ஆர்.எஸ்.எஸ் சாமான்யர்களையும் அசாதாரமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்து நபர் சங்க தொடர்பின் மூலம் சமூகப் பணியும் செய்து, தனது குடும்பத்தையும் திறம்பட நடத்தி சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்ட, கந்தகுமார் ஜியைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…
சென்னையில் உள்ள பெரம்பூரில் முத்துக்குமாரசுவாமி – கன்னியம்மாள் தம்பதியினருக்கு நான்காவது மகனாக, 1951ம் வருடம், மே மாதம் 26ம் நாளில் பிறந்தார், கந்தகுமார் ஜி. அவருடன் உடன் பிறந்தவர்கள் மூன்று மூத்த சகோதரர்கள், ஒரு இளைய சகோதரர் மற்றும் இரண்டு சகோதரிகள்.
கந்தகுமார் ஜியின் மூத்த சகோதரர் சிவக்குமார் ஜி, சென்னை மாநகர கார்யவாஹ்காக சங்கப்பணி செய்துள்ளார். கந்தகுமார் ஜியும் அவருடைய மற்ற சகோதரர்களான செல்வக்குமார் ஜி, பாலகுமார் ஜி, ராஜ்குமார் ஜி என நான்கு பேரும், ஒவ்வொரு ஷாகாவில் முக்கிய சிக்ஷக்காக இருந்தனர். இவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே சங்கத்தில் இருந்ததால், “குடும்பமே சங்கக் குடும்பம்” என அனைவரும் அழைப்பர்.
சென்னையில் அகரம் பகுதியில் ராத்திரி ஷாகா நடத்தி வந்தபோது, சிலர் தொடர்ந்து இடையூறு செய்வார்கள். அப்போது சூளைப் பகுதியில் வசித்து வந்த தனபால் ஜி, ஷாகாவிற்கு வெளி ஆட்கள் செய்யும் பிரச்சினையை தீர்த்து வைப்பார். அந்தக் காலகட்டத்தில் சென்னை மகாநகர் பிரச்சாரக்காக டாக்டர் மனோகர் ஷிண்டே ஜி இருந்தார்.
கந்தகுமார் ஜி, முதலாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமை 1971ல் மதுரையிலும், இரண்டாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமை 1972ம் ஆண்டு கோவையிலும் முடித்தார். அந்த வருடத்திலேயே பீஷ்மாஜிக்கு உதவியாக விஸ்தாரக்காக இருந்தார். அதற்கு அடுத்த ஆண்டில் வாலாஜா, ஆற்காடு பகுதிக்கு பிரச்சாரக்காக இருந்தார். தாயாரின் வேண்டுகோளுக்கிணங்க 1974 ஆம் ஆண்டில், வீடு திரும்பி, அம்பத்தூரில் இருந்த ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார்.
1975 ஜூன் மாதம் 26 ஆம் தேதி, நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டது, அந்த நேரத்தில் அனைவரும் வெளியே வர யோசித்தபோது, சுறுசுறுப்பாக சங்கப் பணியை செய்தார்.
அப்போது பெரம்பூர் பாஹ் பிரச்சாரக்காக சண்முகநாதன் ஜி இருந்தார். அவரின் வழிகாட்டுதலில், கந்தகுமார் ஜியும் அவருடைய சகோதரர்களும் இணைந்து தலைமறைவாக வாழ்ந்து, சங்கப் பணிகளை மேற்கொண்டனர்.
பாரத நாடு முழுக்க அனைத்து மாநில மக்களுக்கும், எல்லா நிறுவனங்களுக்கும் பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பத்திரிகைகளில் எந்த செய்தி வெளிவர வேண்டும் என அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசே தீர்மானித்து, இந்திரா காந்தி அமைச்சரவைக்கு சாதகமான செய்திகளை மட்டுமே வெளியிட்டது.
மக்கள் படும் துயரங்களை மற்றவர்களுக்கு எடுத்துரைக்க, “நெருக்கடி கால செய்திகளை தொகுத்து சங்கம் வெளியிட்ட புத்தகங்களை பொதுமக்களிடம் சேர்க்கும் பணியில், சகோதரர்களுடன் இணைந்து ஈடுபட்டார். காவல்துறையால் பிடிபட்ட போதும், துணிச்சலாக எதிர்கொண்டு, சங்கமிட்ட கட்டளையை செவ்வனே செய்து முடித்தார்.
1975ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 15ம் தேதி சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள டி.ஜி வைஷ்ணவா கல்லூரியின் எதிரில் நெருக்கடி நிலையை எதிர்த்து, பலர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர். பெரம்பூரில் இருந்த பாரத மாதா பள்ளியின் நிறுவனர் வேணுகோபால்ஜி, அவரது மகன் சுந்தரவதனன் ஜி என ஏழு பேர் கைது செய்யப்பட்டு, ஆறு மாதம் கடுங்காவல் சிறை தண்டனை அனுபவித்தனர்.
கந்தகுமார் ஜியின் மூத்த அண்ணன் சிவக்குமார்ஜியின் மனைவி கல்யாணி அம்மாள் மற்றும் 12 பெண்கள் எமர்ஜென்சிக்கு எதிரான, மகளிர் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு மூன்று மாதம் வேலூரில் சிறைவாசம் அனுபவித்தனர்.
1976ல், திமுக ஆட்சி கலைக்கப்பட்டு, மூத்த தலைவர்கள் பலரும் சிறைக்கு சென்றனர். அங்கிருந்த சங்க ஸ்வயம்சேவகர்களின் நடவடிக்கையை கண்டு அவர்கள் அதிசயித்தனர். கட்டுப்பாட்டுடன் ஸ்வயம்சேவகர்கள் நடந்து கொண்டதைக் கண்டு, சங்கப் பயிற்சி குறித்து ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொண்டனர். நெருக்கடி நிலை விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு, சங்கப் பணி மீண்டும் வேகம் எடுத்தது.
ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலைக்கு சேர அழைப்பு வந்தது. ஆனால் சிறையில் இருந்து வந்தவர் என்ற காரணத்தினால், அந்த வாய்ப்பு பறிபோனது. எனினும் மனம் தளராமல், சங்கப் பணியை மேற்கொண்டார்.
கல்விக்கூடங்கள் மிஷனரிகளின் ஆதிக்கத்தில் இருந்த நிலையில், கல்வி ஸ்தாபனங்கள் ஆரம்பிப்பதில் சங்கம் கவனம் செலுத்தியது. அதன்படி சென்னை, ஜவஹர்நகர் பகுதியில் விவேகானந்தா வித்யாலாயா பள்ளி துவக்க வேண்டி கோவிந்தராஜ் ஜி அவர்கள் மூலமாக முயற்சி எடுக்கப்பட்டது. கந்தகுமார் ஜி, வீடுவீடாக சென்று கையேடுகளை அளித்து, மக்களை ஈர்க்க முயற்சித்தார். அந்தப் பகுதியில் ஷாகா துவங்கினார். சங்கத்தின் தொடர் முயற்சியால், தேசபக்தி, தெய்வபக்தியுடன் நல்லொழுக்கம் வளரும் குழந்தைகள் உருவாக்கப்பட வேண்டும் என மக்களிடம் புரிய வைத்து விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்.
கந்தகுமார் ஜியின் தந்தை முத்து குமாரசாமி ஜி விவேகானந்தா வித்யாலயாவின் முதல் கௌரவ கரஸ்பாண்டண்டாக இருந்தார். கல்விப்பணி மூலம் சமுதாயப் புரட்சியை ஏற்படுத்த முக்கியக் காரணமாக விளங்கினார். சிவராம் ஜி, சுப்பாராவ் ஜி மற்றும் ஷேத்ர, ப்ராந்த அதிகாரிகள் பலர் ஜியின் வீட்டிற்கு வருகை புரிந்துள்ளனர்.
1978 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 12ல் கஸ்தூரி அம்மாளை திருமணம் செய்தார். அவர்களுக்கு விமல்ராஜ் என்ற மகனும், பத்மப்பிரியா என்ற மகளும் உள்ளனர். மகன் தகவல் தொடர்பு இன்ஜினியராகவும், மகள் வழக்கறிஞராகவும் உள்ளனர்.
சங்கப் பணியுடன் சமூகப் பணியும் செய்த, கந்தகுமார் ஜி, நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்காக திகழ்கிறார்.