குடும்பத்தில் தொடங்குவோம் என்கிறது ஆர்.எஸ்.எஸ்.

மொழி என்றால் பாஷை என்பதுதான் நமக்கு நினைவுக்கு வரும். மொழி என்ற வினைச் சொல்லை நினைத்துப் பாருங்கள். மொழிதல் என்பது சொல்லுதல் என்ற பொருள் தரும். அதாவது மொழி (பாஷை) என்றால் அது பேசப்படவேண்டும். எந்த ஒரு மொழியிலும் நூலகம் நூலகமாக நூல்கள் கொட்டிக் கிடந்தாலும் அந்த மொழியை யாரும் பேசவில்லை என்றால் அது வழக்கொழிந்து போகும். விஜயபாரதம் வாசகர்களில் பெரும்பாலானவர்களின் தாய் மொழி தமிழ் என்று வைத்துக்கொள்வோம்.

நமது வாசகர்களின் வீடுகளில் விருந்தினர் வரும்போது குழந்தைகள் ஹாய் அங்கிள், ஹாய் ஆண்டி என்று வரவேற்பு கொடுக்காமல் வாங்க சித்தப்பா, வாங்க சித்தி என்று தாய் மொழியில் வரவேற்க நாம்தான் பழக்க வேண்டும். இந்த modher-longவார அட்டைப்படக் கட்டுரையும் அதற்காகத்தான். குழந்தைகளுக்கு பள்ளியில் தமிழ்ப் பேச்சு அபூர்வமாகிவிட்டது, இளைஞர்களுக்கு பணியிடங்களில் தமிழ் அற்றுப்போய்விட்டது என்று அங்கலாய்ப்பதில் அர்த்தம் இல்லை. வீடுதான் இருக்கிறதே, குடும்பம் தான் இருக்கிறதே, தாய்மொழியைச் தழைக்கச் செய்ய? தாய்மொழியில் பேச, தாய்மொழியை உயிரோடு இருக்கச் செய்ய நாமெல்லாம் இருக்கிறோமே! எதற்கு அதைரியம், எதற்கு அழுமூஞ்சித்தனம்? தமிழை வாழவைப்போம், தாய்மொழியை சிரஞ்சீவியாய் புழங்க வைப்போம்.

* தாய்மொழியில் கல்வி கற்ற ஒரு மாணவர் மற்ற மொழிகளையும் சுலபமாக கற்றுக் கொள்ள முடிகிறது. * பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வியை தங்கள் சொந்த மொழியிலேயே அளிக்க உறுதி பூண வேண்டும். * கல்வியிலும் நிர்வாகத்திலும் நீதித் துறையிலும் பாரதிய மொழிகளை பயன்படுத்துவதற்கு முன்முயற்சி செய்யவேண்டும்.

– ஆர்.எஸ்.எஸ் (2015 மார்ச் அகில பாரத பொதுக்குழு தீர்மானத்திலிருந்து)