கோவை சிறையில் இருந்து கொலை கைதிகள் விடுதலை

அண்ணாதுரை பிறந்த தினத்தை முன்னிட்டு, கோவை மத்திய சிறையில் இருந்து ஆறு கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். தமிழக சிறைகளில், நீண்ட காலமாக இருக்கும் சிறை தண்டனை கைதிகளை அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஆகிய தலைவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, கருணை அடிப்படையில் தண்டனை காலம் முடியும் முன்னரே விடுதலை செய்வது, தமிழக அரசின் வழக்கமாக உள்ளது. தி.மு.க., – அ.தி.மு.க., ஆட்சியில் மாறி, மாறி இவ்வாறு கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அண்ணாதுரையின் 113வது பிறந்த தினத்தை முன்னிட்டு, கோவை மத்திய சிறையில் கடந்த, 25 ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப்பட்டிருந்த, பூரி கமல், விஜயன், அபுதாகீர், ஹாரூன் பாட்சா, ஷாகுல் ஹமீது, ஊம்பாபு ஆகிய ஆறு பேரும், விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் அபுதாகீர், ஹாரூன் பாட்சா, ஷாகுல் ஹமீது, ஊம்பாபு ஆகியோர், கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். பூரி கமல், விஜயன் ஆகியோர், கோவை காட்டூரில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள். இவர்கள், நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.