கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு பேருந்துகள் மாற்றம்: மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை சரிவு

கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் இடம் மாற்றம் செய்யப்பட்ட பிறகு, நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்துகோயம்பேடுக்கு மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை சரிந்துள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் 6,000 பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ.தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினசரி 2.60 லட்சம் முதல் 3 லட்சம் பேர் பயணிக்கின்றனர். பாதுகாப்பான, விரைவான பயணம் மேற்கொள்ள வசதியாக இருப்பதால், மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
இதற்கிடையே, வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கடந்த டிச.30-ம் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்துகள் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்துக்கு படிப்படியாக மாற்றப்பட்டன. தொடர்ந்து, ஆம்னி பேருந்துகளும் கடந்த ஜன.24-ம் தேதி முதல் கிளாம்பாக்கத்துக்கு மாற்றப்பட்டன. இதன்காரணமாக, நகரின் பல்வேறு இடங்களில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு மெட்ரோ ரயில்களில் வருவோர் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.
கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் மெட்ரோ ரயில்களில் பயணிப்போரில் 6 ஆயிரம் பேர் வரை சரிந்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் மெட்ரோ ரயில் மொத்த பயணிகளின் எண்ணிக்கை 84.63 லட்சமாக இருந்தது. கடந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, ஜனவரி மாத பயணிகளின் எண்ணிக்கை 6,000 குறைந்துள்ளது. “நாங்கள் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் காணவில்லை. மேலும், பயணிகள் எண்ணிக்கை குறையும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை” என்று மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்துக்கு மெட்ரோ ரயில்களில் செல்ல எந்த வசதியும் இல்லை. இதை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பயணிகள் சிலர் கூறியதாவது: கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 1,000 அரசு பேருந்துகளும், 600 ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்து நிலையத்துக்கு சென்னையில் இருந்து செல்ல போதிய இணைப்பு வாகன வசதி இல்லை. மேலும், மெட்ரோ ரயில்களில் செல்ல இன்னும் இணைப்பு ஏற்படுத்தவிடவில்லை.
இதற்கு முக்கியக்காரணம் சென்னை விமானநிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவாக்கம் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது மூலமாக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு மெட்ரோ ரயில்களில் செல்லும் வசதி கிடைக்கும். எனவே, விமானநிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.