கோயம்பேடு, சேமாத்தம்மன் நகரில், 2019ம் ஆண்டு 1,030 சதுர அடியில், மூன்று மாடி மசூதி கட்டப்பட்டது. இந்த மசூதி சட்டத்திற்கு புறம்பாக சி.எம்.டி.ஏ.,விற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தொடரப்பட்ட வழக்கில், ‘மசூதி சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டுள்ளது’ என, உச்ச நீதிமன்றம் உறுதி செய்து மசூதியை இடிக்க உத்தரவிட்டது.
இதையடுத்து, வரும் 15ம் தேதி மசூதியை அப்புறப்படுத்த, சென்னை மாநகராட்சி சார்பில் போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மசூதியை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள், கோயம்பேடு 100 அடி சாலை அம்பேத்கர் சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட காவல் துறையிடம் அனுமதி கேட்டனர்; அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று மாலை கோயம்பேடு 100 அடி சாலை அம்பேத்கர் சிலை அருகே 200க்கும் மேற்பட்டோர் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு பணியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர். அவர்களுடன் போராட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதோடு கலைந்து செல்ல மறுத்ததால், போராட்டக்காரர்கள் 130 பேரை, போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.