இன்று இல்லங்களில் நமது ஆயிரங்காலத்துப் பயிர் எனப்படும் திருமண உறவு அதன் தாத்பர்யத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட சூழலில்தான் பயிராகும் அவலம். அதனால், அறுவடையின் விகிதமும் தரமும் படுபாதாளத்தில் இறங்கிக் கொண்டிருக்கிறது. எப்படி? எதனால்? எது உகந்தது? எப்படி அடைவது? என பிரித்து அதனை ஆராய்வோம்.
எப்படி உள்ளன இன்றைய குடும்பங்கள்?
கூட்டுக் குடும்பங்கள் சிதைந்த நிலை.
முதியோர்கள் புறக்கணிக்கப்பட்டதும், குழந்தைகள் போதிய அரவணைப்புப் பெறாத நிலை.
கணவன் – மனைவி மன வேறுபாடுகள், விவாகரத்து வரை போவதால் உடையும் நிலை.
பெற்றோர்கள் பிரிந்து விடுவதால் அடிப்படை அன்பை, வாழ்வியல் பயிற்சியை இழக்கும் குழந்தைகள்.
கணவன் – மனைவி இணக்கமில்லாததால் தாறுமாறாக தறிகெட்டுப் போயிருக்கும் குடும்பப் பொருளாதாரம்.
உலகமயமாக்கப்பட்ட கல்வியால் நமது பண்பாட்டின் அடிப்படையில் அமைந்த கல்வி முறை வீட்டிலேயே முற்றிலும் கைவிடப்பட்ட நிலை.
ஆண் – பெண் உறவை பவித்ரமானதாக பாவித்த சமூகம், இன்று வெறும் பாலுறவு கோணத்தில் மட்டுமே பார்க்க வைத்திடும் சூழல்.
சமுதாய வளர்ச்சியின் போக்கில் கைவிட வேண்டிய தீண்டாமை, சாதி, சமய வேறுபாடுகள் மூட நம்பிக்கைகளை இன்னமும் பிடித்து வைத்துக் கொண்டிருப்பது.
நாம் எல்லாரும் ஒன்றுதான். ஒரே குடும்பம்தான் என்று பரந்த அன்பும் மரியாதையும் குடும்பத்தில் இருந்தால்தான், நாட்டிலும் அதே உணர்வு பெருகும் முக்கியமான இதை இன்றைய தேவையை கைகொள்ளாமல் இருப்பது.
மோசமான பொருளாதார சூழலில் சரியான வயதில் திருமணம் செய்து கொள்ள முடியாமை, திருமணம் அமைந்தாலும் தம்பதிகள் சேர்ந்திருக்க முடியாத சூழல், பணத்தை மட்டுமே பிரதானமாக கொண்ட திருமணங்கள்.
சரியான வயதில் தாம்பத்யம் மறுக்கப்படும் நிலையில் மன அழுத்தத்தால், குடி, போதை பழக்கங்களால் சின்னஞ்சிறு பெண்களிடம் தங்கள் இச்சையை தீர்த்து கொள்ளும் வக்கிரப்போக்கில் போகும் இளைஞர்கள் அதிகரித்திருப்பது.
ஆணோ பெண்ணோ நன்றாக படிப்பது, உழைப்பது பொருளீட்டுவது சுதந்திரமாக வாழ்வது என்கிற மனோபாவமுள்ள மேற்கத்திய கலாசாரத்திடம் ஈர்ப்பு.
காதல் மணங்களுக்கு ஆதரவு இல்லாதது மட்டுமல்ல, கவுரவ கொலை வரை போகும் எதிர்ப்பலை.
எந்த கேள்விக்கும் இடமில்லாமல் கட்டவிழ்த்து விடப்பட்ட (வளர்க்கப்பட்ட) ஆண்களின் ஆதிக்க உணர்வு மற்றும் பொறுப்பற்ற தன்மையால் குடும்பச்சுமை முழுவதையும் பெண்களே சுமப்பதும், அதனால் மன மகிழ்ச்சியற்ற, பாதுகாப்பற்ற, விரக்தியான நிலையில் விழும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருவது.
பெண் குழந்தைகளை இன்னமும் ஒரு சுமையாக நினைக்கும் சூழல்.
குடும்பம் சமூகத்தின் அடிப்படை ஆதாரம் என்பதால் திருமணத்திற்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் தரும் மனநிலை. இதனால், நிகழ்கால படிப்பு, பொழுதுபோக்கு, உணவு, வாழ்க்கை வசதி, விருப்பம் இவை அத்தனையையும் தியாகம் செய்துவிட்டு திருமணத்திற்காக பொருள் சேர்ப்பது.
ஒரு சில நாள் வைபவத்தில் அத்தனை பொருளையும் இழப்பது, ஆடம்பர செலவினங்களால் கடனாளியாவது.
சாதி, பணம், திருமணம் பேசிமுடிக்க குடும்பத்தில் பெரியவர்கள் இல்லாமலிருப்பது, சகோதரிகளுக்கு மணம் முடித்தபின் திருமணம் முடிக்கும் நமது பழக்கம், பொருளீட்டும் வாய்ப்புகள் பரந்துபட்டிருப்பதால் இருபாலருக்கும் ஜோடி கிடைப்பதில் சிரமம் இவைபோன்ற பல காரணங்களால் திருமணம் ஆகாமலேயே இருந்துவரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது.
கைவிடப்பட்ட குழந்தைகள், முதியோர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது அவர்கள் உணவு இருப்பிடத்திற்காக வயதுக்கு மீறி உழைக்க வேண்டிய கட்டாயத்திலிருப்பது.
உடனடியாக குடும்பத்தில் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள்
குடும்பத்தில் கணவன், மனைவியிடையே பரஸ்பர உரையாடல், குழந்தைகளுடன் விளையாடி மகிழ்தல், முதியோர்களுடன் பழைய கதைகள் பேச நேரம் தருதல், உறவினர் இல்லத்து சுப விசேஷங்களில் குடும்பத்துடன் கலந்து கொள்வது.
குல தெய்வ வழிபாடு, ஊர் திருவிழா, பண்டிகைகளில் ஆர்வமும் முக்கியத்துவமும் வைப்பது.
வயது முதிர்ந்த பெற்றோர்களுடன் பிள்ளைகள் அனைவரும் கூட மகிழ சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவது.
தேவையற்ற பொருள்களை வாங்கி குவிக்காமல் பணத்தை செலவழிப்பதில் அக்கறை காட்டுவது.
சேமிப்பு பழக்கத்தை பிள்ளைகளிடம் வளர்ப்பது.
குழந்தைகளிடம் ஆண், பெண் வித்தியாசம் காட்டாமல் அவரவர் கடமைகளைக் கற்றுகொள்ள பழக்குவது.
மனைவி மக்களை அடிப்பது, குடிப்பழக்கம், புகைபிடித்தல் இவை போன்ற மோசமான பழக்கங்களை விட்டொழிப்பது.
வீட்டு வேலைகளில் ஆண் குழந்தைகளுக்கும் பயிற்சி தருவது.
துரித உணவுகளை விடுத்து நமது பாரம்பர்ய உணவுகளுக்கு முக்கியத்துவம் தருவது. தினமும் சத்தான காய்கறிகள், பழங்கள், கிளைகளை உணவில் சேர்த்துக் கொள்வது.
உடற்பயிற்சி, விளையாட்டு, தியானம், ஆடல், பாடல், பஜன், நாடகம் போன்றவைகளுக்கும் நேரம் ஒதுக்குவதும் ரசித்தும் மகிழ்வது.
வீட்டின் இட வசதிக்கேற்ப துளசி, பூச்செடிகள், கீரைகள், கற்பூர வல்லி போன்ற மூலிகைச் செடிகள் காய்கறிகள் போன்றவற்றை வளர்த்தல்.
அருகிலுள்ள கோயில்களுக்கு குடும்பத்துடன் தவறாது சென்று வருதல்.
குடும்பத்தில் ஆணோ பெண்ணோ சமூக சேவையில் விருப்பம் கொண்டு அதற்கு நேரத்தையும் பணத்தையும் தர முன்வருபவர்களை புரிந்து கொள்வதுடன், ஊக்குவிப்பது, ஆதரிப்பது.