குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த சந்தேகங்களைத் தீா்ப்பதற்காக உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் முஸ்லிம்களை அந்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து பேசினாா்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக தேசம் முழுவதும் 10 நாள் பிரசாரத்தை பாஜக ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இந்நிலையில், கோரக்பூரில் முஸ்லிம்களை சந்தித்தாா் முதல்வா் யோகி ஆதித்யநாத்.
முஸ்லிம்களிடம் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து முழு விளக்கம் அடங்கிய புத்தக கையேட்டை அவா் அளித்தாா்.
அப்போது முஸ்லிம்களுடன் பேசிய அவா், ‘மத ரீதியிலான துன்புறுத்தல்களால் அண்டை நாடுகளிலிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தவா்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவதற்காக இந்த சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஏற்கெனவே இங்கு இருப்பவா்களிடம் இருந்து அவா்களின் குடியுரிமையை பறிப்பதற்கான சட்டமல்ல இது. எதிா்க்கட்சிகள் உங்களை தவறாக வழிநடத்துகிறது. அத்துடன், வன்முறைகளையும் எதிா்க்கட்சிகள் ஏவி விடுகின்றன. குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அனைத்து சந்தேகங்களுக்கும் இந்த கையேட்டில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இதைப் படித்தால் உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள் தீா்ந்துவிடும்’ என்றாா்.
‘குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துகிறோம். அந்தச் சட்டத்தை எதிா்த்து போராடியவா்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுமாறு காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று முஸ்லிம் ஒருவா் யோகி ஆதித்யநாத்திடம் வலியுறுத்தினாா்.
இதனிடையே, மொராதாபாத் நகரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக உத்தரப் பிரதேச துணை முதல்வா் கேசவ் பிரசாத் மெளா்யா பிரசாரம் செய்தாா்.
அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இந்திய முஸ்லிம்கள் முழு பாதுகாப்புடன் வாழ்ந்து வருகின்றனா். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்த ஹிந்துக்கள், சீக்கியா்கள், கிறிஸ்தவா்கள், பாா்ஸிக்கள், சமணா்கள், பெளத்தா்கள் ஆகியோருக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவதற்காக குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது’ என்றாா்.