சண்டிகரில் மத்திய அமைச்சர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இடையிலான 4-ம் கட்ட பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமை (பிப்.18) நடைபெற்றது. இதில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஒப்பந்தம் மேற்கொண்டு குறைந்தபட்ச ஆதரவு விலையில் பொருட்களை கொள்முதல் செய்ய முன்மொழியப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். விவசாயிகளுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர் இதனை தெரிவித்தார்.
பல்வேறு விவசாய அமைப்புகள் வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, கொள்முதலுக்கான உத்தரவாதம், விவசாய கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி நோக்கி செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், விவசாய சங்கத்தினர் மத்திய அரசுடன் 4-ம் கட்ட பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
இதில் மத்திய அரசின் சார்பில் வேளாண் அமைச்சர் அர்ஜுன் முண்டா, வணிகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் ஆகியோர் பங்கேற்றனர். பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் பங்கேற்றார். பல்வேறு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
4-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தது, “இதில் புதிய யோசனையை முன்மொழிந்தோம். தேசியக் கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு, தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைக் கூட்டமைப்பு போன்ற கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஐந்து ஆண்டு காலம் ஒப்பந்தம் மேற்கொண்டு, அதன் மூலம் விவசாயிகளிடம் இருந்து வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யும். அதற்கு எந்த உச்ச வரம்பும் இல்லை. இந்திய பருத்திக் கழகமும் முறைப்படி ஒப்பந்தம் மேற்கொண்டு குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதலை மேற்கொள்ளும். இந்த புதிய முன்மொழிவு குறித்து தங்களது முடிவை விவசாய அமைப்புகள் எங்களிடம் இன்று காலை தெரிவிக்கும். நாங்களும் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களுடன் கலந்து பேச வேண்டி உள்ளது” என தெரிவித்தார்.
“சுமார் 5 மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. நான் எங்கள் மாநில விவசாயிகளுக்கு ஆதரவாக இதில் கலந்து கொண்டேன். பருப்பு கொள்முதலுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வேண்டுமென வலியுறுத்தினோம்” என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்தார்.
விவசாயிகள் கருத்து: பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டியின் பொதுச் செயலாளர் சர்வான் சிங் பாந்தர் தெரிவித்தது, “மத்திய அரசின் முன்மொழிவு குறித்து நாங்கள் ஒன்றாக இணைந்து விவாதித்து விரைவில் முடிவு எடுப்போம். அடுத்தகட்ட பேச்சுவார்த்தை பிப்.19 அல்லது 20-ம் தேதி மேற்கொள்ளப்படும். அதை பொறுத்து டெல்லி சலோ பேரணி குறித்து முடிவு செய்ய உள்ளோம். அரசுடன் நாங்கள் இணைந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண விரும்புகிறோம். அதற்கு முயற்சிப்போம். எங்களது மற்ற கோரிக்கைகள் குறித்து டெல்லி திரும்பியதும் விவாதிப்பதாக மத்திய அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்” என்றார்.