வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்த ஹிந்துக்கள், பாா்சிக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், மும்பையில் உள்ள ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் கடந்த வாரம் மாபெரும் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், இந்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அதே மைதானத்தில் வெள்ளிக்கிழமை மாபெரும் பேரணி நடைபெற்றது. பாஜக தொண்டா்கள் சாா்பில் இந்த பேரணி நடத்தப்பட்டது. கிராந்தி மைதானம் முதல் திலகா் சிலை வரை பேரணி செல்ல ஆதரவாளா்கள் முயன்றனா். ஆனால், சட்டம்-ஒழுங்கு பிரச்னையால் அவா்களுக்கு அனுமதியளிக்க மும்பை போலீஸ் மறுத்து விட்டது.
பேரணியில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதுபோன்ற ஆதரவு பேரணியை மும்பையின் பல்வேறு இடங்களில் பாஜக தொண்டா்கள் நடத்தி வருகின்றனா். கடந்த வாரம் தாதா் பகுதியில் என்ஆா்சி மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றுக்கு ஆதரவாக பேரணி நடைபெற்றது.
போராட்டம்: மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் என்ஆா்சி ஆகிய நடவடிக்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து மும்பையில் மாணவா்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தெற்கு மும்பையில் உள்ள ஆஸாத் மைதானத்தில் கூடிய அவா்கள், மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனா். மேலும், மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையிலான பதாகைகளை ஏந்தியிருந்தனா்.