பாரம்பரிய சிறப்புமிக்க ராமேஸ்வரம் கோதண்டராமர் கோவில் மறுகட்டுமான பணிகளுக்கு அனுமதி வழங்கும்படி, மத்திய அரசுக்கு, கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை குழுமம் பரிந்துரைத்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில், 12 கி.மீ., தொலைவில், வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா சந்திக்கும் இடத்தில் கோதண்டராம சுவாமி கோவில் உள்ளது. ராமர், சீதை, லட்சுமணனை, விபீஷணன் வணங்கும் வகையில் இந்த கோவில் அமைந்துள்ளது. இது, வேறு எங்கும் காண முடியாத சிறப்பு. ராமாயணத்துடன் தொடர்புடைய தலங்களில் இதற்கு மிக முக்கியத்துவம் உண்டு.
கடந்த 1964ல் ஏற்பட்ட புயலில் தனுஷ்கோடி முற்றிலுமாக அழிந்தபோது, இப்பகுதியில் கோதண்டராமர் கோவில் மட்டுமே எஞ்சி நிற்கிறது. நாடு முழுதும் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து செல்வதால், இந்த கோவிலை மறுகட்டுமானம் மேற்கொள்ள முடிவு செய்ய்பட்டது.
தமிழக அரசின் ஹிந்து சமய அறநிலையத்துறை, இதற்கான வரைவு திட்டத்தை தயாரித்துள்ளது. கடலின் நடுவில் அமைந்துள்ள இந்த கோவில் தொடர்பான கட்டுமான பணிகளை மேற்கொள்ள, கடலோர ஒழுங்குமுறை மண்டல குழும அனுமதி பெற வேண்டும். இதற்காக, தமிழக கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை குழுமத்திடம், ஹிந்து சமய அறநிலையத்துறை விண்ணப்பித்தது.
வல்லுனர் குழு கோப்புகளை ஆய்வு செய்து அனுப்பிய பரிந்துரை அடிப்படையில், மாநில அளவிலான குழுமம் திருப்தி அடைந்துள்ளது. இதையடுத்து, கோதண்டராமர் கோவில் மறுகட்டுமான பணிக்கு ஒப்புதல் அளிப்பதற்கான கோப்புகளை, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கு பரிந்துரைத்து, மாநில குழுமம் கடிதம் அனுப்பியுள்ளதாகவும், விரைவில் ஒப்புதல் கிடைத்துவிடும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.