சங்கம் பாடலின் மூலம் சங்கத்திற்கு அறிமுகமான கிருஷ்ணமூர்த்தி ஜி

ஆர்.எஸ்.எஸ் சாமான்யர்களையும் அசாதாரமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்து நபர் சங்க தொடர்பின் மூலம் சமூகப் பணியும் செய்து, தனது குடும்பத்தையும் திறம்பட நடத்தி சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்ட, கிருஷ்ணமூர்த்தி ஜியைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…

திருநெல்வேலியில் பாளையங் கோட்டைக்கு அருகாமையில் உள்ள குலவணிகர்புரத்தில் பேச்சிமுத்து பாண்டியன்- – அங்கம்மாள் தம்பதியினருக்கு மகனாக, 1953ல் மே மாதம் 27 ஆம் தேதி பிறந்தார், கிருஷ்ணமூர்த்தி ஜி.
பத்தாம் வகுப்பு வரை திருநெல்வேலியில் உள்ள கதிட்ரல் மேல்நிலைப் பள்ளியில் படித்த பின்னர், இளங்கலைப் படிப்பை சதக் அப்துல்லா கல்லூரியில் பயின்றார். அங்கு பி.ஏ. பொருளாதாரம் படித்து தேர்ச்சி பெற்றார்.
ஒருமுறை பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது, “லட்சியப் பாதையில் முன்னேறி வரும் வீரா பின்னோக்காதே…” என்ற பாடல் அவர் காதில் கேட்டது, அது எங்கு ஒலிபரப்பப்படுகிறது என தேடினார். ஹிந்து பள்ளியிலிருந்து யாரோ அந்தப் பாடலைப் பாடுவதாக அவருக்கு தெரிந்தது, உடனே அங்கு சென்றார். அந்த இடத்தில், அப்போதைய அகில பாரத ஆர்.எஸ்.எஸ் தலைவர் பாளாசாகேப் தேவரஸ் ஜி சிறப்புரை ஆற்றினார். அதனை இல. கணேசன் ஜி, தமிழில் மொழி பெயர்த்தார்.
சிறந்த ஏற்பாட்டுடன் நடந்த அந்த நிகழ்ச்சியைக் கண்டு, உரையைக் கேட்டு உற்சாகமடைந்து, சங்கத்தில் இணைய விரும்புவதாக அங்குள்ள கார்யகர்த்தரிடம் தெரிவித்தார். அடுத்த நாளே ராஜசேகர் ஜி (தற்போது திருநெல்வேலி ஜில்லா சங்கசாலக்) அவர் வீட்டிற்கு சென்று, அவருக்கு சங்கத்தை அறிமுகம் செய்தார்.
சங்கப் பணியில் மிகவும் ஈடுபாடு கொண்டு, பாஸ்கர்ராவ் ஜியின் வழிகாட்டுதலில், 1980 ஆம் ஆண்டு தொடங்கி 1984 வரை என கோவில்பட்டி பகுதியில், நான்கு வருடம் ஆறு மாதங்கள் சங்க ப்ரச்சாரக்காக இருந்தார்.
1981 ஆம் ஆண்டு சேலத்தில் முதலாம் ஆண்டு சங்கப் பண்புப் பயிற்சி முகாமை முடித்த பின்னர், 1985ல் இரண்டாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமை மதுரை திருவேடகத்தில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் முடித்தார். சங்கத்தின் மூன்றாம் ஆண்டு பயிற்சியை, 2011 ஆம் ஆண்டு நாக்பூரில் முடித்தார்.
கிருஷ்ணமூர்த்தி ஜியின் தந்தை பேச்சிமுத்து பாண்டியன் அவர்கள், காவல்துறையில் துணை ஆய்வாளராக பணியில் இருந்தாலும், சங்கத்தின் மீது ஈடுபாடு கொண்டு, கிருஷ்ணமூர்த்தி ஜியின் சங்க வேலைக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். தாய் அங்கம்மாளும் பக்கபலமாக இருப்பார்.
ப்ரச்சாரக்காக இருந்து வந்த பின்னர், 1985 முதல் 1990 ஆம் ஆண்டு வரை, நகர் கார்யவாஹ்காக இருந்தார். பின்னர், வந்தவாசியில் உள்ள சுவாமி அபிதானந்தா பாலிடெக்னிக்கில் ஹாஸ்டல், மெஸ் மேலாளராக பணியாற்றினார். அப்போதும், அந்தப் பகுதியில் சங்க வேலையை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்தார்.
2000ம் ஆண்டு காலகட்டத்தில், திருநெல்வேலி ஜில்லா சேவா ப்ரமுக்காக இருந்து, பல சுய உதவிக் குழுக்களை ஏற்படுத்தினார். ஷாகாவை பலப்படுத்துவதில் அதிக கவனம் செய்து, அதன் மூலம் அங்கு ஷாகா விஸ்திரிப்பு அதிகமானது.
பின்னர் ஜில்லா சாமாஜிக் சமரஸதா பொறுப்பாளராகி, திருநெல்வேலி மாவட்ட அளவில் பல சமுதாயத் தலைவர்களை சந்தித்து, அவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டார். அவர்களுக்கென முகாம் நடத்தி, அதில் அனைவரையும் பங்கு பெற செய்து, அவர்களுக்குள் நல்லுறவு ஏற்படும் முயற்சியில் ஈடுபட்டார்.
சமுதாயங்களுக்கு இடையே நிகழும் ஏற்றத்தாழ்வுகளை அறவே நீக்க, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். சமுதாயத் தலைவர்களை சந்தித்து, மற்ற சமுதாயத் தலைவர்களுடன் பேச வைத்து, அவர்களை இணக்கமாக்கி, அதன் மூலம் சமுதாய நல்லிணக்கத்தை ஏற்படுத்த சங்க கார்யகர்தர்களுடன் சேர்ந்து, பல வகையிலான செயல்களை செய்தார்.
2003 ஆம் ஆண்டில், பாளையங்கோட்டை அருகே உள்ள தருவையில் இரு சமூகத்தினர் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அவர்களை அமைதிப்படுத்த காவல்துறையினர் கூட உள்ளே செல்ல முடியாதபடி பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. அந்த சமயத்தில், சங்கத்தின் சார்பில் ஒரு குழு அமைத்து, அந்த இரு சமூகத்தின் இடையே பல பேச்சுவார்த்தைகள் நடத்தி, இரு சமுதாயத்தையும் அமைதிப்படுத்தியதோடு, அவர்களுக்குள் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டது.
தச்சநல்லூரில் அனைத்து சமுதாயத்தையும் ஒன்றுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு, அதில் வெற்றியும் கிடைத்தது. பட்டியலின மக்கள் இடையே சமூக நல்லுறவை ஏற்படுத்த சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது.
பாளையங்கோட்டை அருகே உள்ள திடியூரில், சமுதாயங்கள் இடையே ஒற்றுமை ஏற்படுத்த அனைத்து சமுதாயத் தலைவர்களையும் சந்தித்து, அவர்களுக்குள் பிணைப்பு ஏற்பட்டு, சமுதாய ஒற்றுமை ஏற்பட்டது. இவற்றுடன் 40 வருடங்களுக்கும் மேலாக, சங்கப் பயிற்சி முகாமில் ப்ரபந்தக்காகவும் இருந்து சங்கப் பணியை செய்து வருகிறார்.
சமுதாய ஒற்றுமையை மேம்படுத்த அனைத்து சமுதாயத்தினரையும் ஒருங்கிணைத்து, திருவிளக்கு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் ஆயிரம் பெண்கள் கலந்து கொண்டு விளக்குப் பூஜை செய்தனர். இதன் மூலமாக, “இறைவன் முன் நாம் அனைவரும் சமம்” என உணர்ந்து, மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டனர்.
தெய்வநாயகபேரியில் அனைத்து சமுதாய மக்களையும் ஒன்றிணைக்க விளக்குப் பூஜை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதனால் சமுதாய ஏற்றத்தாழ்வுகள் கலைந்து, மக்கள் இணக்கமான முறையில் வாழ்ந்தனர்.
நவம்பர் மாதம் 5ஆம் தேதி, 1984 ஆம் ஆண்டு வேலம்மாளை திருமணம் செய்த கிருஷ்ணமூர்த்தி ஜிக்கு, பேராச்சி செல்வம் என்ற மகன் உள்ளார். அவரும் சங்கப் பயிற்சி முகாமை முடித்துள்ளார். கிருஷ்ணமூர்த்தி ஜியின் வீட்டிற்கு ஷேத்ர, ப்ராந்த அதிகாரிகள் என பலரும் வருகை புரிந்துள்ளனர்.
சங்கப் பாடலின் மூலம் சங்கத்திற்கு அறிமுகமாகி, சங்கப் ப்ரச்சாரக்காக இருந்து, பல சமுதாய மக்களை ஒன்றிணைத்து, தனது மகனையும் சங்கப் பயிற்சி முகாமை முடிக்க வைத்து, துவண்டு இருக்கும் கார்யகர்த்தர்களுக்கு நம்பிக்கையூட்டி, ஊக்கமளித்து அவர்கள் சிறப்பாக சங்க வேலை செய்ய உற்சாகமாகமூட்டும் கிருஷ்ணமூர்த்தி ஜி, நம் அனைவருக்கும் முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்காக திகழ்கிறார். 