மார்க்கரெட் எலிசபெத் நோபில் 1867ல் அயர்லாந்து நாட்டில் பிறந்தவர். கிறிஸ்துவக் மத போதகருக்கு மகளாகப் பிறந்த இவருக்கு இயல்பிலேயே ஆன்மிகத் தேடல் இருந்தது. இங்கிலாந்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். தலை சிறந்த கல்வியாளராகத் திகழ்ந்தார்.
சிகாகோ சர்வ சமய மாநாட்டில் விவேகானந்தரின் உரையைக் கேட்டார். அந்த உரை அவருக்குள் நிறையக் கேள்விகளை உருவாக்கியது. அதற்கான பதில்களைத் தேடி விவேகானந்தரை சந்தித்தார். அவரின் பதில்களால் தெளிவடைந்தார். விவேகானந்தரே தன் குரு என உணர்ந்து, அவரின் வழிகாட்டலில் பாரதம் வந்தார். அவருக்கு நிவேதிதா என்ற பெயரைச் சூட்டினார் விவேகானந்தர்.
பெண்களும் படிக்க வேண்டும் என்பதற்காக, கொல்கத்தாவில் பெண்களுக்கான பள்ளியைத் தொடங்கினார். அன்னை சாரதா தேவி அப்பள்ளியைத் தொடங்கி வைத்தார். தொழில் கல்வி, நுண் கலைகளையும் பயிற்றுவித்தார். அந்நேரத்தில் கொல்கத்தாவில் பிளேக் நோய் பரவியது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிவேதிதா தலைமையில் நிவாரணக் குழு அமைத்தார் விவேகானந்தர். அப்பணியை முழு ஈடுபாட்டுடன் செய்தார்.
அவரின் பள்ளி நிதி நெருக்கடியைச் சந்திக்கவே, நிதி திரட்ட இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளுக்குப் பயணப்பட்டார். நியூயார்க்கில் ‘ராமகிருஷ்ணா தொண்டர் சங்கம்’ எனும் இளைஞர்களான அமைப்பை நிறுவினார். தம் ஆன்மிகக் குரு விவேகானந்தர் மறைவுக்குப் பிறகு, சோர்ந்துவிடாமல் அவரின் கருத்துகளைப் பரப்பினார். பாரதியார் கொல்கத்தாவில் சகோதரி நிவேதிதையை சந்தித்தபோது, “உங்கள் மனைவியை ஏன் அழைத்து வர வில்லை?” என பாரதியை கேட்டார் நிவேதிதா. “எங்களின் சமூக வழக்கப்படி பெண்களை வெளியில் அழைத்துச் செல்வதில்லை. என் மனைவிக்கு அரசியலும் தெரியாது” என்றார் பாரதி.
அதற்கு, நிவேதிதா, ‘உங்கள் மனைவிக்கே சம உரிமை கொடுக்காத நீங்கள் எப்படி தேசத்திற்கு விடுதலைப் பெற்றுத் தருவீர்கள்?’ என்று கேட்டது, பாரதியின் மனதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது அதன் பின் நிவேதிதாவை தம் குருவாக ஏற்றார் பாரதி. பாரத விஞ்ஞானி ஜெகதிஷ் சந்திரபோசின் நூல்கள் வெளிவர உதவி புரிந்தார்.
1911 அக்டோபர் 13 அன்று தனது 44 வது வயதில் மறைந்தார். அவர் ஆற்றிய சேவைகள் மூலம், இன்றும் நமக்கு வழிகாட்டியாக இருக்கிறார் நிவேதிதா.