பெரிய அளவிலான நிதி மோசடிகள், பொன்சி திட்டங்கள், சைபர் குற்றங்கள், வாகன திருட்டு, நில அபகரிப்பு, ஒப்பந்த கொலைகள் உள்ளிட்டவற்றை திட்டமிட்ட குற்ற வரம்புக்குள் கொண்டு வருவதற்கு புதிய கிரிமினல் சட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு நாடாளுமன்ற குழு வரவேற்பு தெரிவித்துள்ளது. தற்போதுள்ள சட்டங்கள் நில அபகரிப்பு, ஒப்பந்த கொலை, மிரட்டி பணம் பறித்தல், பெரிய அளவிலான நிதி மோசடிகள் மற்றும் ஆட்கடத்தல் போன்ற கடுமையான குற்றங்களைத் தடுக்கபோதுமானதாக இல்லை என்பதை பாஜக எம்.பி. பிரிஜ்லால் தலைமையிலான உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கண்டறிந்துள்ளது.
இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தற்போது பாரதிய நியாய சன்ஹிதாவின் (பிஎன்எஸ்) பிரிவு 9-ல், கடத்தல், கொள்ளை, வாகன திருட்டு, மிரட்டிபணம் பறித்தல், நில அபகரிப்பு, ஒப்பந்த கொலை, பொருளாதார குற்றங்கள், நிதி மோசடி, கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் இணைய குற்றங்கள், ஆட்கடத்தல், போதைப்பொருள், சட்ட விரோத பொருட்கள், சேவைகள் அல்லது ஆயுத கடத்தல், பாலியல் தொழிலுக்காக ஆட்களை கடத்துதல், ஊழல் உள்ளிட்ட சட்டத்துக்கு புறம்பான செயல்கள் தற்போது திட்டமிட்ட குற்றத்தின் (ஆர்கனைஸ்டு கிரைம்) வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுபோன்ற குற்றங்கள் ஒருவரின் மரணத்துக்கு காரணமாகும் எனில் அந்த குற்றத்தில் ஈடுபட்டவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனையுடன், கடுமையான அபராதமும் விதிக்க புதிய சட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கை என நாடாளுமன்ற குழு பாராட்டு தெரிவித்துள்ளது. புதிய மசோதாக்கள்: கிரிமினல் நடைமுறைச் சட்டம் 1898, இந்திய தண்டனைச் சட்டம் 1860, இந்திய சாட்சிய சட்டம் 1872 ஆகியவற்றுக்கு பதிலாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மசோதா, பாரதிய நியாய சன்ஹிதா,பாரதிய சாக்ஷிய அதிநியம் ஆகிய மசோதாக்களை கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி மக்களவையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.