கோவை மாவட்டம் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் கடந்த ஆண்டு அக். 23ல் கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பிற்கு மூளையாக செயல்பட்ட அதே பகுதி ஜமேஷா முபின் 28 என்பவர் பலியானார். தொடர்புடைய 11 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 11 பேர் மீதும் சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதன்பின் 12-வது நபராக உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த முகமது இத்ரீஸ் என்பவரையும் கோவையில் கைது செய்தனர். மேலும் 13வது நபராக உக்கடம் அன்பு நகரை சேர்ந்த முகமது அசாருதீன் 36 என்பவரை கேரள மாநிலம் பையூர் சிறையில் வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து விசாரித்து மீண்டும் சிறையில் அடைத்தனர். கடைசியாக கைது செய்யப்பட்ட முகமது அசாருதீன் இத்ரீசை காவலில் விசாரிக்க என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர். கோர்ட் அவர்களை எட்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது. இதை தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவர்களை செப். 25ம் தேதி கோவை அழைத்து வந்தனர். அவர்கள் சென்று வந்ததாக தெரிவித்த அரபு பள்ளி ஆலோசனைகள் நடத்தியதாக கூறப்படும் இடங்கள் வீடு ஆகிய இடங்களுக்கு நேற்று அழைத்துச் சென்று காலை 7:15 முதல் 9:00 மணி வரை விசாரித்தனர்.