குமார சஷ்டி உற்சவத்தில் முருகன் – வள்ளி திருமணம்

நமது ஹிந்து ஸநாதன தர்மம் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்படவேண்டிய வேதங்களை அடிப்படையாகக் கொண்டது.
அத்தகைய அரிய பெரிய வேத நெறியில் நான்கு பேறுகளை விரிவாக உணர்த்துகிறது. உபநிஷத்துக்களோ, வேதங்களின் பிழிவை, வேதாந்தமாக நமக்கு எடுத்துரைக்கின்றன. சமுதாயத்தில் உள்ள பாமரர்களும் வேதநெறியில் செல்ல விழைகிறார்கள். அத்தகைய கண்ணோட்டத்தில், உண்மையான மெய்ப்பொருளை அறியவேண்டுமென்றால் பாமரரும் எளிதாகப் புரியும்படி இவற்றை எடுத்துச் சொல்ல வேண்டியது நமது கடமை. மருந்தினை தேனில்
குழைத்து கொடுப்பதுபோல் புராண நிகழ்வுகள் மூலம் புகட்டினால் ஒவ்வொன்றின் தத்துவங்கள் மற்றும் கலாச்சாரம் இவை எளிதில் புரியும். இல்லையா ??முருகன் வள்ளியை ஆட்கொள்ள எண்ணிப் பல்வேறு திருவிளையாடல்களை நிகழ்த்தியுள்ளார். பரமாத்மாவான பச்சை மயில் வாகனன் வலியச் சென்று ஜீவாத்மாவான ஸ்ரீவள்ளியைத் தனதாக்கிக் கொண்டதே இதன் தத்துவம். குமார சஷ்டித் திருவிழாவிற்கு மகுடம் சூட்டினாற்போல அமைகிறது கிருஷ்ணாபுரத்தில் இன்று கொண்டாடப்படும் வள்ளி கல்யாணம். இதற்கான முன்னேற்பாடுகளாய் முத்து குத்துதல், சூரிகை, ப்ரவர்க், லங்காஷ்டகம் போன்றவை நடைபெறும். நெல்லை உரலில் போட்டு குத்தி, தவிடு உமி நீங்கிய அரிசியை நெய்யில் போட்டுக் கலந்து முடி போட்டு அதன் பின் மங்களாக்ஷதையை பயன்படுத்துவது மரபு.
திருமணத்தில் மணமேடை, மண்டபம், மங்கள வாத்தியம், சீர்வருசை, நிர்வாகங்கள் பாராட்டும்படி உள்ளனவா, எந்தெந்த ரிஷிகள், மஹான்கள் வந்துள்ளார்கள் போன்றவற்றை முறையே சூரிகை, ப்ரவர்க், லங்காஷ்டகம் தெரிவிக்கும். அதன் பின்னர் மங்கள வாத்தியங்கள விண்ணைப் பிளக்கும் அளவு ஒலிக்க, வேத மந்திரங்கள் முழங்க
மங்கள நாணை ஸ்ரீ வள்ளியின் கழுத்தில் முருகப் பெருமான் கட்ட, பின்னர் நலங்கு போட்டு விளையாட தெய்வத் திருமண நிகழ்வுகள் முடிவுக்கு வருகின்றன.

 

                   

 

மேல்மங்கலம் வெங்கடாசல பாகவதர் தலைமையில் சிறப்பு பஜனை ஏற்பாடுகளும் இன்று செய்யப்பட்டுள்ளது.
பரமாத்ம – ஜீவ – ஸ்வருப – ஐக்யத்தை உலகுக்கு உணர்த்துவதுதான் வள்ளி திருமணத்தின் உட்கருத்து..வள்ளியின் திருமணம் மட்டுமன்று. நம் ஒவ்வொருவரின் வீடுகளில் நடைபெறும் ஒவ்வொருவரின் திருமணமும்
கூட. ஆண்டவனை அடையும் பொருட்டு ஒவ்வொருஜீவனும் கொண்டுள்ள ஏக்கத்தை பக்தி,உணர்வு பூர்வமாக பாடி, ஆடி, கசிந்துருகி, ப்ரபஞ்சத்தின் ஒரே புருஷனாகிய ஸுப்ரமண்யனான பரப்ரம்மத்தை அடைவதே முருகன் – வள்ளித் திருமணத்தின் நோக்கமாகும்.

வள்ளி என்ற ஜீவன் மற்ற ஜீவன்களைவிட மேம்பட்டு இருக்கிறது. அவள் இறைவனைப் பற்றி தெரிந்து இருக்கிறாள், ஆனால் நேரே காணவிழைகிறாள். அற்றைக்கு இரை தேடாமல் மறுமைக்கு முக்தியை தேடுகிறாள். தியானம்,தாரணை மூலாமாக மனதை ஒருமுகப்படுத்தித் தவம்மேற்கொள்கிறாள். சமாதி எனப்படும் எட்டாவது அங்கத்தில் பரப்ரம்மத்துடன் ஒன்றுவதற்குண்டான நிலை பெற அவளுடையமுயற்சி மட்டும் போதவில்லை. அத்தருணத்தில் பரமாத்மாவான முருகன் அவளை ஆட்கொள்ள வருகிறான். பல்வேறு பரிசைகள் செய்து பின் கிழவனாக வந்து ஆசீர்வதிக்கிறார். குருவாகி தீட்சை தந்து மும்மலங்களையும் இருவினையையும் போக்குகிறான். ஓம்கார மந்திரத்தின் உட்பொருளை முருகன் உணர்த்துகிறான்.