குடும்பப் பிணைப்பு என்ற பண்புப் பதிவு கலாச்சாரம் காக்கும் ஒரு கவசம்

பிள்ளைகள் அம்மா, அப்பாவை கவனித்துக்கொள்வது; அண்ணன், தம்பி, அக்கா, தங்கை பாசம்; இவை சேர்ந்து சிருஷ்டிக்கும் குடும்பப் பிணைப்பை (ஹிந்து மகளிருக்கான நிகழ்ச்சி ஒன்றில்) சில கண்கூடான வாழ்க்கைகள் வாயிலாக சித்தரித்துக் காட்டியுள்ளார் ஆர்,எஸ்.எஸ் மூத்த பொறுப்பாளர் கிருஷ்ண கோபால். படியுங்கள்: ஆசுதோஷ் முகர்ஜி – கல்வியாளர், வழக்குரைஞர், நீதிமான், கல்கத்தா பல்கலைக்கழக துணைவேந்தர். மேற்படிப்புக்கு வெளிநாடு செல் என வைஸ்ராய் கூறியபோது துள்ளிக் குதிக்கவில்லை இவர். என் தாயிடம் கேட்டுச் சொல்கிறேன் என்றார்.

மறுநாள் சம்மதம் தெரிவித்த போது வைஸ்ராய், நேற்றே சொல்லியிருக்கலாமே என்றார். இவர் கூறிய பதிலில் வியந்து போனார்: “நான் சம்மதம் கூறி தாயிடம் தகவல் சொல்வதற்கும் தாயின் சம்மதம் பெற்று உங்களிடம் தகவல் சொல்வதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு; வைஸ்ராயின் வார்த்தையை விட என் தாயின் வார்த்தைதான் எனக்கு முக்கியம்” என்பதுதான் அவர் சொன்ன பதில். இதுவல்லவோ பாரதப் பண்பாட்டின் விளைச்சலான குடும்பப் பிணைப்பு! (ஆசுதோஷின் புதல்வர்தான் சியாமா பிரசாத் முகர்ஜி).

படித்து முடித்ததும் பங்கிம் சந்த்ர சட்டர்ஜிக்கு மாஜிஸ்ட்ரேட் பணி காத்திருந்தது. “பொறுங்கள்! வேலையில் சேரலாமா என்று பெற்றோரின் சம்மதம் கேட்கிறேன்”  என்று வைஸ்ராயிடம் கூறி அசத்தினார் இவர்.

மற்றொருவர் ஜெயப்பிரகாஷ் நாராயண் (ஜெ.பி). ஜெர்மனியில் ஆராய்ச்சிப் படிப்பு (பிஹெச்.டி) படித்துக்கொண்டிருந்தபோது இங்கு தாயின் உடல்நிலை மோசமடைந்தது.  உடனே வந்தால் அம்மாவை உயிருடன் காணலாம். ஆனால் படிப்பு நின்றுவிடும்.

‘நான் பிஹெச்.டி ஆகாவிட்டாலும் பரவாயில்லை,  என் தாயின் இறுதிக் காலத்தில் அவளருகில் இருப்பதே எனக்கு முக்கியம்’ என்று வந்துவிட்டார்.

இந்த மகன்களைப் பெற்ற தாய்மார்கள் தான் எவ்வளவு பாக்கியசாலிகள்!

சி .டி. தேஷ்முக் – துர்காபாய் தேஷ்முக் ஆதர்ச தம்பதியர். தேஷ்முக் 1943ல் ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்பட்ட முதல் பாரதியர்; நேரு அமைச்சரவையில் நிதி மந்திரி; பிறகு பல்கலைக்
கழக மானியக் குழு (UGC) சேர்மன். ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்றார், மூவாயிரம் ரூபாய் பெறத் தகுதியிருந்தும்!

அவரைத் தேடி வந்தது 30,000 முப்பதாயிரம் டாலர் சம்பளத்துடன் IMFன் டைரக்டர் ஜெனரல் பதவி. இவர் அந்தப் பதவியை ஏற்கவேண்டும், அது தேசத்துக்கு கௌரவம் சேர்க்கும் என்று பிரதமர் நேரு  விரும்பினார். மனைவியுடன் கலந்தாலோசிக்கிறேன் என்று மட்டுமே பதில் கூறினார் தேஷ்முக்

“நமக்கெதற்கு இவ்வளவு பணம்?” என்றாராம் துர்காபாய் அம்மையார்.. முப்பதாயிரம் டாலர் அந்தத் தம்பதியரை கொஞ்சமும் சலனப்படுத்தவில்லையே. சுதேசி சேவையே பெரிதென வாய்ப்பை உதறித் தள்ளினர்.

இதுவும் பாரதத்துக்கே உரிய உயர் பண்புதான்; பாரதப் பண்பாட்டின் விளைச்சலான குடும்பப் பிணைப்பு தந்த வரம்தான் இது.

நமது இதிஹாசத்தில்  பரதனுக்காக ராமனும் ராமனுக்காக லட்சுமணனும் தந்தை சொல் காக்க செய்த தியாகம் சகோதர பாசத்தை பறைசாற்றவில்லையா!

அதே பாரத பாரம்பரியத்தில் வந்த சேர இளவரசர் இளங்கோ தன் தமையன் செங்குட்டுவன் முடிசூட்ட வேண்டி தனது இளவரசுப் பதவியைத் துறக்கவில்லையா? துறவறம் பூண்டு இளங்கோ அடிகள் ஆனாரே?

இவர்களை எல்லாம் இன்று நாம் நினைவு கூர்கிறோம் என்றால் இவர்கள் போன்றோர் வாழ்ந்த வாழ்க்கை, அதில் இழையோடிய (இன்று நமக்கெல்லாம் வெகுவாகத் தேவைப்படும்)  சனாதன தர்மத்தின் வரப் பிரசாதமான  குடும்பப் பிணைப்பு, இவர்களை நாம் நினைத்துப் பார்க்கச் செய்கிறது.