கும்பமேளா ஆன்மிக நம்பிக்கையும் அறிவியல் உண்மையும்

கும்பமேளா அல்லது மஹா கும்பமேளா என்பது மக்கள் ஒன்று கூடும் நிகழ்வு மட்டுமல்ல, இது பாரதத்தின் ஆன்மிக  ஆழத்தையும், அசைக்க முடியாத நம்பிக்கையின் அடித்தளம் மற்றும் மறைக்கப்பட்ட அறிவியல் அறிவின் சங்கமமாகும்.  இந்த கும்பமேளாவில் உலகெங்கிலும் இருந்து கோடிக்கணக்கான  பக்தர்கள் புனித நதிகளில்  நீராடியுள்ளனர். மனித குலத்திற்கும், பிரபஞ்சத்திற்கும் இடையிலான காலத்தால் அழிக்க முடியாத தொடர்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. ஆன்மிகம், நம்பிக்கை மற்றும் அறிவியலின் இந்த சங்கமம் தான், கும்பமேளாவின் முக்கிய ஆதாரம்,  கும்பமேளாவின் ஆன்மிக தொடர்பு, வேத ஞானம் மற்றும் புராணக் கதைகளில் வேரூன்றியுள்ளது, இது நம்பிக்கை என்பதை தாண்டி, இயற்கை அறிவியல் மற்றும் பிரபஞ்ச நிகழ்வுகள் பற்றிய ஆழமான புரிதலையும் பிரதிபலிக்கிறது. சமுத்திர மந்தனம் அதாவது பாற்கடலை கடையும் நிகழ்வு, நமது வாழ்க்கை, பிரபஞ்சம் ஆகியவற்றிடையே உள்ள பிணைப்பை, ஆன்மீகம் மற்றும் அறிவியல் சிந்தனையுடன் நமக்கு உணர்த்துகிறது.

தேவர்களும், அசுரர்களும் மரணமில்லா வாழ்வை வேண்டி, பாற்கடலை கடைந்த நிகழ்வை இது விவரிக்கிறது. புராணம் என்று கூறினாலும் கூட, இது  இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் அண்டவியல் ஆகியவற்றில் நவீன கண்டுபிடிப்புகளை பிரதிபலிக்கும் பல குறிப்புகளை கொண்டுள்ளது.  பாற்கடலை கடையும் செயலானது பிரபஞ்சத்தை ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்றையும் குறிக்கிறது. அறிவியல் ரீதியாக, இதை மூலக்கூறு தொடர்புகள் மற்றும் பொருள் மற்றும் ஆற்றல் மாற்றத்தின் சுழற்சி செயல்முறைகளுக்கான உருவகமாகக் காணலாம்.  தேவர்களும், அசுரர்களும் எதிரெதிர் திசையில் இழுப்பது என்பது,  எதிரெதிர் ஆற்றல்கள் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து சமநிலையை ஏற்படுத்தும் எனும் இயற்பியல் விதியை பிரதிபலிக்கிறது.  பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட ஆலகால விஷம், காமதேனு, சந்திரன், மஹாலக்ஷ்மி மற்றும் அம்ரிதம், படைப்பின் பல்வேறு கூறுகளை விளக்குகிறது.  ஆலகாலம் என்பது, நாம் ஒரு செயலை செய்யும் போது உருவாகும் நச்சுக்கள், உதாரணமாக தொழிற்சாலையில் உற்பத்தி செய்யும் போது வெளியேறும் நச்சு கலவைகள் போன்றவற்றை குறிக்கிறது. அதை சிவன் பருக முற்படும் போது, பார்வதி தேவி தடுக்கிறார். சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிப்பதில் சுத்திகரிப்பு நிலையங்களின்  பங்கை இது  குறிக்கிறது – இது சுற்றுச்சூழல் அறிவியலின் மையக் கருத்தாகும்.

காமதேனு மற்றும் லட்சுமியின் வெளிப்பாடு செழிப்பு மற்றும் வளத்தை குறிக்கிறது, இவை இயற்கையுடன் இணக்கமான வாழ்தல் நமக்கு என்ன கிடைக்கும் என்பதை உணர்த்துகிறது.  சந்திரனின் தோற்றம் அண்ட அமைப்பையும், பூமியில் கடல் அலைகள், வேளாண் பருவங்கள் மீது அவை ஏற்படுத்தும் தாக்கத்தையும்  பிரதிபலிக்கிறது, வானவியலுடன் பூமி இணைந்திருப்பதை வலியுறுத்துகிறது. இறுதியில் வெளிப்பட்ட அமிர்தம், அழியாமையைக் குறிக்கிறது, இதற்கு மரணமில்லா வாழ்வு என்பது பொருளல்ல, ஆனால் அறிவு, தன்னை உணர்தல் மற்றும் ஆழ்நிலை தேடலுக்கான ஒரு உருவகமாக. அறிவியல் அடிப்படையில், இது வாழ்க்கையின் தரம் மற்றும் நீண்ட ஆயுளை மேம்படுத்தும் முன்னேற்றங்களைத் தேடுவதற்கு இணையாக உள்ளது. அமிர்தத்தை அடையும் முயற்சியில் ஏற்பட்ட போராட்டங்கள், சவால்கள் அவற்றை வெற்றிக்கரமாக கையாண்டது போன்றவை, விடாமுயற்சி, கூட்டு முயற்சி  மூலம் முன்னேற்றங்களை அடைய முடியும் என்று உணர்த்துகிறது.

கும்பமேளாவும் இத்தகைய ஒரு நிகழ்வு தான். கோடிக்கணக்கான மக்கள் தங்கள் உதடுகளில் மந்திரத்தை ஜெபித்தபடி, சடங்குகளை செய்து, தங்கள் ஆற்றலை பிரபஞ்ச ஆற்றலுடன் ஒன்றிணைக்கிறார்கள். இதை  நரம்பியல் மற்றும் உளவியல்  ஆராய்ச்சிகளும் ஏற்றுக் கொள்கின்றன. கூட்டு தியானம் மற்றும் கூட்டு பிரார்த்தனை ஆகியவை ஒத்திசைவான எண்ண அலைகளை  உருவாக்கி, மன தெளிவு, புத்துணர்ச்சி  மற்றும் ஒற்றுமை உணர்வை ஊக்குவிக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. மேலும், கும்பமேளாவின் போது புனித நதிகளில், நீராடுவது ஆழமான அறிவியல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி போன்ற நதிகள், வெறும் நீர்நிலைகள் மட்டுமல்ல, இந்திய நாகரிகத்தின் உயிர்நாடிகள். கங்கையின் நீரில் தனித்துவமான நுண்ணுணியிர் உண்ணிகள் உள்ளன, அவை தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அகற்றுவதாக  என்பதை நவீன ஆராய்ச்சிகள் கூறுகின்றன. புனித நீராடுதல் என்பது நீர்சிகிச்சையின் ஒரு முக்கிய அம்சமாகும்.  அங்கு நீரில் மூழ்குவது ரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது, உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது மற்றும் மன அமைதியை ஏற்படுத்துகிறது.

கிரகநிலைகளை மையமாக வைத்து கும்பமேளாவில் காலம் குறிக்கப்படுகிறது. பாரத விஞ்ஞான ஞானத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.  கும்பமேளாவின் போது வியாழன், சூரியன் மற்றும் சந்திரனின் வரிசை, நீர்நிலைகள் மற்றும் மனித உடலில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு தனித்துவமான  ஈர்ப்பு விசையை உருவாக்குகிறது. வானியல் சாஸ்திரத்தை நன்கு அறிந்த பண்டைய இந்திய வானியலாளர்கள் மற்றும் ஜோதிடர்கள், இந்த கோள்களின் வரிசைகளின் முக்கியத்துவத்தையும் மனித வாழ்க்கையில் அவற்றின் தாக்கத்தையும் அங்கீகரித்து, அவற்றை கும்பமேளாவின் ஆன்மீக கட்டமைப்பில்  ஒருங்கிணைத்தனர். கும்பமேளாவின் போது செய்யப்படும் ஆன்மீக நடைமுறைகளான மந்திர ஜபம், யாகங்கள் மற்றும் சத்சங்கங்கள் வெறும் சடங்கு சார்ந்தவை மட்டுமல்ல, அறிவியல் அடிப்படையையும் கொண்டுள்ளன. மந்திர ஜபம் மூளையின் நரம்பியல் பாதைகளுடன் எதிரொலிக்கும் குறிப்பிட்ட ஒலி அதிர்வெண்களை உருவாக்குகிறது. மந்திர ஓசைகள் மற்றும் யாக அக்னியில் அர்ப்பணம் செய்யப்படும் பொருட்கள், காற்றில் கலந்துள்ள நச்சுக்களை நீக்க கூடியது. இந்த நடைமுறைகள் ஆன்மீகமும் அறிவியலும் எவ்வாறு இணைந்து உடல், மன மற்றும் ஆன்மீக நல்வாழ்வுக்கு உகந்த ஒரு முழுமையான சூழலை உருவாக்க முடியும் என்பதை நிரூபிக்கின்றன.

முக்கியமான விஷயங்கள் குறித்த உரையாடல்களை ஊக்குவிக்கும் ஒரு தளமாக கும்பமேளா அமைகிறது.  பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த துறவிகள், அறிஞர்கள் ஒன்று கூடி ஆன்மீகம் மற்றும் நெறிமுறைகள் முதல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு,  வளர்ச்சி உள்ளிட்ட  தலைப்புகளைப் பற்றி விவாதிக்கின்றனர். இந்தக் கருத்துக்களின் சங்கமம், பாற்கடலை கடையும் போது பல்வேறு கண்ணோட்டங்களை கொண்டவர்கள் ஒரே இடத்தில் குழுமியதை குறிக்கிறது. செயல்முறையை பிரதிபலிக்கிறது, அங்கு பல்வேறு கண்ணோட்டங்கள் ஞானத்தையும் தீர்வுகளையும் உருவாக்க தொடர்பு கொள்கின்றன. சுற்றுச்சூழல் அறிவியலின் பார்வையில், இணைந்து வாழுதல், நிலைத்தன்மை உள்ளிட்டவற்றை கும்பமேளா உணர்த்துகிறது.   கும்பமேளாவின் மையமாக இருக்கும் ஆறுகள், இயற்கை வளங்களை பாதுகாப்பதில் மனித குலத்திற்கு உள்ள  பொறுப்புகளை நினைவூட்டுகின்றன. கும்பமேளாவின் போது கூட்டு சடங்குகளின் நடைமுறை மற்றும் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பது, சுற்றுச்சூழல் சமநிலை மற்றும் பாதுகாப்பு முயற்சிகளில் சமூக பங்கேற்பின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. காலநிலை மாற்றம், மாசுபாடு  போன்ற சமகால சவால்களை எதிர்கொள்வதில் இந்தக் கொள்கைகள் மிக முக்கியமானவை.

சமூக கண்ணோட்டத்தில் கும்பமேளா, ஒன்றிணைப்பு மற்றும் நல்லிணக்கத்தை எடுத்து கூறுகிறது. ஜாதி, மதம், நாடு போன்ற வேறுபாடுகளை தாண்டி, ஒற்றுமை உணர்வை வளர்க்கிறது. இந்தக் கூட்டு உணர்வு, உலகம் ஒரு குடும்பம் என்ற  கருத்தான வசுதைவ குடும்பகம் என்ற கருத்தை உணர்த்துகிறது.  இவ்வாறு கும்பமேளாவானது, பன்முகத்தன்மையை கொண்டாடும் நிகழ்வாக அமைந்துள்ளது, வேறுபாடுகள் அற்ற ஒரு சிறு பிரபஞ்சமாக மாறுகிறது.

இந்த நிகழ்வு பண்டைய பாரதிய சிந்தனையின் முழுமையான பார்வைக்கு ஒரு சான்றாக நிற்கிறது,  இங்கு  அறிவியலும் ஆன்மீகமும் எதிரெதிர் சக்திகளாகக் கருதப்படுவதில்லை, மாறாக தேடலுக்கான விடையை நோக்கி செல்லும் வெவ்வேறு பாதைகளின் ஒன்றிணைப்பாக கருதப்படுகிறது. பாற்கடலை கடையும் நிகழ்வும்,  அதன் அறிவியல் விளக்கங்களும்,  அறிவு தேடல் மற்றும் பரிணாம வளர்ச்சியுடன் பின்னிப் பிணைந்துள்ளன என்பதை நினைவூட்டுகின்றன,

இவ்வாறாக கும்பமேளா என்பது வெறும் வழிபாட்டுக் கூட்டம் மட்டுமல்ல, ஆன்மீகம், நம்பிக்கை மற்றும் அறிவியல் ஆகியவற்றுக்கு இடையேயான நித்திய பிணைப்பின் கொண்டாட்டமாகும். இது மனித இருப்பின் சாரத்தையும், பிரபஞ்சத்துடனான அதன் தொடர்பையும் உள்ளடக்கியது, வாழ்க்கை மற்றும் பிரபஞ்சத்தின் மர்மங்கள் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகிறது. பண்டைய மரபுகளும், நவீன அறிவியலும் எவ்வாறு ஒன்றிணைந்து ஒரு இணக்கமான மற்றும் அறிவார்ந்த உலகத்தை உருவாக்க முடியும் என்பதை இந்த கும்பமேளா மீண்டும் ஒரு முறை நிரூபிக்கிறது. நமது முன்னோர்களின் ஞானத்தைப் பற்றி சிந்திக்கவும், நிலைத்தன்மை மற்றும் ஒன்றிணைப்பு கொள்கைகளைத் தழுவவும், பிரபஞ்சத்தில்  நமது இடத்தைப் பற்றிய ஆழமான புரிதலுக்காக பாடுபடவும் இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

ஆர்கனைசரிலிருந்து தமிழில் கண்ணப்பன்