குடும்பங்களை சீரழிக்கும் தொலைக்காட்சிப் பெட்டி

 

ஸ்வதர்மம் என்பது பற்றி சில விஷயங்கள் பார்ப்போம். பிறப்பிலேயே பெண்களுக்கு உத்தம குணங்களான மென்மை, பொறுமை, விட்டுக் கொடுக்கும் தன்மை உண்டு. பெண்மை, தாய்மை என்பது பற்றியெல்லாம் நாம் உயர்வாகப் பேசுகிறோம்.

குடும்பத்தில் ஆண்களுக்கும் அதேபோல் ஸ்வதர்மம் என்பது இருக்கின்றது. அதில் கொஞ்சம் கடுமை, முரட்டுத்தனம் இருக்கும். எல்லாவற்றுக்கும் விதிவிலக்கு உண்டு என்பதை நாம் மறந்து விடக்கூடாது. வாழ்க்கையில் ஆணோ, பெண்ணோ ஏதாவது சாதிக்க வேண்டுமானால் போராடித்தான் ஆக வேண்டும். எதிர்படும் சவால்களை சமாளித்துத் தான் ஆக வேண்டும். குடும்பம் நடத்துவது எளிமையானது, இயற்கையானது என்றாலும், பல சமயங்களில் போராடித்தான் ஆக வேண்டி இருக்கிறது.

பெண்களிடம் இயற்கையாக உள்ள பொறுமை, தியாகம், பல பிரச்சினைகளை சமாளிக்க உதவுகிறது. குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தால் தான் சச்சரவு இல்லாமல் இருக்கும்.

அன்பால் பிணைக்கப்பட வேண்டிய குடும்பம் இன்று நீயா நானா என்ற போட்டி வாத விவாதத்தில் இறங்க ஆரம்பித்திருக்கின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளரும் குழந்தைகளின் மனோ நிலை எப்படி இருக்கும்? அதை நாம் இப்போது படிப்படியாக பார்த்துக் கொண்டு வருகின்றோம்.

நகரத்தில் உள்ள பெண்கள் வெளியே செல்கிறார்கள். கிராமங்களில் இந்த அளவு இல்லை என்கிறோம். ஆனால் பெண்கள் வேலைக்கு சென்றாலும், செல்லா விட்டாலும் குடும்பத்தின் கட்டமைப்பு முன்பு இருந்தபடி இப்போது இல்லை. பெண்கள் வெளியே வேலைக்குச் செல்வதுதான் பிரச்சினை என்றால், வேலைக்குச் செல்லாத பெண்கள் வீட்டிலும் இந்த நிலை வர ஆரம்பித்திருக்கின்றது.

பெண்களின் மனோ நிலை மாறிக் கொண்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் காசு கொடுத்து நாம் வீட்டில் வைத்திருக்கும் தொலைக்காட்சி பெட்டிதான். இது விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியின் அடையாளம் என்றாலும் அது எல்லை மீறி குடும்பத்தையே அதல பாதாளத்திற்கு எடுத்துச் செல்லும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்பு வேலைக்குச் செல்லாத பெண்கள் கிடைக்கும் நேரத்தை நல்ல வழியில் செலவிடுவார்கள். நல்ல நூல்கள் படிப்பார்கள். பலர் இணைந்து பஜனை செய்வார்கள். கதை சொல்லுதல் போன்ற விஷயங்களை செய்வார்கள். முக்கியமாக கைத்தொழில்கள் கற்றுக் கொள்வார்கள். கற்றுக் கொடுப்பார்கள். சில குடும்பங்களில் அதன் மூலம் வருமானமும் ஈட்டிக் கொண்டிருப்பார்கள். ஆனால் இன்று அதே பெண்கள் அநேகமாக தொலைக்காட்சிப் பெட்டிக்கு  அடிமையாகி  விட்டார்கள்.

ஒருபுறம் இதற்கு எதிர்ப்பு கடுமையாக இருந்தாலும், அது பாதிக்கு மேல் மக்கள் ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்ற மனோபாவத்தில்தான் இருக்கிறார்கள்.

அமெரிக்காவில் லிங்கன் கருப்பர்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார். ஒருமுறை அவர் பேசும் போது, நான் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுகிறேன். அதில் உள்ள ஒவ்வொருவரும் பங்கு கொண்டால்தான் நாம் வெற்றி பெற முடியும் என்றார். இறுதியில் அவர் வெற்றி பெற்றார். இது எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும். குடும்ப அமைப்புக்கு எதிராக சீர்குலைக்கும் வகையில் ஏதாவது இருந்தால் அனைவரும் ஒன்று திரண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினால்தான் வெற்றி கிடைக்கும்.