நாடு முழுதும் உள்ள விவசாயிகளிடம் இருந்து, இதுவரை 161.47 லட்சம் டன் நெல், குறைந்தபட்ச ஆதார விலைப்படி கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உணவு அமைச்சம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: குறைந்தபட்ச ஆதரவு விலைப்படி, இதுவரை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக, காரீப் பருவ நெல்லை, அரசு நிறுவனங்களுடன் இணைந்து, இந்திய உணவு கழகம், நவம்பர் 1ம் தேதி வரை, 161.47 லட்சம் டன் அளவுக்கு கொள்முதல் செய்து உள்ளது. இதன் வாயிலாக, 9.33 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இதற்கான தொகை, 35,571 கோடி ரூபாயாகும். நடப்பு 2023 – 24ம் ஆண்டுக்கான, அக்டோபர் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காரீப் பருவ கொள்முதல் சுமூகமாக நடைபெற்று வருகிறது. இப்பருவதில், 521.27 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதில், 20.76 சதவீதம், அதாவது பஞ்சாபில் இருந்து, 66.42 லட்சம் டன்னும், ஹரியானாவில் இருந்து, 36.11 லட்சம் டன்னும், தமிழ்நாட்டில் இருந்து, 3.26 லட்சம் டன் என மொத்தம் 108.23 லட்சம் டன் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மொத்த அரிசி உற்பத்தியில் 80 சதவீதம், காரீப் பருவத்தில் இருந்து பெறப்படுவது குறிப்பிடத்தக்கது