீந்தர் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது: டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார், 1925ம் ஆண்டு ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தைத் தொடங்கினார். டாக்டர்ஜியும், சங்கமும் ஒன்றுதான். அவரது உள்ளத்தின் திண்மையை மனோதத்துவ ரீதியாக புரிந்து கொள்ள வேண்டும்.
இதுகுறித்து முன்னாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். டாக்டர் ஜியின் பெற்றோர் இருவரும் ஒரே நாளில், ஒரு மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து காலமானார்கள். அப்போது அவருக்கு 11 வயதுதான். இந்த அதிர்ச்சியை யாராலும் எளிதில் தாங்கிக் கொள்ள முடியாது.
இந்த துன்பத்திலிருந்து வெளியே வருவதும் சுலபமானது அல்ல. ஆனால் இந்த வேதனையை அவர் தாங்கிக் கொண்டார். அவரிடம் எதிர்மறையான எண்ண ஓட்டம் இல்லை. அவரது ஆளுமை நேர்முகத் தடத்திலேயே அவரை பயணிக்க வைத்தது. அவர் பிறப்பிலேயே தலைசிறந்த தேசபக்தர்.
எவ்வளவு துன்பமும், துயரமும் வந்தாலும் அதையெல்லாம் தாங்கிக் கொண்டு, நாட்டுக்காக தொண்டாற்ற வேண்டும் என்ற திட சிந்தனை அவருக்கு இருந்தது. அவரது மனம் எவ்வளவு வலிமையானது, ஆரோக்கியமானது என்பதை இதன் வாயிலாக உணர்ந்து கொள்ள முடியும்.
பாரதமே முதன்மையானது என்ற எண்ணம், அவரது ரத்தத்திலேயே கலந்திருந்தது. இந்த `சதக்’ ஆவணப் படம் டாக்டர் ஜியின் மனத்தின்மையையும், நாட்டுப்பற்றையும், தொண்டையும் துல்லியமாக எடுத்துரைக்கிறது. ஆர்.எஸ்.எஸ் மாறவில்லை. அது பல்வேறு பரிணாமங்களை எடுத்து விரிந்து பரந்துள்ளது.
விதையிலிருந்து மரம் உருவாவதைப் போல, சங்கத்திலிருந்து பல்வேறு அமைப்புகள் முளைத்தெழுந்துள்ளன. இந்த திரைப்படம் இதுவரை வெளிச்சத்துக்கு வராத பல அரிய தகவல்களை எடுத்துரைத்துள்ளது.
மக்களை ஒன்று படுத்துவதில் டாக்டர்ஜி எவ்வளவு உத்வேகத்துடன் செயல்பட்டுள்ளார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இப்போது வெளியிடப்பட்டுள்ள `பாரத் மா கே பஜே’, `பகவா ஹே அப்னி பேச்சன்’ ஆகிய இரு பாடல்களும் நம்மை ஈர்க்கின்றன. இந்த ஆவணப்படம், இதில் இடம்பெற்றுள்ள பாடல்களும், மெய்சிலிர்க்க வைக்கின்றன. இந்த ஆவணப்படத்துடன் தொடர்புடைய படைப்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து
தமிழில் : நிகரியவாதி