பிரதம மந்திரியின் சிறப்பு பாதுகாப்பு குழு (SPG) வில் ஒரு பெண் கமாண்டோ கம்பீரமாக நடந்துவரும் புகைப்படத்தை அண்மையில் பாஜக எம்.பி கங்கணா ரணாவத் பகிர்ந்திருந்தார். அதைப் பார்த்தபோது பாரதப் பெண்களின் அபரிமிதமான வளர்ச்சி குறித்த பூரிப்பும் பெருமிதமும் மனதில் எழுந்தது.
அதை எண்ணி மகிழும் போதுதான் பாரதத்தில் இன்றும் ஐந்தில் ஒரு பெண்ணுக்கு குழந்தைத் திருமணம் நடக்கிறது என்ற வருத்தம் தரும் செய்தி வெளியாகிறது. மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி இத்தகவலை வெளியிட்டார். கடந்த வருடம் மட்டுமே ஏறக்குறைய இரண்டு லட்சம் குழந்தைத் திருமணங்கள் தடுக்கப் பட்டனவாம்!
ராணுவத்தில் சேர்வது, விமானம் ஓட்டுதல் போன்ற பெரிய பெரிய சவாலான செயல்களை சர்வ சாதாரணமாக செய்து அசத்தும் பெண்களுக்கிடையே தான் பெண்ணின் திருமண வயது 18 என்ற சட்டம் இருந்தும் குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்படும் சிறுமியரும் இருக்கின்றனர். அதிலும், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், திரிபுரா, அசாம், ஆந்திரா, பீஹார், ராஜஸ்தான் மாநிலங்களில் பால்ய விவாகம் மிக அதிகமாம்.
பாரதம் எதிர்கொள்ளும் சவாலான விஷயம் இது என்பதை உணர்ந்த மத்திய அரசு “பால விவாஹ முக்த பாரத்” பிரச்சாரம் துவக்கியுள்ளது. குழந்தைத் திருமணம் பற்றி புகாரளிக்க அரசு ஒரு போர்ட்டலையும் உருவாக்கி
யிருப்பது வரவேற்கத் தக்கது.
அசாமில் முஸ்லீம் திருமணம் ஒவ்வொன்றும் கண்டிப்பாக பதிவு செய்யபடவேண்டும் என அசாம் மாநில அரசு சட்டம் இயற்றியுள்ளது. ஏற்கெனவே இருந்த சட்டம்தான்……செயல்படுத்தப்படாமல்! இப்போது கட்டாயமாக்கப்படுகிறது. இதன் மூலமாக 2026க்குள் குழந்தை திருமணங்கள் 81 சதவீதம் வரை தடுக்கப்படும் என்பது கூடுதல் ஆதாயம்.
தேசத்தின் டெமோகிராபி (குடும்பக் கட்டுப்பாட்டை எதிர்த்து பெருகி வரும் குறிப்பிட்ட சமூகத்தின் ஜனத் தொகை வீக்கம்) விபரீதமாகாமல் ஓரளவாவது சமநிலைப்படுத்த குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட வேண்டும்.
பொது நலன், தேச நலன் என்பதைத் தாண்டி பெண் குழந்தைகள் நலன் தான் அதிகமாக பாதிக்கப்படுகிறது, குழந்தைத் திருமணத்தால். தன் வருங்காலம் குறித்த ஆசைகளும் கனவுகளும் அவளறியாமலே கிள்ளி எறியப்படுகின்றன. இது அவளுக்கெதிரான உரிமை மீறல் அல்லவா?
மேலும், திருமணத்திற்குத் தயாராகாத உடலியல் / உளவியல் பிரச்சினைகளாலும் பெண் குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகிறது. கருச்சிதைவு உள்ளிட்ட சிக்கல்கள் உடலை மேலும் பலவீனமாக்கி அவள் உயிருக்கே ஆபத்தாக மாறும். அவளுக்குப் பிறக்கும் குழந்தைகளும் போதுமான வளர்ச்சியின்றி ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளாக வளரும் நிலை உருவாகும். இத்தகைய ஆரோக்கியமற்ற சூழலை நம் பெண் குழந்தை
களுக்குத் தரலாமா? பெண்கள் நாட்டின் கண்களல்லவா? பெண் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக இருந்தால்தானே பாரத மாதா மகிழ்ச்சியடைவாள்?
நம் புதல்விகள் மீதான இந்தக் கொடுமைக்கு தேச மக்கள் ஒன்றிணைந்து முடிவு கட்டுவோம். அமைச்சர் அன்னபூர்ணா தேவி ஆசைப்படுவது போல் குழந்தைத் திருமணமில்லா பாரதத்தை உருவாக்க வழிவகை செய்வோம்.