குறைவான தண்ணீரில் அதிக மகசூலும் லாபமும் தரும் புதிய விதைகள்

 

பாரத நாட்டின் மொத்த சாகுபடி பரப்பில் 55 சதவீதம் மழையை நம்பியே உள்ளது. நம் நாட்டின் உணவு தானிய உற்பத்தியில் 40 சதவீதம் சிறுதானிய உற்பத்தியில் 85 சதவீதம் பயிர் வகையிலும், 70 சதவீதம் பருத்தியிலும், 60 சதவீதம் மானாவரி விளைச்சலின் பங்களிப்பாகும்.

காரீப் மற்றும் ராபி பருவங்களில் முதல் பயிர் அறுவடைக்கு பின் இரண்டாம் பயிர் சாகுபடி, மொத்த சாகுபடி பரப்பில் 38.9 சதவீதம் மட்டுமே சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. அதாவது 60 இரண்டாவது பயிர் சாகுபடி செய்யப்படுவதில்லை. இதற்கு முக்கிய காரணம் பாசனநீர் பற்றாக்குறையே. கிராம பகுதியில் கிடைக்கும் தண்ணீரில் 85 சதவீதம் வேளாண் சாகுபடி பணிக்கு பயன்படுகிறது. 5 சதவீதம் குடிநீராகவும், பருவமழை குறைவு மற்றம் பருவம் தவறி மழை பெய்வது, நிலத்தடி நீர்மட்டம் குறைவது போன்ற பல்வேறு காரணங்களால் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருகின்றது.

தமிழ்நாட்டில் நிகர பாசனப்பரப்பில் 63 சதவீதம் கிணறுகள் மூலம், 22 சதவீதம் வாய்க்கால் மூலமும், 13 சதவீதம் ஏரிகள் மூலமாகவும் பாசனம் கிடைக்கிறது. இப்படி தண்ணீரில் பற்றாக்குறை இருப்பதால், இந்திய விவசாயிகளால் முழுமையாக ஆண்டு முழுவதும் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. இந்த நிலை மாற விவசாயிகளுக்கு பருவ நிலைக்கு ஏற்ப குறைந்த தண்ணீரை கொண்டு நிறைந்த மகசூல் தரக்கூடிய விதைகள் கிடைப்பதில் மிகப்பெரிய சிரமம் உள்ளது. இதை தீர்க்கும் வகையில் பாரத அரசு புதிதாக 109 விதைகள் அறிமுகப்படுத்தியுள்ளது. என்னென்ன மாதிரியான விதைகளை, அவைகளின் நிலை மற்றும் நமது தமிழகத்திற்கு ஏற்ற பயிர்கள் குறித்து பார்ப்போம்.

விதைகள் பாரம்பரிய விதைகள், உயர் விளைச்சல் விதைகள் என்ற நிலையில் உயர் விளைச்சல் ரகங்கள் பாரத சூழ்நிலைகளுக்கு ஏற்றதாக இல்லை. ஏனெனில் இந்தியாவில் உள்ள வேளாண் ஆராய்ச்சி மையங்களை வழிநடத்துபவர்கள் மேல்நாட்டு சிந்தனைவாதிகளும், மேலைநாடுகளின் ஆராய்ச்சியாளர்களும்தான். அவர்கள் தங்களின் தேவைக்கான. தங்கள் பகுதி சந்தைக்கு ஏற்ற விவசாய விளைப்பொருட்களை உற்பத்தி செய்ய நம்மை நிர்பந்தப்படுத்தி வந்தார்கள்.

சுதந்திரத்திற்கு பிறகு கூட இந்த நிலை தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. தற்போது பாரத பருவ நிலைக்கு ஏற்ற, பாரத சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் விளைக்கூடிய பாரத விதைகளை, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் வெளியிட்டுள்ளது. இது மத்திய அரசு கொடை பத்தாண்டு கால முயற்சியின் பலனாகும்.

ஒரு விதை உருவாகி அது நடைமுறைக்கு வருவதற்கு குறைந்தது 10 ஆண்டுகள் ஆகும். அந்த வகையில் நம்முடைய அரசின் முன் முயற்சியினால் இந்த 10 ஆண்டுகளில் பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவில் இந்த விதைகள் வெளியிடப்பட்டுள்ளது. அவைகளில் குறிப்பாக தானிய வகைகளில் 23, அரிசி 9, கோதுமை 2, பார்லி 1, சோளம் 6, உளுந்து 1, திணை 1, ராகி 1, சம்பா 1, துவரை 2, உளுந்து 2, பருப்பு 3, பட்டாணி 1, மூங்கில் 2, 7 வகையான எண்ணெய் வித்துக்கள், 7 வகையான தீவணங்கள், 7 வகையான கரும்பு, 5 வகையான பருத்தி, சணல் 1, இதர தோட்டக்கலை, மலை, மருத்துவப்பயிர்கள் 40 உட்பட 109 வகையான புதிய பயிர் வகைகளை பிரதமர் அறிமுகம் செய்துள்ளார்.

பாரத பிரதமரால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த விதைகள் விவசாயிகளுடைய வயல்களில் தெளிக்கக்கூடிய வகையில் உற்பத்தி பெருக்கம் செய்து கிடைக்க இன்னும் 3 ஆண்டுகள் ஆகும். மேற்படி விதைகளை நாம் குறைந்தபட்சம் 15 ஆண்டுகளுக்கு பயன்படுத்த முடியும். வறட்சியையும், குறைவான நீரையும், கொண்டு வளரும் அளவில் இது உருவாக்கப்படுகிறது. பூச்சி தாக்குதல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திகளுடன்  பாரதம் முழுமைக்கும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயன்தரக்கூடிய வகையில் இந்த விதைகள் உள்ளது.

கோதுமை உற்பத்தி தமிழகத்திற்கு ஏற்றதல்ல. இங்கிருக்கக்கூடிய கடும் வெப்பத்தை தாங்கி விளைவிக்க முடியாது என்ற நிலையில் அதிக வெப்பத்துடன், வறட்சியை தாங்கி விளையக்கூடிய தமிழக, கர்நாடக, ஆந்திர விவசாயிகளுக்கு பயனுள்ள வகையிலும், நுகர்வோர்களுக்கு கோதுமை எளிதாக உள்ளுர் சந்தையில் கிடைக்கும் வகையில் புதிய ரகம் கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக கடலோர பகுதிகளில் தற்போதும் பருத்தி சாகுபடி நடந்து வருகிறது. உப்பு நீரை எதிர்கொண்டு சிறந்த விளைச்சலை தரக்கூடிய பருத்தி ரகங்களும், டெல்டா மாவட்டங்களுக்கு மட்டு
மல்லாது இதர பகுதிகளில் விவசாயிகளும், 4.8 டன் உற்பத்தி என்ற பாரத இலக்கை எட்டக்கூடிய புதிய ரக நெல் விதைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் தென்னையில்  கல்பசுவர்ணா, கல்பசதாப்தி என்று இரண்டு தென்னை ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கல்பசுவர்ணா கொப்பரை தேங்காய் உற்பத்திக்கு ஏற்றது. ஒரு முறைக்கு 130 இளநீர்களை தரக்கூடியது. கல்பசதாப்தி உயரமான தென்னை மரம். பெரிய தேங்காய் வகையை சார்ந்தது. இந்த மரத்தில் 1 முறைக்கு 148 கொப்பரைகள் கிடைக்கம். இந்த இரண்டு ரகங்களும் தமிழக, கேரள விவசாயிகளுக்கு குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி விவசாயிகளுக்கு ஏற்றதாக இருக்கும்.

விவசாயிகளின் வருவாயை பெருக்க குறைந்த நீரில் பூச்சி நோய் தாக்காத புதிய ரகங்களை பயன்படுத்தி விவசாயிகள் உயர் விளைச்சலுடன் அதிக லாபம் தர ஏதுவான திட்டத்தை அறிவித்துள்ளது இந்திய விவசாயிகள் குறிப்பாக தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

கட்டுரையாளர் : வேளாண் ஆலோசகர்,

கிரியா சூழல் மற்றும்

வேளாண்மை ஆய்வு நிறுவனம், திருச்சி.