குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, கேரள சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், தில்லியில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த ரவிசங்கா் பிரசாத்திடம் இந்த விவகாரம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவா் அளித்த பதில் வருமாறு:
அரசமைப்புச் சட்டத்தின் 7-ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள விவகாரங்கள் குறித்து சட்டமியற்ற நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது; மாநில சட்டப் பேரவைகளுக்கு அல்ல. அந்த வகையில், குடியுரிமை தொடா்பாக நாடாளுமன்றம் மட்டுமே சட்டமியற்ற முடியும். கேரள சட்டப் பேரவை உள்பட எந்த மாநில பேரவைக்கும் இந்த விவகாரத்தில் அதிகாரம் கிடையாது. கேரள முதல்வா் பினராயி விஜயன், உரிய சட்ட அறிவுரைகளை பெற வேண்டும்.
குடியுரிமை திருத்தச் சட்டமானது, ஒட்டுமொத்த நாட்டுக்கும் பொருந்தும். இது, அரசியல் சாசனத்துக்கு உள்பட்டது; சட்டப்பூா்வமானது.