கொரோனா தடுப்பூசியில் பக்க விளைவு ஏற்படும் என்ற தகவல் வெகுவாக பரவியுள்ள நிலையில், இது பற்றி பயப்படத் தேவையில்லை என, பிரபல மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த, ‘ஆஸ்ட்ரா ஜெனேகா’ நிறுவனம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட பக்கவிளைவால் பலர் அங்கு உயிரிழந்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக, 51 வழக்குகள் லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன.
இது தொடர்பாக, ஆஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், தங்களுடைய கொரோனா தடுப்பூசியால், மிக அபூர்வ பக்க விளைவாக, ரத்தம் உறைதல் அல்லது ரத்த தட்டணுக்கள் குறைவது போன்ற பாதிப்பு ஏற்படலாம் என்று கூறியுள்ளது.
இது தொடர்பாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலையுடன் இணைந்து, ஆஸ்ட்ரா ஜெனேகா, கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தது. நம் நாட்டில், ‘சீரம் இந்தியா’ நிறுவனம், ஆஸ்ட்ரா ஜெனேகாவுடன் ஒப்பந்தம் செய்தது. அதன்படி, ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் தடுப்பூசி தயாரிக்கப்பட்டது.
நம் நாட்டில் வழங்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளில், 90 சதவீதம் கோவிஷீல்டு என கூறப்படுகிறது. இதனால், பக்க விளைவுகள் ஏற்படுமா என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. இது குறித்து, பிரபல தொற்றுநோயியியல் நிபுணர் டாக்டர் ராமன் கங்காகேதார் கூறியுள்ளதாவது:
கொரோனா தடுப்பூசியால், 10 லட்சம் பேரில் ஏழு அல்லது எட்டு பேருக்கு பக்க விளைவுகள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
முதல் டோஸ் எடுத்துக் கொண்டபோது, பக்க விளைவுக்கான சாத்தியம் சற்று அதிகமாக இருக்கலாம். இரண்டாவது டோஸ் எடுத்துக் கொண்டவர்களுக்கு, அதற்கான சாத்தியம் மேலும் குறைகிறது. பூஸ்டர் எனப்படும் மூன்றாவது டோஸ் எடுத்துக் கொண்டால், பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைகிறது. அதனால் தான், மிகவும் அரிதாக பக்க விளைவுகள் ஏற்படலாம் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.
மேலும், பக்க விளைவுகள் என்றால், தடுப்பூசி போட்ட பின், இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் ஏற்படும். அதற்கு மேல் பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பே இல்லை. அதனால் மக்கள் பயப்படத் தேவையில்லை.
எந்த தடுப்பூசி எடுத்துக் கொண்டாலும், அதனால் எத்தனை பேருக்கு பலன் கிடைக்கும், எத்தனை பேருக்கு பக்க விளைவு உள்ளிட்ட பாதிப்பு ஏற்படலாம் என்பது கவனிக்கப்படும். அதிகமானோருக்கு பலன் கிடைக்கும் என்பதாலும், அப்போது இருந்த அவசர நிலையிலும், கொரோனா தடுப்பூசி பயன்படுத்தப்பட்டது. கோடிக்கணக்கான டோஸ்கள் கொடுக்கப்பட்ட நிலையில், பெரிய அளவில் பக்க விளைவு பாதிப்பு நம் நாட்டில் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. அதனால் பயப்படத் தேவையில்லை. ‘வைட்டமின் பி12’ மருந்து வழங்கப்படுகிறது. அது சிலருக்கு பக்க விளைவு ஏற்படுத்தலாம் என்பதால், மருத்துவமனையில் வைத்து தான் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, ஆஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘மக்களின் உடல்நலனுக்கு மிகவும் முக்கியத்துவம் தருகிறோம். ‘மிகக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் தான் தடுப்பூசி உள்ளிட்டவற்றை தயாரிக்கிறோம். மிக மிக அரிதாக, கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளோம்’ என, அதில் கூறப்பட்டுள்ளது.