குஜராத், உ.பி, தெலங்கானாவிலிருந்து தமிழகத்துக்கு போதை பொருட்கள் கடத்தல்

குஜராத், உத்தர பிரதேசம், தெலங்கானா மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை ஒத்தக்கடை ஐயப்பன் நகர் பகுதியில் கடந்த ஏப். 22-ல் பணி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த கான்முகமது என்பவரை 7 பேர் போதையில் கடுமையாகத் தாக்கினர். ஒத்தக்கடை பகுதியில் காவல் துறைக்குத் தெரிந்தே கஞ்சா விற்கப்படுகிறது.

எனவே, ஒத்தக்கடை ஐயப்பன் நகர் மற்றும் நீலமேக நகர் பகுதியில் போலீஸ் அவுட்போஸ்ட் அமைக்கவும், போதைப் பொருட்கள் மற்றும் மது அருந்தி வாகனம் ஓட்டுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் கஞ்சா விற்பனை தொடர்பாக வெளி மாநிலங்களைச் சேர்ந்த 2,486 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், தமிழகத்தில் கஞ்சா வழக்குகள் பதிவு மற்றும் நடவடிக்கை குறித்து பதில் அளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டனர். இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், ராஜசேகர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் செந்தில்குமார், போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் பயன்பாட்டைத் தடுப்பது தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்களும், போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கஞ்சா வழக்கு தொடர்பாக 2023-ல் ரூ.1.44 கோடி மற்றும் 7,389 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில்தான் மாவட்ட வாரியாக உதவி ஆணையர் அல்லதுதுணைக் கண்காணிப்பாளர் தலைமையில் போதை தடுப்புப் பிரிவுகள் உருவாக்கப்பட்டு, தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் குறைவான அளவிலேயே கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குஜராத், உத்தர பிரதேசம் தெலங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து அதிக அளவில் போதைப் பொருட்கள் தமிழகத்துக்கு வருகின்றன. இவ்வாறுஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிபதிகள், “தமிழக அரசின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. தமிழகத்துக்குள் போதைப் பொருட்கள் நுழைவதைத் தடுக்க போலீஸாருக்கு போதிய பயிற்சிகள் வழங்க வேண்டும். வழக்கில்விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும். விசாரணை தள்ளிவைக்கப்படுகிறது” என்று தெரிவித்தனர்.